மன்னிக்க முடியாத குற்றம்!

விசாரணை என்கிற பெயரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும் மனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனிதாபிமானத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Updated on
2 min read

தேசிய மனித உரிமை ஆணையம் உயிர்ப்புடன்தான் இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அதன் சமீபத்திய உத்தரவு. 2021-இல் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த 36 வயது கைதியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது ஆணையம். இதன் மூலம், காவல் நிலைய மரணங்கள் குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

இதுபோல உத்தரவு பிறப்பிப்பது முதல்முறை அல்ல என்றாலும்கூட, அண்மைக்காலமாக நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையமும் காவல் நிலைய மரணங்கள் குறித்து அதிகம் அக்கறை காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவும் நிலையில், இந்த உத்தரவு வரவேற்புக்குரியது என்றுதான் கூற வேண்டும். அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி, 2020-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டுமே சிறைச்சாலை, காவல் நிலையங்களில் விசாரணையில் இருந்த 4,400 பேர் நாடுதழுவிய அளவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில், உத்தர பிரதேசத்தில் மட்டுமே 952 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன; முன்பு குறிப்பிட்ட காவல் நிலைய மரணம் அவற்றில் ஒன்று.

மார்ச் மாதம் 'ஸ்டேட்டஸ் ஆஃப் போலீஸிங் இன் இந்தியா 2025* என்கிற அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கருத்து தெரிவித்த காவல் துறையைச் சேர்ந்த பெரும்பாலோர் வன்முறைப் பிரயோகம் அவசியம் என்று கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். 17 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 8,276 காவல் துறை அதிகாரிகளும், காவலர்களும் வன்முறைகளைப் பயன்படுத்தி விசாரித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும் என்று கருத்துத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

விசாரணைக் கைதிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது என்பது, குற்றவாளிகள் மீதான தாக்குதலாக மட்டுமே நாம் பார்க்க முடியாது. சந்தர்ப்ப சாட்சியங்களாலும், காவல் துறையின் தவறான மதிப்பீடாலும் அப்பாவிகள் கைது செய்யப்படுவதும், அவர்கள் மீது விசாரணை என்கிற பெயரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும் மனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனிதாபிமானத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்பதை நாம் உணர வேண்டும். அந்த நிலை எந்தவொரு குடிமகனுக்கும் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 70% பேர் விசாரணைக் கைதிகள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம். அதிகம் படிப்பறிவில்லாத 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள்தான் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் மீதான வழக்குகள் விரைந்து நடத்தப்படாமலும், போதுமான சாட்சியங்கள் இல்லாததாலும், காவல் துறையின் இழுத்தடிப்பாலும் அவர்கள் சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குறித்து எத்தனையோ தீர்ப்புகள் வந்த பிறகும் நிலைமை மாறுவதாக இல்லை

1979-இல் பிகார் மாநிலம் பாகல்பூர் மத்திய சிறைச்சாலையில் 31 விசாரணைக் கைதிகள் கண்களில் அமிலம் ஊற்றப்பட்டு, பார்வை இழந்தனர். அதில் தொடர்புடைய காவல் துறையினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் முதல் முதலில் சிறைச்சாலை, காவல் நிலைய மரணத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது: ஆனாலும் நிலைமை மாறவில்லை.

1997-இல் டி.கே.பாசு - மேற்கு வங்கம் வழக்கில், சிறைச் சாலை மரணம் மற்றும் காவல் நிலைய வன்முறைக்குக் கடிவாளம் போடுவதற்காக உச்சநீதிமன்றம் சில விதிமுறைகளை அறிவித்தது. கைது, விசாரணை தொடர்பான 11 வழிகாட்டுதல்களைப் பிறப்பித்தது உச்சநீதிமன்றம். 2015-இல் அந்தத் தீர்ப்பை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் புதிய சில வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் அதில் இணைத்தது.

அனைத்துக் காவல் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதிலுள்ள பதிவுகளைப் பார்வையிடுவதற்கு, காவல் துறையைச் சாராத சுதந்திரமான மேற்பார்வை அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என்றும் 2015 தீர்ப்பில் கூறப்பட்டது.

2018-இல் ஷாஃபி முகம்மது -ஹிமாசல பிரதேச அரசு வழக்கில் 2015 தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக. சிசிடிவி கேமரா நிறுவுவதும், அதைச் சுதந்திர அமைப்பு பரிசோதிப்பதும் கட்டாயம் என்றது அந்தத் தீர்ப்பு. 2020-இல் பரம்வீர் சிங் சைனி - பல்ஜீத் சிங் வழக்கிலும் உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

அப்படி இருந்தும் அனைத்துக் காவல் நிலையங்களிலும், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ., அமலாக்கத் துறை அலுவலகங்களிலும் சிசிடிவி நிறுவப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. இதுவரையில் 11 மாநிலங்கள் மட்டுமே அனைத்துக் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமரா நிறுவியிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத்தும், சந்தீப் மேத்தாவும் வேதனை தெரிவித்ததுடன். நாடு தழுவிய அளவில் விசாரணைக் கைதிகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனைத் தலைவராகக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் இழப்பீடு வழங்கும்படி அளித்திருக்கும் தீர்ப்பு, நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பைத் தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com