தயக்கம் வேண்டாம்!

பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்கள் பற்றி...
DPI
DIN
Updated on
2 min read

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் பெருக்கத்தால் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், மேலும் 100 பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலேயே இந்தப் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்கும் முன்னோடித் திட்டத்தின் மூலம் தொழில் கல்வியை விரிவாக்கம் செய்யலாம். அதுமட்டுமன்றி, மேல்படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறும் சூழ்நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை அதே வளாகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ப்பதன் மூலம் தொழில் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க முடியும் என்பதுடன் கல்வி இடை நிற்றல் விகிதத்தையும் குறைக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆலோசனையில் இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகள் அடையாளம் காணப்படுகின்றன. அந்தப் பள்ளி வளாகத்தில் குறைந்தபட்சம் பயன்படுத்தப்படாத 50 சென்ட் நிலம் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஐடிஐ இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள கட்டடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருந்தால் அத்தகைய பள்ளிகளைத் தேர்வு செய்யலாம். இதுதவிர தொழில் மண்டலங்கள், தொழிற்சாலை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த விதிகளின் கீழ்வரும் அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு வாரத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நடத்தும் 132 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்பட மொத்தம் 543 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது சுமார் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். குறைவான கட்டணம், அரசின் சலுகைகள் உள்ளிட்ட காரணங் களால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2023-2024-ஆம் கல்வியாண்டில் 93.30 சதவீதம் மாணவர் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளால் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அவற்றின் திறன் வாய்ந்த தொழிலாளர் தேவைக்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்கும் போது அரசு அதற்கான தேவைகளை முழுமையாகச் செய்தால் மட்டுமே நோக்கம் நிறைவேறும். காலி இடமும், கட்டடங்களும், ஆய்வகமும் மட்டுமே போதுமானவை அல்ல. மத்திய அரசின் விதிமுறைப்படி ஒரு தரமான தொழிற்பயிற்சி நிலையம் என்பது குறைந்தபட்சம் நான்கு பாடப் பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் பள்ளி வளாக நிலையங்கள் குறைந்த பட்சம் 2 பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ஒரு பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 2 குழுக்களும் (குழுவுக்கு தலா 20 மாணவர்கள்) அவற்றுக்கு 2 ஆசிரியர்களும் தேவை என்பது மத்திய பயிற்சித் துறை இயக்ககத்தின் விதி. அவ்வாறு 100 பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் குறைந்தபட்சம் 200 ஆசிரியர்கள் தேவை. நிர்வாகம் மற்றும் இதர பணிகளுக்கு மேலும் கூடுதல் ஊழியர்கள் தேவையாக இருக்கும்.

தமிழகம் முழுவதும் முழுவீச்சில் செயல்பட்டுவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் பரிதவிக்கின்றனர். எனவே, பள்ளி வளாக நிலையங்களுக்கு பிரதான நிலையங்களிலிருந்து வேற்றுப் பணியாக (டெபுடேஷன்) அனுப்பினால் அங்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதலாக மருத்துவர்களும், பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. வேற்றுப் பணியாக நியமனம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வருவாய்த் துறை மூலம் அமல்படுத்தப்பட்டுவரும் அரசின் ஏராளமான சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், வேலை செய்வோருக்கு கூடுதல் பணி அழுத்தம் மட்டுமல்லாது, அவர்களின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அதுபோன்றதொரு நிலைமை பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஏற்பட்டு விடாமல் போதிய தகுதியான ஆசிரியர்களையும், ஊழியர்களையும் நியமித்து அவற்றைத் தொடங்கினால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும்.

தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பிரதான கல்வியுடன் தொழிற்பயிற்சி கல்வியையொட்டிய இந்தத் திட்டத்துக்கு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் உண்டாகலாம். எனினும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு அரசு தயங்காமல் செயல்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com