
தொலைத்தொடர்பில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது. யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அழைப்பதற்கும், பார்ப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் முடியும் என்கிற அளவில் தகவல் தொலைத்தொடர்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயப்பாடு இல்லை.
அதேநேரத்தில், உலகளாவிய அளவில் தகவல் தொலைத்தொடர்பு காரணமாக ஒருவருக்கு ஒருவர் இடையிலான நேரடித் தொடர்பு என்பது அகன்றிருக்கிறது என்பது மிகப் பெரிய வேதனை. அவரவர் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்பது மட்டுமல்லாமல், பார்த்துக் கொள்வதுமில்லை, சந்திப்பதுமில்லை என்கிற சூழலையும் தகவல் தொலைத்தொடர்பு ஏற்படுத்தியிருக்கும் விசித்திரத்தை என்னவென்று சொல்ல?
குடும்பத்தினரிடையே மட்டுமல்லாமல், நண்பர்கள் மத்தியிலும் சந்தித்து அளவளாவுவது என்பது அரிதாகி, கைப்பேசி மூலமாகவும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் சந்திப்பதும், பேசுவதும் வழக்கமாகிவிட்ட அவலத்தை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் எதிரெதிர் வீட்டில் இருந்தாலும்கூட, யார்} எவர் என்று தெரியாமல் வாழ்ந்துவரும் நகர்ப்புற சூழல் சமூக கட்டமைப்பையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. உறவினர்கள்கூட அரிதாக திருமண நிகழ்வுகளிலும், துக்கங்களிலும், அவ்வப்போது திருவிழாக்களிலும் மட்டுமே சந்திக்கிறார்கள்.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிற நிலையில் இருந்து மாறி, ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாக இயங்கிவரும் இன்றைய சூழலுக்கு அறிவியல் வளர்ச்சியும், தகவல் தொலைத்தொடர்பும் காரணமாகி இருக்கின்றன. திருமணங்களேகூட யூடியூப் திருமணங்களாக மாறி, அவரவர் வீடுகளுக்கு திருமண விருந்தை செயலிகள் மூலம் அனுப்பிக் கொடுக்கும் (அ)நாகரிகம் அரங்கேறும் காலம் இது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும்கூட தனிமை என்பது மிகப் பெரிய கொடுமையாக மாறியிருக்கிறது. கணவன், மனைவியானாலும், பெற்றோரும் குழந்தைகளுமானாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசிக் கொள்ளாமலும் ஒரே வீட்டில் குடியிருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், தனிமையின் கொடுமை அதிகரித்திருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது?
உலகில் ஆறில் ஒருவர் தனிமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் நூறு பேர் தனிமை காரணமாக மனம் வெதும்பி உயிரிழக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி ஆண்டுதோறும் உலகளாவிய அளவில் 8 லட்சத்து 71 ஆயிரம் பேர் தனிமைத் துயரம் தாளாமல் உயிரிழக்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் சமூகப் பிணைப்பு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆணையத்தின் அறிக்கை சமூகப் பிணைப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே மனித இனம் ஆரோக்கியமாகவும், நீண்ட நாளும் வாழ முடியும் என்று தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி தனிமை என்பது எந்தவொரு வயதுப் பிரிவினரையும் விட்டுவிடாமல் அனைவரையுமே பாதித்திருக்கிறது.
குறிப்பாக, குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினரையும், அதிகம் வளர்ச்சியடையாத நடுத்தர பொருளாதார நாடுகளிலும்தான் தனிமையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். வயதுப் பிரிவினர் என்று எடுத்துக்கொண்டால், வயதானவர்களில் மூன்றில் ஒருவரும், பதின்ம பருவத்துக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவரும் தனிமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 13 வயது முதல் 29 வயது வரை ஆனவர்களில் 17% }21% வரை தனிமையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதுப் பிரிவினர்.
குறைந்த வருவாய் அல்லது வளர்ச்சியடையாத நாடுகளில் 24% மக்கள் தனிமை பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்றால், வளர்ச்சியடைந்த நாடுகளில் சுமார் 11% பாதிப்பு காணப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இனச் சிறுபான்மையினர் உள்ளிட்டோர் சமூகப் புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களால் முடிவதில்லை.
சிறுவர், சிறுமிகளும், பதின்ம வயதினரும், இளம் பருவத்தினரும் சமூக ஊடகங்களில் தங்களது கைப்பேசி, கைக்கணினி, மடிக்கணினிகளில் மூழ்கிவிடுவதால் சமூகப் பிணைப்பு மட்டுமல்ல, குடும்பப் பிணைப்பும் அற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள். விளையாட்டு, வெளிப்புற பொழுதுபோக்கு, நண்பர்களுடன் நேரடிச் சந்திப்பு என்பவை அறவே இல்லாமல் ஆகும்போது அதன் அடுத்தகட்டமாக தனிமை அவர்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தப்படுவது உடல்நிலையைப் பாதிப்பதுடன் கல்வி, வருமானம் ஆகியவற்றையும் பாதிக்கிறது. மது அருந்துதல், போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் நாட்டத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக பக்கவாதம், இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய், எதிர்பாராத திடீர் மரணம், மனநோய் பாதிப்பு உள்ளிட்டவை அவர்களை ஆட்கொள்கின்றன.
இணையம் உலகை இணைத்திருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு இணையம் சமூகப் பிணைப்பை சிதைத்திருக்கிறது என்பதும் உண்மை. தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும்; ஆனால், அது மனிதன் என்கிற சமூக விலங்கை, தனிமைச் சிறையில் அடைக்கவும் முற்பட்டிருக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.