
விளையாட்டு நிர்வாகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்க மருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதா 2025 ஆகியவை மத்திய அரசால் இயற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தேசிய விளையாட்டு வாரியம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அரசின் நிதி உதவி பெறும் எல்லா விளையாட்டு அமைப்புகளும் அதன் அங்கீகாரம் பெற வேண்டும். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வாரியத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைப்புகளின் தேர்தல்கள், செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையே நீடிக்கிறது. இவற்றில் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு முன்னுரிமை கொடுக்காமல் நிர்வாகிகள் தங்கள் சுயநலத்தையே பிரதானப்படுத்தி அரசியல் செய்கின்றனர்.
விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளிடையே எழும் சிறு பிரச்னைகளுக்குக்கூட நீதிமன்றத்தை நாடுவதால் நிர்வாகம் செயலிழந்து விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். விளையாட்டு தொடர்பான 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதுதவிர, கடந்த 2022-இல் 125 பேரும், 2023-இல் 213 பேரும், 2024-இல் 260 பேரும் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பலன் அளிக்க வேண்டும் என்றால் விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அரசியல்வாதிகளின் தலையீட்டைக் குறைக்க வேண்டும். நமது நாட்டைப் பொருத்தவரை, கோடிகளில் புரளும் பணம், அதிகாரம், அரசின் செலவில் வெளிநாட்டுப் பயணங்கள், சமூக அந்தஸ்து காரணமாக கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.
இதிலும் வாரிசு அரசியல் தொடர்கிறது.
பாஜகவைச் சேர்ந்த மறைந்த அருண் ஜேட்லி தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் இருந்துள்ளார். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிகார் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா 2001 முதல் 2011 வரை மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதான வழக்கில் சிக்கி உள்ளார்.
காங்கிரஸின் என்கேபி சால்வே, மாதவ ராவ் சிந்தியா, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், பாஜகவின் அனுராக் தாக்குர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களாக இருந்துள்ளனர். சுரேஷ் கல்மாடி, விஜய் மல்ஹோத்ரா, அபய் சிங் செüதாலா, ஜனார்தன் சிங் கெலாட் போன்றவர்கள் விளையாட்டு அமைப்புகளின் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கினர்.
இப்போதும்கூட, பாஜகவைச் சேர்ந்த கல்யாண் செüபே அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவராகவும், அஸ்ஸôம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா இந்திய பாட்மின்டன் சங்கத் தலைவராகவும், தமிழகத்தைச் சேர்ந்தவரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகப் பிரமுகருமான ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவராகவும் உள்ளனர்.
ஹரியாணாவின் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செüதாலா தனக்குப் பிறகு தனது மனைவி மேக்னா அலாவத்தை இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளார். பாலியல் புகாருக்கு உள்ளான பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங், வீரர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் அவரது ஆதரவாளரான சஞ்சய் சிங் என்பவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கபடி நிர்வாகம் தொடர்பான வழக்கில் அரசியல்வாதிகளும், முன்னாள் அரசு அதிகாரிகளும், முன்னாள் நீதிபதிகளும் விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளாக இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த அமைப்புகள் விளையாட்டு வீரர்களாலேயே நிர்வகிக்கப்படுவதுதான் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
புதிய மசோதாவின்படி, விளையாட்டு அமைப்புகளின் தேர்தலில் சர்வதேச அமைப்பு அனுமதித்தால் மட்டுமே 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட முடியும். ஆனால், அந்த வயதுவரம்பு தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே பொருந்தும். நிர்வாகக் குழுவில் அதிகபட்சம் 15 பேர் மட்டுமே இருக்க முடியும். அதில் குறைந்தது நான்கு பெண்களும் இரண்டு பிரபல விளையாட்டு வீரர்களும் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒருவர் மூன்று முறைதான் தொடர்ந்து போட்டியிட முடியும் என்கிற விதிமுறை நகைப்புக்குரியது. நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மூன்று முறை அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனும்போது அது வெறும் கண்துடைப்பாகத் தெரிகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் பினாமிகளை நான்காண்டு இடைவெளியின்போது பதவியில் அமர்த்தி பின்னணியிலிருந்து செயல்படுவார்கள், அவ்வளவே.
எல்லா விளையாட்டு அமைப்புகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கு பல்லாயிரம் கோடிகளில் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்ததால், அரசின் நிதி உதவி பெறும் விளையாட்டு அமைப்புகள் மட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்று மாற்றப்பட்டுள்ளது என்பது புலியை விட்டுவிட்டு எலியைப் பிடிக்கும் பரிதாபம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.