"குழப்ப' தேசம்!
அண்டை நாடுகள் அமைதியாக இல்லாதபோது, அதன் விளைவுகளை இந்தியா எதிர்கொள்வது என்பது விடுதலை அடைந்தது முதலே சந்தித்து வரும் தலைவலி. பாகிஸ்தானில் நிலையான ஆட்சி இருந்ததில்லை. நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்ட பிறகு, "ஜனநாயகம்' என்கிற பெயரில் கேலிக்கூத்துகள்தான் அரங்கேறி வருகின்றன.
வங்கதேசத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு "வங்க பந்து' ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் அமைந்தபோது உருவான நம்பிக்கை, அடுத்த சில ஆண்டுகளில் அவரது படுகொலையுடன் தகர்ந்தது. ராணுவ ஆட்சியின் ஜனநாயகம் என்கிற பெயரில் நடந்த ஷேக் ஹசீனா, கலீதா ஜியா தலைமையிலான ஆட்சிகளும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை.
இலங்கை குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை.
உள்நாட்டுப் போர் முடிந்தும்கூட ஒற்றுமை ஏற்பட்டதாகவும் முழுமையான அமைதி திரும்பியதாகவும் இன்னும்கூட சொல்ல முடியவில்லை. பொருளாதார ரீதியாகவும் வலுவிழந்து நிற்கிறது. மாலத்தீவிலும் அதே நிலைமைதான் காணப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் வங்கதேசத்தில் இப்போது காணப்படும் நிலையற்ற தன்மையையும் அரசியல் குழப்பங்களையும் நாம் பார்க்க வேண்டும். ஒருபுறம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், இன்னொரு முன்னாள் பிரதமர் உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைக்கு லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். உள்நாட்டில் மத அடிப்படைவாதிகள் ஒருபுறமும், மாற்றத்தை விரும்பும் இளைஞர் இன்னொருபுறமும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றொரு புறமும் போராட்டங்களில் அவ்வப்போது ஈடுபட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது எதிர்பாராதது அல்ல. கடந்த 2024 ஜூலை 1-ஆம் தேதி முதல் தெருக்களில் திரண்டு பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு மனிதகுலத்துக்கு எதிராக குற்றங்கள் புரிந்ததாகக் கூறி, ஹசீனா, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அசதுஸ்ஸமான் கான் கமால் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த நவ. 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவரது அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது. ஹசீனா, காலத்தில் 1971 போராட்டத்தின்போது பாகிஸ்தானுக்கு உதவியதாக ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். அந்த அமைப்புக்கு ஹசீனா அரசு தடை விதித்தது. இந்தத் தடை அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டதுடன், அந்த அமைப்பு முகமது யூனுஸ் அரசில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்குகிறது.
ஹசீனா பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினார். ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு இரண்டு முறை கோரிக்கை விடுத்துள்ளது. முகமது யூனுஸ் அரசில் மத அடிப்படைவாதிகளின் பிடி இறுகி உள்ளதால், கடந்த பல பத்தாண்டுகளாக இல்லாத வகையில் இந்தியாவுடனான உறவு சீர்குலைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் அறிவித்த அன்சருல்லாஹ் பங்களா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜஷிமுத்தின் ரஹ்மானி சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். இந்தியாவில் செயல்படும் பிரிவினைவாத அமைப்பான உல்ஃபாவுக்காக 2004-இல் ஆயுதங்கள் கடத்திய பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எந்த பாகிஸ்தானிடம் கொடுமைகளை எதிர்கொண்டனரோ, அவர்களுடனேயே முகமது யூனுஸ் அரசு உறவு பாராட்டத் தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் 11 ராணுவக் குழுக்கள் வங்க தேசத்துக்கு கடந்த சில மாதங்களில் விஜயம் செய்துள்ளன. வங்கதேசத்தின் பெகுவா என்ற இடத்தில் தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் 10 நாள்கள் வங்கதேசத்தில் தங்கி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தெருக்களில் நடைபெறும் போராட்டங்களும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களுமே அந்த நாட்டின் அரசியலை நிர்ணயித்துள்ளன. ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் 1970-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் பெரும்பான்மை பெற்றபோதும், அதை பாகிஸ்தான் மதிக்காததுடன் இனப் படுகொலையிலும் ஈடுபட்டது. அவாமி லீக் கட்சியினர் தெருக்களில் இறங்கியும், ஆயுதம் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்; வங்கதேசம் என்ற புதிய நாடு உதயமானது.
அவாமி லீக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், போராடி யூனுஸ் அரசை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஷேக் ஹசீனாவின் மகனும் ஆலோசகருமான சஜீப் வாúஸத் ஜாய் அறிவித்துள்ளார். மத அடிப்படைவாதிகள் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதுடன், பாகிஸ்தானின் அதிகாரபூர்வ ஆதரவும் உள்ள நிலையில், அவாமி லீக் கட்சியும் ஆயுதம் ஏந்தினால் பெரிய அளவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
வங்கதேசத்தில் ஜனநாயகமும், அமைதியும் திரும்புமா, இல்லை மத அடிப்படைவாதம் அதிகரித்து அடக்குமுறையும் சர்வாதிகாரமும் அதிகரிக்குமா என்பதுதான் கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

