இதற்கொரு முடிவு எப்போது?

சாலை அமைப்பதற்கான செலவு உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி...
இதற்கொரு முடிவு எப்போது?
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 40 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.25 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்றுமுதல் (செப்.1) கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

2008-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில்தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறுவதுபோல கட்டண வசூலிலும், கட்டண உயர்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. சாலை அமைப்பதற்கான செலவு எவ்வளவு, கட்டண வசூல் மூலம் பெறப்பட்டிருக்கும் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வசூலிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச் சாவடிதான் இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி பார்த்தால், தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போதோ 78 சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திலுள்ள 48 சுங்கச் சாவடிகளில் 32 மூடப்படும் என்றும், 16 மட்டுமே செயல்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஒரு சுங்கச்சாவடிகூட மூடப்படவில்லை என்பது மட்டுமல்ல, புதிதாக 34 சுங்கச் சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை; மத்திய அரசு சட்டை செய்யவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடிதான் இருக்க வேண்டும் என்கிற விதியின் அடிப்படையில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சுங்கச் சாவடி கட்டணப் பிரச்னையில் மக்களை ஏமாற்றுகிறது.

நெடுஞ்சாலைகள் அமைக்க செய்யப்பட்ட முதலீடு வட்டியுடன் எடுக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட சாலைகளில், நியாயமாகப் பார்த்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், முதலீடுகள் எடுக்கப்பட்ட பிறகும்கூட பராமரிப்பு என்கிற பெயரில் சுங்கக் கட்டணம் தொடர்கிறது. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கக் கட்டணம் நிரந்தரமாகிவிட்டது என்பதுடன், ஆண்டுக்கு ஆண்டு கட்டணமும் உயர்த்தப்படுகிறது என்பதைக் கேள்வி கேட்பாரில்லை.

நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களில் 60% முதலீட்டை ஈடு செய்வதற்காகவும், மீதமுள்ள 40% பராமரிப்புக்காகவும் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான கட்டண நெடுஞ்சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலீட்டை எடுத்த பிறகு சுங்கக் கட்டணத் தொகை 60% குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கப்படுகிறதே, அது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வி எழுகிறது.

2014-இல் நாடு தழுவிய அளவில் 366 சுங்கச் சாவடிகள்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்தன. இப்போது, இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 1,550 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2023-24-இல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சுங்கக் கட்டண வசூல் ரூ.64,809 கோடி. கடந்த 2022-23-ஐ விட இது 35% அதிகம்.

தேசிய நெடுஞ்சாலைகள் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) 2008-இன் கீழ் 60 கி.மீ. இடைவெளியில் மட்டுமே சுங்கச்சாவடிகள் நிறுவப்பட வேண்டும் என்கிற விதி பல இடங்களில் மீறப்படுவது மட்டுமல்லாமல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள் கட்டணம் வசூல் செய்வது தொடர்கிறது.

சாலைகள் அரைகுறையாகப் போடப்பட்ட நிலையிலும்கூட கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதிகாரபூர்வமற்ற முறைகளில் கட்டணம் வசூலிப்பதும் ஏன் கண்காணிக்கப்படவில்லை என்று பல நீதிமன்றங்கள் கேள்விகளை எழுப்புகின்றன.

நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு பெரிய அளவிலான முதலீடு தேவை என்பதையும், கட்டண வசூல் மூலம் ஈடுகட்டுவதில் தவறில்லை என்பதையும் பொதுமக்கள் உணராமல் இல்லை. அதேநேரத்தில் முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகளில் கட்டணம் வசூலிப்பதும், ஒப்பந்தம் முடிந்த பிறகும் கட்டண வசூல் தொடர்வதும் ஒப்பந்ததாரர்களைப் பணக்காரர்களாக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு உதவுவதாக இருக்காது.

முறையாகப் பராமரிக்காத சாலைகள் குறித்து உடனடியாகப் புகார் தெரிவிக்கவும், அப்படிப்பட்ட சுங்கச் சாவடிகளில் உடனடி கட்டண வசூல் ரத்துக்கு வழிகோலவும் நுகர்வோர் குறைதீர்வு அமைப்பு அவசியம். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் பொதுமக்கள், சரக்கு வாகன உரிமையாளர்கள், மக்கள்

பிரதிநிதிகள் உள்ளிட்ட குறைதீர் குழு ஒன்று ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கும் அமைக்கப்படுவது அவசியம். அவர்கள் கட்டுப்பாட்டில்தான் சுங்கச் சாவடி கட்டண வசூல் நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் சுங்கக் கொள்ளையாக மாறிக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தக் கொள்ளையை அங்கீகரித்து ஊக்குவிப்பது மக்கள் விரோதப் போக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com