பாதை தவறுகிறோம்...

தவறான பாதையில் நாம் நடைபோடுகிறோம் என்பதன் அறிகுறிதான் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைக் கலாசாரமும், வன்முறை செயல்பாடுகளும்!
பாதை தவறுகிறோம்...
Published on
Updated on
2 min read

உத்தரகண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 21) நடந்த சம்பவத்தில், தனது கன்னத்தில் அறைந்த ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார் 9-ஆம் வகுப்பு மாணவர். தோளில் குண்டு பாய்ந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 14 வயது மாணவரைக் கண்டிக்கும் விதமாக, அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக ஆசிரியர் தண்டனை அளித்துள்ளார். ஆனால், ஆசிரியரைப் பழிதீர்க்கும் விதமாக நடந்துகொண்டுள்ளார் அந்த மாணவர். அதற்காகத் திட்டமிட்டு, தனது உணவு பாத்திரத்தில் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு வந்து வகுப்பறையில் ஆசிரியரைச் சுட்டுள்ளார். உரிய விசாரணைக்குப்பிறகு அந்த மாணவர் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தகைய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வெளிநாடுகளில் அடிக்கடி நடப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது நமது நாட்டிலும் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி இருப்பது மட்டுமல்ல, மாணவர்கள் வரையில் வந்திருப்பது கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்டிருக்கிறார். பள்ளிக்குத் தாமதமாக வந்ததுடன், வகுப்பறைக்கு வெளியே நடமாடிக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களைக் கண்டித்தபோது மதுபோதையில் இருந்த அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் ஆசிரியரைத் தாக்கியதாக தெரிகிறது.

ஆசிரியர் தொடர்ந்து அறிவுரை கூறி வந்ததால், அவரைப் பழி தீர்க்கும் விதமாக மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதுமே நடைபெறுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய போக்கு.

இன்றைய தலைமுறை மாணவர்களில் பலர், ஆசிரியர்கள் அறிவுரை கூறுவதை விரும்புவதில்லை. பொதுவாக, பெற்றோருக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் குரு ஸ்தானத்தில் இருந்து மாணவர்களுக்கு அறிவுரை கூற முற்படுகிறார்கள். மாணவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களை அறநெறிப்படுத்தும் வழிகாட்டிகள் அவர்கள்.

போதைப்பொருள்கள் புழக்கம், அவற்றின் நடமாட்டம், பள்ளிகள் வரையில் விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்தே கஞ்சா, போதைப்பொருள்கள் விற்பனை பெருமளவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மது அருந்தும் பழக்கத்தால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து, பல குடும்பங்கள் சீரழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்துடன் மது, போதைப் பழக்கத்தால் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதாகவும் அன்றாடச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் போதைப்பொருள்கள் பயன்பாட்டாலும், பிற காரணங்களாலும் பாதை தவறும் மாணவர்களை அதிலிருந்து மீட்கும் நல்லெண்ணத்துடன் ஆசிரியர்கள் அறிவுரை கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே ஆசிரியர்களின் நோக்கமாக இருக்க முடியும். சுமாராகப் படிக்கும் மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, அவர்களை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும் என்கிற பொறுப்புணர்வின் காரணமாகத் தான் மாணவர்களைக் கண்டிக்கின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

இந்தப் பொறுப்புணர்வு பெற்றோருக்கும் இருக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தையைப் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேசி நேரத்தைச் செலவிட வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே ஆசிரியர்களையும் பெரியோரையும் மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிப்பருவத்தில் ஆசிரியர்-மாணவர் உறவு என்பது, தாய்-பிள்ளை உறவு போன்றதாகும். ஒரு தாய் எப்படி தன் பிள்ளையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாரோ, அதேபோன்றதொரு அக்கறையை ஆசிரியர் செலுத்துகிறபோது ஆசிரியர்-மாணவர் இடையேயான உறவு வலுப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இந்த உறவு, கல்வி வெற்றிக்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாற்பட்ட பல நன்மைகள் பலவற்றையும் வழங்குகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும், கல்வி வணிகமயமானதால் ஏற்பட்டிருக்கும் சூழலும், ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்திருக்கின்றன. கணினி மயமும் இணையமும் ஆசிரியர்களின் பங்களிப்பை வெகுவாகக் குறைத்திருக்கின்றன. போதாக்குறைக்கு, தனிப் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல்களாகக் கிளம்பி இருக்கின்றன. இவை எல்லாம், கல்வி என்பது நல்லொழுக்க வாழ்க்கைக்கானதாக அல்லாமல் பொருள் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாறி இருக்கிறது.

இறை சிந்தனை இல்லாததால் தீவினை அச்சம் அகன்று விடுவதும், நன்னெறி போதனை இல்லாததால் ஒழுக்கம் ஓம்பப்படாமல் புறக்கணிக்கப்படுவதும், சாத்விகக் குணங்கள் போற்றப்படாததால் வன்முறைக் கலாசாரம் தலைதூக்குவதும் ஆரோக்கியமான போக்கு அல்ல. தவறான பாதையில் நாம் நடைபோடுகிறோம் என்பதன் அறிகுறிதான் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைக் கலாசாரமும், வன்முறை செயல்பாடுகளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com