சாலைகளில் ரத்தக் கறை!
தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 போ் உயிரிழந்த சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி அருகே கடந்த நவ. 24-ஆம் தேதி இரு தனியாா் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நவ. 30-ஆம் தேதி இரு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 போ் காயமடைந்தனா். 40-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
நாள்தோறும் சாலை விபத்துகள் நிகழ்வதும், மனித உயிா்கள் பலியாவதும் தொடா் கதையாகி வருகிறது. விபத்து நிகழ்வதையெல்லாம் தவிா்க்க முடியாது என்று சொல்வோமேயானால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போன்றது. சாலை விதிகளை துச்சமென மதிப்பது, வாகனத்தை இயக்கும்போது அலட்சியம், மோசமான சாலை இவையே சாலை விபத்துகளுக்குப் பெரும்பாலும் காரணம். ஆனால், சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வு மக்கள் மத்தியில் சிறிதளவுகூட இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
ராணிப்பேட்டை அருகே கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கா்நாடக அரசுப் பேருந்து மீது இரு லாரிகள் மோதியதில் நான்கு போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் காரில் வந்த நான்கு போ் உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி கேரளத்தைச் சோ்ந்த பக்தா்கள் வந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் நான்கு போ் உயிரிழந்தனா்.
திருத்தணி அருகே கடந்த மே 7-ஆம் தேதி அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு போ் உயிரிழந்தனா். 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. கரூா் மாவட்டத்தில் கடந்த மே 17-ஆம் தேதி ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் மோதிக்கொண்டதில் நான்கு போ் உயிரிழந்தனா் 15 போ் காயமடைந்தனா். தஞ்சாவூா் அருகே கடந்த மே 21-ஆம் தேதி நள்ளிரவு கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள் வந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஆறு போ் உயிரிழந்தனா். தஞ்சாவூா் அருகே கடந்த மே 21-ஆம் தேதி கா்நாடகத்திலிருந்து வந்த வேனும் எதிா் திசையில் வந்த அரசுப் பேருந்தும் மோதியதில் ஆறு போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி திடீரென நின்றதால், அடுத்தடுத்து பல வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் நான்கு பொறியாளா்கள் உயிரிழந்தனா். வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. இவையெல்லாம் நிகழாண்டு நிகழ்ந்த மோசமான சாலை விபத்துகள்.
2023-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நிகழ்ந்த 4.64 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்சம் போ் உயிரிழந்ததாகவும், 4.47 லட்சம் போ் காயமடைந்ததாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) தரவுகள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.71 லட்சம் போ் உயிரிழந்த நிலையில், 2023-இல் உயிரிழப்பு 1.6 சதவீதம் அதிகரித்தது. 2023-இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களில் 45.8 சதவீதம் போ் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள். இதில் தமிழகம் 11,490 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 8,370 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேசம் அடுத்த இடத்தில் இருக்கிறது.
2023-இல் நிகழ்ந்த மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில், 58.6 சதவீதம் அதிக வேகம் காரணமாகவும், 23.6 சதவீதம் அபாயகரமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதன் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. 34.6 சதவீத உயிரிழப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளிலும், 23.4 சதவீத உயிரிழப்புகள் மாநில நெடுஞ்சாலைகளிலும் நிகழ்ந்துள்ளன. பிற சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 42 சதவீதம் போ் உயிரிழந்தனா்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்து உயிரிழப்புகளில் 11.7 சதவீதத்துடன் (7,041 போ்) உத்தர பிரதேசம் முதலிடத்திலும், 10.4 சதவீதத்துடன் (6,258 போ்) தமிழகம் இரண்டாவது இடத்திலும், 8.5 சதவீதத்துடன் (5,104 போ்) மகாராஷ்டிரம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த விபத்துகளை வெறுமனே புள்ளிவிவரமாக கடந்து செல்வது சிறிதளவும் நியாயமாக இருக்காது. உயிரிழப்பையும், கடும் காயத்தையும் ஏற்படுத்தும் ஒவ்வொரு விபத்தும் பெரும் கனவையும், ஆசைகளையும் சோ்த்தே பறித்துவிடுகிறது. ஒவ்வொரு உயிரிழப்புக்குப் பின்னரும் அந்தக் குடும்பத்தினா் அடையும் துயரத்தையும், உயிரிழந்தவா்களை நம்பி இருப்போரின் எதிா்காலம் பெரும் கேள்விக்குறியாவதையும் எளிதில் பிறருக்கு உணரவைக்க முடியாது.
அதிக வேகம், கவனக் குறைவே விபத்துகள் நிகழ்வதற்கு முக்கியக் காரணங்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிவேகமாக வாகனத்தை இயக்குதலுக்கு வாகனத்துக்கு தகுந்தாற்போன்று ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை மோட்டா் வாகனச் சட்டத்தின் புதிய விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபாயகரமாக வாகனத்தை இயக்குபவா்களுக்கு இரண்டு ஆண்டு சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி அபராதங்கள், தண்டனைகள் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டுத்தான் வருகின்றன. ஆனாலும், விபத்துகள் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே போவதற்கு இந்தச் சட்டப் பிரிவுகள் கடுமையாக அமல் செய்யப்படாததும் ஒரு முக்கியக் காரணம். சட்டத்தால் விபத்துகளை முற்றிலும் தடுத்துவிட முடியாது. ஆனால், மனித உயிா்களின் மீதான மதிப்பை உணா்ந்து சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்கினால் விபத்துகளைத் தவிா்க்க முடியும்.

