
பல நூற்றாண்டுகள் கடந்தும் கல்லால் கட்டப்பட்ட கோயில்களும், கோபுரங்களும், கோட்டைகளும் இன்னும்கூட வலுவாக காலத்தைக் கடந்து வரலாற்று அடையாளங்களாகத் திகழ்கின்றன. ஆனால், கடந்த 150 ஆண்டுகளில் பொறியியல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு கட்டப்படும் கட்டடங்களும், பாலங்களும் தகர்வதும், வலுவிழந்து காணப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது.
உலகளாவிய அளவில் கட்டடங்கள் இடிந்து விழுவதும், பாலங்கள் வெள்ளப் பெருக்கின்போதும், பெருமழைக் காலங்களிலும் அடித்துச் செல்லப்படுவதும் நிகழாமல் இல்லை. ஆனால், இந்தியாவில் அண்மைக்காலமாகப் பாலங்கள் தகர்வது என்பது தொடர் நிகழ்வாகவே இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. கட்டுமான முறையில் தவறா அல்லது கட்டுமான முறைகேட்டால் ஏற்படும் விளைவா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல இடங்களில் ஆறுகள் மீதான பாலங்களும், சாலைகளின் மீதான மேம்பாலங்களும் இடிந்து விழுவது அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன எனும்போது இந்தப் போக்கு குறித்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
இடிந்து விழும் பாலங்கள் எல்லாமே பயன்பாட்டில் இருக்கும் பாலங்கள் என்று சொல்ல முடியாது. பழுதடைந்த பலவீனமான பாலங்களும், பணி நடந்து கொண்டிருக்கும் முழுமையாகக் கட்டப்படாத பாலங்களும்கூட அதில் அடங்கும். பாலக் கட்டுமானத்தில் கட்டமைப்புப் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த கவனக்குறைவு நாடு தழுவிய அளவில் காணப்படுவதன் வெளிப்பாடாகத்தான் இந்தப் போக்கை நாம் பார்க்கத் தோன்றுகிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பக இணையதளத்தில் இருந்தும், அரசுகளின் அறிவிப்புகளில் இருந்தும் சில தரவுகளைப் பெற முடிகிறது. 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் 120 முதல் 150 பாலங்கள் தகர்ந்திருக்கக்கூடும் என்று அதிலிருந்து தெரிகிறது. இதில் கட்டி முடிக்கப்பட்டவையும், கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவையும் அடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-25) மட்டும் குறைந்தது பயன்பாட்டில் உள்ள 15 பாலங்களும், கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் 11 பாலங்களும் தகர்ந்திருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் 130-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு அந்த அளவிலான பெரும் விபத்து ஏற்படாவிட்டாலும்,
ஆங்காங்கே பாலங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவதும், இடிந்து விழுவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இணைகிறது இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நிகழ்ந்த விபத்து.
புணே மாவட்டத்தில் இந்திரயானி நதியின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நான்கு பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து மூன்று நாள்களே ஆகியிருந்ததால், இந்த விபத்து தேசிய அளவில் கவனம் பெறவில்லை. அதுமட்டுமல்ல, பாலங்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்துக்கும் அந்த விபத்து வழிகோலவில்லை.
இரும்பும், கான்கிரீட்டும் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரிட்டிஷ்காலக் கட்டுமானம் அது. இந்திரயானி நதியின் மீது கட்டப்பட்ட அந்த தரைப் பாலம் பாதுகாப்பற்றது என்று அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இந்திரயானி நதியின் அழகையும், ஆர்ப்பரிப்பையும் வேடிக்கைப் பார்க்க அதன் மீது சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கூடியதுதான் விபத்துக்குக் காரணமாக மாறியது.
ஒரு வாரத்துக்கு முன்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இந்திரயானி நதியின் மீதான நடைபாலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. அதையும் மீறி, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் அந்த நடைப்பாலத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை காவல் துறையும், நகராட்சி அமைப்பும் சட்டை செய்யாமல் வேடிக்கைப் பார்த்திருக்கிறது. அறிவிப்புப் பலகை வைப்பதுடன் கடமை முடிந்து விட்டது என்று நினைத்தார்களோ என்னவோ...
இந்திரயானி நதியின் மீதான நடைப்பால விபத்து முந்தைய விபத்துகளைப் போலவே உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையையும், அசிரத்தையையும் வெளிச்சம் போடுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக முன்னெடுப்பதும், சமரசத்துக்கு இடமில்லாமல் தடையை நடைமுறைப்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
தொடர்ந்து காணப்படும் பாலங்கள் இடிந்து விழும் போக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். உத்தர பிரதேச அரசு மேற்கொண்ட ஆய்வில் அந்த மாநிலத்தில் 70 பாலங்களும், உத்தரகண்ட் அரசின் ஆய்வில் 36 பாலங்களும் பாதுகாப்பற்றவை என்று தெரியவந்தது. அப்படி இருந்தும் அவை பயன்பாட்டில் இருக்கின்றன.
பயன்பாட்டுக் காலம் முடிந்தும்கூட இந்தியாவில் பல பாலங்கள் செப்பனிடப்படாமலும், புதிதாகக் கட்டப்படாமலும் தொடர்கின்றன. தேசிய அளவில் பாதுகாப்பற்ற பாலங்கள் எத்தனை இருக்கின்றன?; அவை எவை என்கிற கணக்கு எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் உள்ள பாலங்களில் நான்கில் ஒன்று பாதுகாப்பற்றது என்று கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் போல எல்லா மாநிலங்களிலும் பாதுகாப்பற்ற பாலங்கள் குறித்த கணக்கெடுப்பை உடனடியாக முன்னெடுத்து, புதிய பாலங்களைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.