முதலீடல்ல, முதலுக்கே மோசம்!

உலகின் பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாறும் முனைப்பில் இந்தியா துடிப்புடன் முன்னேறி வருகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
2 min read

உலகின் பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாறும் முனைப்பில் இந்தியா துடிப்புடன் முன்னேறி வருகிறது. உலகில் அதிக அளவிலான உழைக்கும் வயதினர் உள்ள நாடு என்பதால், இந்தியாவின் எதிர்காலம் குறித்து அனைத்து சர்வதேச அமைப்புகளும் பெரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றன. ஏனைய உலக நாடுகள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகள் காரணமாகத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட நாம் சமாளிக்க முடிந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய வெற்றி.

வளர்ச்சி பெற்ற நாடாகவும், வலிமையான பொருளாதாரமாகவும் இந்தியா மாற வேண்டும் என்றால், உழைக்கும் வயதினரான இந்தியரின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். அதேபோல, வருமானத்தின் கணிசமான பங்கை மருத்துவச் செலவுகள் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மருந்து உற்பத்தியில் "தரவுத் தனி உரிமை' (டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி) வரன்முறைக்கான முனைப்புகளை, மத்திய வர்த்தக அமைச்சகம் முன்னெடுப்பதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதைத் தயாரித்துச் சந்தைப்படுத்துதலுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, அதன் மருத்துவப் பரிசோதனைத் தரவுகளை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த முடியாமல் பாதுகாக்கும் காலத்தைத்தான் "தரவுத் தனி உரிமை' என்று அழைக்கிறார்கள். பிற நிறுவனங்கள் அதே தரவுகளைப் பயன்படுத்தி, புதிய மருந்துகளுக்கு அங்கீகாரம் பெறாமல், சந்தைப்படுத்துவதைத் தடுப்பதுதான் "டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி'யின் நோக்கம்.

தரவு உரிமை ("டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி') என்பது காப்புரிமையில் இருந்து மாறுபட்டது. இது ஒருவிதமான சந்தை உரிமையை வழங்குகிறது; மருந்துக் காப்புரிமை பாதுகாப்பின் மறு வடிவம் என்று கொள்ளலாம். பன்னாட்டு மருந்துகள் பெரும்பாலும் காப்புரிமையையும், "டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி'யையும் பெற்றவை.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த உரிமையைக் கோர முடியாது. பல சிறு, நடுத்தர மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், வர்த்தகப் பெயருடன் கூடிய அந்த மருந்துகளை தனித்த முத்திரை இல்லாமல் "ஜெனரிக் மருந்துகள்' என்று சந்தைப்படுத்துகின்றன.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள "டிபார்ட்மென்ட் ஃபார் ப்ரொமோஷன் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் இன்டர்னல் ட்ரேட்', சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "சென்ட்ரல் ட்ரக்ஸ் ஸ்டேண்டர்ட் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன்' உள்ளிட்டவை "டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி' குறித்து விவாதிக்கத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. புதிய மருந்துகளுக்குத் தயாரிப்பு அனுமதி வழங்குவதில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள முற்பட்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.

"தரவுத் தனி உரிமை' என்கிற "டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி'-யை இந்தியாவில் புதிதாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு வழங்குவதன் மூலம் அதிக அளவில் அந்நிய முதலீட்டை ஈர்க்க முடியும் என்பது வர்த்தக அமைச்சகத்தின் கருத்து. அதேநேரத்தில், "டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி'யை வழங்கும்போது, அதைப் பயன்படுத்தி மருந்துகளுக்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்து அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் வர்த்தகப் பெயர் இல்லாத மருந்துகள் நான்கில் ஒரு பங்கு விலையில் கிடைக்கின்றன எனும்போது, அதிலிருக்கும் கொள்ளை லாபத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

காப்புரிமை காலகட்டம் தாண்டிய பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகளில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி புதிய மருந்தாகத் தயாரிப்பவர்கள் "தரவுத் தனி உரிமை' பெற்று அதைச் சந்தைப்படுத்தக்கூடும். குறைந்த விலையில் மக்களுக்குத் தரமான மருந்துகள் கிடைப்பது என்ற குறிக்கோளை வர்த்தக அமைச்சகத்தின் இந்த முயற்சி தகர்த்துவிடும் என்கிற விமர்சனங்கள் எழுகின்றன.

இந்தியாவை "உலகின் மருந்தகம்' என்கிற அளவில் உயர்த்தி இருப்பது நமது "ஜெனரிக்' மருந்துத் தயாரிப்புத் துறைதான். வர்த்தகப் பெயர் இல்லாத, மருந்துகளின் அடிப்படைக்கூறுகளைக் கொண்ட "ஜெனரிக்' மருந்துகள் இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பிரதமரின் "மக்கள் மருந்தகம்' என்கிற திட்டமே "ஜெனரிக்' மருந்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிதான் எனும்போது "தரவுத் தனி உரிமை' யோசனை நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறது.

உலகில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் 20% இந்தியாவின் பங்கு என்பது நாம் பெருமைப்பட வேண்டிய வளர்ச்சி. ஏறத்தாழ 200 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டுமே 2,780 கோடி டாலர் மதிப்புள்ள "ஜெனரிக்' மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகி இருக்கின்றன. காப்புரிமைக்கான கெடு முடிந்த மருந்துகளை, அவற்றின் தரம் குறையாமல் தயாரித்து ஜெனரிக் மருந்துகளாக நாம் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தி வருகிறோம்.

ஜெனரிக் மருந்துகள் உள்பட அடிப்படைத் தேவையுள்ள மருந்துகள் குறைந்த விலையில் இந்தியாவில் கிடைத்தும்கூட, மருத்துவச் செலவில் 60% மருந்துகளுக்கான செலவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "தரவுத் தனி உரிமை' பெற்று பல "ஜெனரிக்' மருந்துத் தயாரிப்பாளர்கள், தங்கள் மருந்துகளைச் சந்தைப்படுத்தும் நிலைமை ஏற்பட்டால், மருந்துகளின் விலை நிச்சயமாக அதிகரிக்கும்; அது சாமானியர்களைப் பாதிக்கும்.

எய்ட்ஸ், காச நோய், கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களைக் கட்டுப்படுத்த சாமானியர்களுக்கு ஜெனரிக் மருந்துகள் கைகொடுத்து வருகின்றன. அந்த நிலைமை மாறும்போது, சாமானியர்கள் என்ன செய்வார்கள் என்பதை அரசு யோசிக்க வேண்டும்.

"டேட்டா எக்ஸ்க்ளுஸிவிட்டி' அனுமதித்த எந்த நாட்டிலும் பெருமளவில் அந்நிய முதலீடுகள் குவிந்துவிடவில்லை என்பதும், பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தடுத்துவிடும் என்பதும் அனுபவ உண்மை. வேண்டாம் இந்த விபரீத யோசனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com