
பண்டித ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 12 ஆண்டுகள் தில்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமைக்கு உரியவராகி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய பிரதமர் உரைகளில் இருந்து அவரது இந்த ஆண்டின் சுதந்திர தின உரை பல வகைகளில் வேறுபடுகிறது.
உலக நாடுகள், குறிப்பாக இந்தியா, அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரி அழுத்தங்களாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களாலும் உருவாகி இருக்கும் சவால்களை எதிர்நோக்கும் இக்கட்டான காலகட்டத்தில் உற்சாகம் ஊட்டுவதாகவும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது பிரதமரின் சுதந்திர தின உரை.
இதுவரையில் இல்லாத அளவில் 103 நிமிடங்கள் நீண்டு நின்ற பிரதமரின் 12-ஆவது சுதந்திர தின உரையின் அடிநாதமாக ஒலித்தது என்னவோ தற்சார்பு என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. 2047-இல் வல்லரசுகளுக்கு இணையான நல்லரசாக வளர்ச்சி அடைந்த பாரதம் உயர்வதற்கான தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களை முன்வைத்து தனது அரசு நகர்கிறது என்பதைச் செயல்படுத்தும் விதத்தில் அமைந்தது பிரதமர் உரை.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பேரிடரைப் பெயர் குறிப்பிடாமல் அவர் தனது உரையில் குறிப்பிடத் தவறவில்லை. உலகளாவிய அளவில் நாடுகள் தங்களது சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியா தனது தற்சார்பை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம் என்பதை அவர் வலியுறுத்தியதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
போர் விமான என்ஜின்களில் தொடங்கி பாதுகாப்பு, எரிசக்தி, மருந்து-உரத் தயாரிப்பு என அனைத்துத் துறைகளிலும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதுதான் தற்சார்பு நோக்கத்தில் பயணிக்கும் இந்தியாவுக்கான மோடி அரசின் உறுதிமொழி. "ஒரு நாடு பிற நாடுகளைச் சார்ந்திருந்தால் அதன் சுதந்திரம் கேள்விக்குறியாகும். தற்சார்பு குறைந்தால் திறன் குறையும். வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளம் மட்டுமல்ல; நமது சுயமரியாதைக்கும் அடிப்படை தற்சார்பு' என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டது, மறைமுகமாக அமெரிக்காவின் அழுத்தங்களுக்கான பதிலடி என்றுதான் கொள்ள வேண்டும்.
விண்வெளி ஆய்வு, மாசில்லாத புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, நுண்ணாய்வுக் கனிமங்கள்(கிரிட்டிக்கல் மினரல்ஸ்), தடுப்பூசிகள், மருந்துகள் மையமாக மாறுவதன் மூலம்தான் இந்தியா தனது தற்சார்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி 2047-இல் "வளர்ந்த இந்தியா' என்கிற இலக்கை எட்ட முடியும் என்பது அவரது உரையின் குறிப்பிடத்தகுந்த அம்சம்.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதிக்கே பட்ஜெட்டில் பெரும் பங்கு செலவிடப்படுகிறது. கடல் படுகையிலும், ஆற்றுப் படுகையிலும் எண்ணெய் எரிவாயு வளங்களைக் கண்டறிய தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார். தனியார் துறையின் துணையோடு குறைந்த விலையில் தரமான பொருள்களைத் தயாரித்து உலகச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்கிற தற்சார்புகளையும் செங்கோட்டையிலிருந்து எடுத்து இருக்கிறார் பிரதமர்.
கடந்த 11 ஆண்டுகளில் 40,000 விதிமுறைகளும், 1500 சட்டங்களும் அகற்றப்பட்டு குறு, சிறு, நடுத்தர தொழில்களும், புத்தாக்க முயற்சிகளும் (ஸ்டார்ட் அப்ஸ்) ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதத்தில், நாட்டின் அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தனி பணிக் குழு உருவாக்கப்படும் என்பதும் பிரதமர் விடுத்திருக்கும் செய்தி.
பிரதமரின் சுதந்திர தின உரையில் ஏழு முக்கியமான அம்சங்களைப் பார்க்க முடிகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா பயப்படாது என்பதுடன், பயங்கரவாதத்துக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இந்தியாவின் பார்வையில் வித்தியாசம் இல்லை என்பது பாகிஸ்தானுக்கு விடுத்திருக்கும் செய்தி.
இந்தியாவின் நகரங்களையும், கட்டமைப்புகளையும் பொது இடங்களையும் பாதுகாக்க அடுத்த 10 ஆண்டுகளில் "சுதர்சன சக்ரா' திட்டத்தை உறுதிப்படுத்துவது என்பது இரண்டாவது செய்தி.
மூன்றாவது செய்தி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பதிலடி. இந்தியாவின் விவசாயிகளை எந்தக் காரணம் கொண்டும் தனது அரசு கைவிடாது பாதுகாக்கும் என்கிற உறுதியை அளித்திருக்கிறார். நான்காவதாக முன்பே கூறியதுபோல, தற்சார்பு குறித்த கருத்தும், அதற்கான திட்டங்களும், ஐந்தாவது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் குறித்தும், வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்துமானவை. தனியார் துறை வேலையில் முதன்முறையாகச் சேரும் இளைஞர்களுக்கு இரண்டு தவணைகளாக அரசின் உதவித்தொகை ரூ.15,000 வழங்கப்பட இருக்கிறது.
ஆறாவதாக, தீபாவளி வெகுமதியாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி நான்கு அடுக்கை, இரண்டடுக்கு (5%, 18%) வரிவிதிப்பாக மாற்றுவது. கடைசியாக ஏழாவது செய்தி, திட்டமிட்டு இந்தியாவின் மக்கள்தொகைப் பகுப்பை ஊடுருவல் மூலமும், சட்டவிரோதக் குடியேற்றம் மூலமும் மாற்றும் சதிக்கு எதிரான எச்சரிக்கை.
செங்கோட்டையில் இருந்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் தியாகம் குறித்தும், அதன் நூற்றாண்டைக் கொண்டாடுவது குறித்தும் உரையாற்றும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்லாமல் வேறு யாருக்கு வரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.