அச்சம் அர்த்தமற்றது...

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து கைப்பேசிகளிலும் 'சஞ்சார் சாத்தி' செயலியை முன்கூட்டியே நிறுவுமாறும் மத்திய அரசு உத்தரவு.
சஞ்சாா் சாத்தி செயலி
சஞ்சாா் சாத்தி செயலி
Updated on
2 min read

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து புதிய கைப்பேசிகளிலும் 'சஞ்சார் சாத்தி' செயலியை முன்கூட்டியே நிறுவுமாறும், ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் கைப்பேசிகளில் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் பதிவேற்றுமாறும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் இந்தப் பணிகளை அடுத்த 90 நாள்களுக்குள் முடித்து, 120 நாள்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிய கைப்பேசியை முதன்முதல் இயக்கத் தொடங்கியவுடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி அகற்றவோ, கட்டுப்படுத்தவோ கூடாதவாறு இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது தொலைத் தொடர்பு சட்டம் 2023, தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிமுறைகள் (திருத்தம்) 2024 உள்ளிட்ட பொருந்தக்கூடிய இதர சட்ட விதிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.

இந்தச் செயலி இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது அல்ல. கடந்த 2023-இல் அறிமுகமான இந்தச் செயலி மோசடி அழைப்புகளை அடையாளம் காணவும், தனது பெயரில் வேறு யாராவது 'சிம் கார்டு' பெற்றுள்ளார்களா என்பதைக் கண்டறியவும், கைப்பேசி தொலைந்துவிட்டால் தொலைவில் இருந்தவாறே அதன் செயல்பாட்டை முடக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது. கைப்பேசி மூலமான மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தச் செயலியின் பயன்பாடு அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது.

'சஞ்சார் சாத்தி' என்பது உளவு பார்க்கும் செயலி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குடிமக்களின் தன்மறைப்பு நிலையை (பிரைவசி) பாதிக்கிறது என்பது அவர்கள் வாதம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பும்போது, அதில் மத்திய அரசின் கண்காணிப்பு இருக்கக் கூடாது என்றும் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

'மோசடி' குறித்துப் புகாரளிக்க ஒரு பயனுள்ள அமைப்பு வேண்டும்தான். ஆனால், அது ஒவ்வொரு குடிமகனின் கைப்பேசியிலும் அரசு நுழைவதற்கு காரணமாக அமையக் கூடாது. மத்திய அரசின் 'சஞ்சார் சாத்தி' செயலி குறித்த உத்தரவு சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும், குடிமக்களின் தன்மறைப்பு நிலையைப் பறிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

புதிய கைப்பேசிகளில் 'சஞ்சார் சாத்தி' செயலியை நிறுவும் உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை புதன்கிழமை (டிச.3) திரும்பப் பெற்றுள்ளது, இது குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அச்சத்தை அகற்றுவதும்தான் மத்திய அரசின் எதிர்வினையாக இருக்க வேண்டுமே தவிர முடிவைக் கைவிடுவது வருத்தமளிக்கிறது.

இந்தச் செயலி இதுவரையில் சுமார் 1.50 கோடி கைப்பேசிகளில் பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்பட்டுள்ளதாகவும், திருடு அல்லது தொலைந்துபோன சுமார் 41 லட்சம் கைப்பேசிகள் இந்தச் செயலி மூலம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கும்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பயந்து 'சஞ்சார் சாத்தி' செயலியை அகற்றுவதற்கு அனுமதித்திருப்பது, நல்லதொரு முயற்சியை கைவிடுவதாக அமையும்.

உலகம் முழுவதும் சுமார் 89 லட்சம் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோர் மட்டும் சுமார் 30 லட்சத்து 50 ஆயிரம் செயலிகளையும், ஆப்பிள் ஆப் ஸ்டோர் சுமார் 16 லட்சத்து 40 ஆயிரம் செயலிகளையும் வைத்துள்ளன. இந்தியாவில் ஒரு தனி மனிதர் சராசரியாக 50 செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றில் நாள்தோறும் 9 முதல் 24 செயலிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மத்தியில் அதிகமான பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப், விளையாட்டுச் செயலிகள், நிதி மற்றும் வங்கிப் பரிவர்த்தனை, பொழுதுபோக்கு உள்ளிட்ட எந்தச் செயலியை பதிவிறக்கம் செய்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு பயன்பாட்டாளரின் இருப்பிடம், கைப்பேசியில் உள்ள புகைப்படங்கள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அந்தச் செயலி தெரிந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டியதாக இருக்கிறது. அவை எல்லாம் தனியார் பெரு நிறுவனங்கள் என்பதையும் அவை நமது தகவல்களை எல்லாம் சேகரித்து அவரவர் விருப்பம்போல பயன்படுத்த நாம் அனுமதிக்கிறோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

'சஞ்சார் சாத்தி' செயலி என்பது, குடிமக்களை அரசு உளவு பார்க்கும் ஏற்பாடு என்று விமர்சிக்கும்போது, இன்றைய நிலையில் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் கூடும் பொது இடங்களில் 'மூன்றாவது கண்' (சிசிடிவி) ஒன்று உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. பையில் இருக்கும் கைப்பேசி நம்மைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் எங்கே, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் கைப்பேசி மூலம் கண்டுபிடித்துவிட முடியும்; இவையெல்லாம் ஒருவகை கண்காணிப்பு அல்லது பின் தொடர்தல் என்பதை உணர வேண்டும்.

தன்மறைப்பு நிலை (பிரைவசி) என்பது இன்றைய தொழில்நுட்ப உலகில் எப்போதோ பறிபோய் விட்டது; இதில் உளவு அச்சம் என்பது அர்த்தமற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com