

நீதித் துறை, காவல் துறை அல்லது அரசு அதிகாரிகள்போன்று வேடமிட்டு பொதுமக்களை விடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட உள்ளதாக அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டி பணம் பறிப்பதே எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) எனப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த 28 வயதுப் பெண் சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரைத் தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் பெயரில் வந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளதால் எண்ம கைது செய்யப்போவதாகக் கூறியுள்ளார். பயந்துபோன அந்தப் பெண், மர்ம நபர் மிரட்டியதால் கட்செவிஅஞ்சல் அழைப்பு தொடர்பில் இருந்தபடியே சென்னையில் இருந்து உதகை வரை பேருந்தில் பயணித்து வந்து ரூ.5.5 லட்சத்தை அவர் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்திய பின்புதான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
இதேபோன்று, கோவையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணை 8 நாள்கள் தனி அறையில் இருக்கச் சொல்லி மிரட்டி ரூ.15.90 லட்சத்தைப் பறித்துள்ளனர்.
கோவையில் 65 வயது முதியவரும், அவரது மனைவியும் மூன்று நாள்களாக வெளியே வராததைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வந்துபார்த்தபோதுதான் முதிய தம்பதி எண்ம கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதுபோன்று சாமானிய மக்கள்தான் எண்ம கைதில் சிக்குகின்றனர் என்று கருத வேண்டாம்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2) புது தில்லி சென்றுள்ளார். காலை 10 மணியளவில் மும்பை காவல் துறை அதிகாரி பேசுவதாக அவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரை பயங்கரவாதி எனவும், அவர் மீது 17 வழக்குகள் உள்ளதாகவும் உடனடியாக கைது செய்யப்போவதாகவும் மிரட்டி உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2022-இல் 10.29 லட்சம் எண்ம கைது மோசடி வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2024-இல் 22.68 லட்சம் வழக்குகளாக அதிகரித்துள்ளது. எண்ம கைதால் பாதிக்கப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த தம்பதி அளித்த புகாரையடுத்து, இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மோசடியாளர்கள் அப்பாவிகளை மிரட்டி சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல் பறித்துள்ளதால், இதன் தீவிரத் தன்மையை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் சில உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
எண்ம கைது வழக்குகளை நாடு முழுவதும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், ஜார்க்கண்ட் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும்கூட சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், மோசடியாளர்கள் பொதுமக்களை மிரட்டி பணத்தைப் பறித்தவுடன் அந்தப் பணம் பல வங்கிக் கணக்குகளுக்கு குறுகிய கால அவகாசத்தில் அடுத்தடுத்து மாற்றப்படுகிறது. இதுபோன்ற வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய இணையக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்துடன் செயல்படும் வகையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை அமைக்க வேண்டும் என்றும், மோசடியாளர்கள் வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதால் இன்டர்போல் உதவியையும் நாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எண்ம கைது என்பது கிடையவே கிடையாது என்னும் வகையில் தொலைக்காட்சிகளில் ரிசர்வ் வங்கி விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இணையக் குற்றங்கள் தொடர்பான புகார்களில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்செவிஅஞ்சல் செயலிகளையும் 7.81 லட்சம் சிம் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கி உள்ளது. இருப்பினும், எண்ம கைது குற்றம் அதிகரித்து வருவது மத்திய அரசின் விழிப்புணர்வு இன்னும் பரவலாகச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது.
நீதிமன்றம், காவல் நிலையம் போன்ற இடங்களைப் பின்னணியாகக் கொண்டு சீருடையில் இருப்பவர்கள் அழைத்து, போதைப்பொருள் கடத்தலுக்கு தங்கள் ஆதார் பயன்படுத்தப்பட்டுள்ளது, பயங்கரவாதிகளுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது, இணைய நீதிமன்றத்தில் நீங்கள் ஆஜராக தயாராக இருங்கள் என எவராவது மிரட்டினால் அச்சமடையாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் குற்றவாளிகளைக் கைது செய்ய வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் அதிகரித்த விழிப்புணர்வு, மத்திய, மாநில அரசுகளின் தொடர் கண்காணிப்பு இரண்டின் மூலம்தான் இந்த மோசடியை முறியடிக்க முடியும். பெரும்பாலும், படித்தவர்களும் விவரமறிந்தவர்களும் எண்ம மோசடியாளர்கள் வலையில் விழுவதைத்தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.