'சப்தமின்றி' ஒரு புரட்சி!

இந்தியாவில் மின் வாகனங்களின் விற்பனை சீராக அதிகரித்து வருவது வாகனப் போக்குவரத்துத் துறையில் சப்தமின்றி ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பற்றி...
மின் வாகனங்கள்..!
மின் வாகனங்கள்..!
Updated on
2 min read

இந்தியாவில் மின் வாகனங்களின் விற்பனை சீராக அதிகரித்து வருவது வாகனப் போக்குவரத்துத் துறையில் சப்தமின்றி ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பெருநகரச் சாலைகளில் எங்கேயாவது தென்பட்ட மின் வாகனங்கள் இன்று கிராமங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புதைபடிம எரிபொருள் நுகர்வையும், உமிழ்வையும் குறைக்கும் மத்திய அரசின் நோக்கம் விரைவில் நிறைவேறுவதற்கான நம்பிக்கையை இது அதிகரித்து வருகிறது.

கடந்த நவம்பர் மாத நிலவரப்படி மின் வாகனங்களின் விற்பனை 12.47 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 1.93 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு நவம்பரில் 2.17 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வர்த்தக மின் வாகனங்களின் விற்பனை 203 சதவீதம் அதிகரித்திருப்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம். கடந்த ஆண்டு நவம்பரில் 561 வர்த்தக மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு நவம்பரில் 1,698 வர்த்தக மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

மின் வாகன சந்தையில் 50 சதவீதத்துக்கும் அதிக பங்கு வகிக்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை 2.51 சதவீதம் குறைந்திருக்கிறது. எனினும், பயணியர் மின் வாகனங்கள் விற்பனை 62 சதவீதமும், மூன்று சக்கர மின் வாகனங்கள் விற்பனை 32 சதவீதமும் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் கடந்த ஆண்டு நவம்பரில் 1,93,133 மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு நவம்பரில் 2,17,213 மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவில் மின் வாகனங்களின் விற்பனை திடீரென அதிகரித்துவிடவில்லை. 2030-ஆம் ஆண்டுக்குள் வாகனப் போக்குவரத்துத் துறையில் 30 சதவீதம் மின் வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். மத்திய அரசின் ஊக்கத் தொகைகள், சிறந்த மின்னேற்று கட்டமைப்புகள், மின் வாகனங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவை மின் வாகனங்கள் விற்பனைக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம் 2024-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான இத்திட்டத்துக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டமும் (பிஎல்ஐ) இணைக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிஎல்ஐ திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.25,938 கோடியாகும். வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை வாங்குவதற்கான ஊக்கத் தொகையையும், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்காக உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையையும் இந்த பிஎல்ஐ திட்டங்கள் அளிக்கின்றன.

நாடு முழுவதும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தில் மூன்று சதவீதம் மட்டுமே டீசல் லாரிகளின் இயக்கம் இருக்கிறது. எனினும், அவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 42 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதனால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மின்சார கனரக சரக்கு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூலையில் அறிவித்தது.

அதன்படி, என்2 மற்றும் என்3 கனரக மின்சார சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மொத்த வாகன எடையின் அடிப்படையில் அதிகபட்ச ஊக்கத் தொகையாக ஒரு மின்சார சரக்கு லாரிக்கு ரூ.9.60 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் மின்சார கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மின் வாகனங்களைப் பொருத்தவரை, அதற்கு மின்னேற்றம் செய்வதற்கான வசதிகள் எளிதில் கிடைப்பதுதான் பெரிய பிரச்னை. ஆனால், அதற்கும் இப்போது தீர்வு காணப்பட்டிருக்கிறது. அரசின் திட்டங்களின் உதவியால் நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் இப்போது அதிக அளவு மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்களில் வேகமாக மின்னேற்றம் செய்யும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் விலக்கு, உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. இதுபோன்று தில்லி உள்ளிட்ட சில மாநிலங்களும் மின் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

அனைத்து வகை புதிய வாகனங்களில், 2019-20-இல் 0.71 சதவீதமாக இருந்த மின் வாகனங்களின் விற்பனை 2024-25-இல் 7.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, 2020-21-இல் 2.44 கோடி பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையான நிலையில், மின் வாகனங்களின் விற்பனை 1.74 லட்சமாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 2024-25-இல் 19.68 லட்சம் மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மின் வாகனங்களின் பயன்பாட்டால் புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு குறையும். அதே வேளையில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக் கிறது. நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தாண்டி, சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com