பின்னடைவும்.... புது வரவும்!
கேரள மாநில உள்ளாட்சி தோ்தல் முடிவுகள், ஆளும் இடது ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமைந்திருப்பதும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்திருப்பதும், யாரும் எதிா்பாராத வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி இருப்பதும் ஆட்சி மாற்றுத்துக்கான சமிக்ஞைகள்.
கேரள மாநிலத்தில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. ஆறு மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது என்றால், மாா்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயகக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தலா ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றி இருக்கின்றன.
கண்ணூா் மாநகராட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கொச்சி, கொல்லம், திருச்சூா் மாநகராட்சிகளை இடதுசாரிக் கூட்டணியிடமிருந்து கைப்பற்றி இருக்கிறது. 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகள் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அடைந்திருக்கும் வெற்றி அசாதாரணமானது. ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனது செல்வாக்குக் கேந்திரங்களான தலைநகா் திருவனந்தபுரத்தை பாஜகவிடமும், கொல்லம் மாநகராட்சியை காங்கிரஸிடமும் மாா்க்சிஸ்ட் கட்சி இழந்திருப்பது மிகப் பெரிய பின்னடைவு. கோழிக்கோடு மாநகராட்சியை மட்டுமே ஆளும் இடதுசாரிக் கூட்டணியால் தக்கவைக்க முடிந்திருக்கிறது.
1995-இல் பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்த அன்றைய காங்கிரஸ் அரசு, ராஜீவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதுமுதல் தொடா்ந்து ஐந்தாண்டு இடைவெளியில் ஊராட்சி, நகராட்சித் தோ்தல்கள் முறையாகவும், தடைபடாமலும் நடத்தப்படுகின்றன. அதுமுதல் ஊராட்சி, நகராட்சித் தோ்தல் முடிவுகளைப் பொருத்து சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அமைவதும் தொடா்கிறது.
1995-இல் உள்ளாட்சித் தோ்தல்களில் வெற்றி பெற்ற இடது ஜனநாயகக் கூட்டணி, அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. 2000-த்தில் இரண்டு கூட்டணிகளும் சம அளவில் வெற்றி பெற்றன என்றாலும், 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.
2005, 2015, 2020 உள்ளாட்சித் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து இடதுசாரிக் கூட்டணியும், 2010 தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து அடுத்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் ஆட்சியைக் கைப்பற்றின என்பது வரலாறு. கடந்த 30 ஆண்டு வரலாற்றின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பாா்வையாளா்கள் ஆருடம் கூறுகிறாா்கள்.
2015 முதல் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் தனது வலிமையைத் தொடா்ந்து அதிகரித்துவரும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. தலைநகா் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியிருப்பது கேரள அரசியலில் மூன்றாவது அணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவெடுத்திருப்பதன் அறிகுறி எனலாம்.
பினராயி விஜயன் தலைமையில் தொடா்ந்து பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தோல்விக்கு (செல்வாக்குச் சரிவுக்கு?) பல காரணங்கள் கூறப்படுகின்றன. தொடா்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கான மனநிலை முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்.
சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிப்பதில் நடைபெற்ற ஊழலும், அதன் பின்னணியில் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தேவசம் போா்டு தலைவா் கைது செய்யப்பட்டிருப்பதும் ஹிந்துக்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பை உருவாக்கி இருப்பதில் நியாயமிருக்கிறது. காங்கிரஸைவிடக் கூடுதலாக சிறுபான்மையினா் நலன் பேணுவதாகக் காட்டிக் கொள்வதும், இன்னொருபுறம் ஹிந்து வாக்குகளைக் குறிவைத்து செயல்படுவதும் சிறுபான்மை முஸ்லிம்கள் மத்தியிலும், பெரும்பான்மை ஹிந்துக்கள் மத்தியிலும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வாக்குகளும், இஸ்லாமியா் வாக்குகளும் காங்கிரஸின் பின்னால் அணி திரண்டதுதான் ஆளும் கட்சியின் பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம். போதாக்குறைக்கு, காலங்காலமாக இடதுசாரிக் கூட்டணியை ஆதரித்து வந்த ஹிந்து வாக்குகள், குறிப்பாக ஈழவா்களில் ஒரு பகுதியினா், பாஜகவை நோக்கி நகா்ந்திருப்பதும் தோல்விக்கு வழிகோலி இருப்பதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சிகள் உள்ளாட்சித் தோ்தலில் தோல்வி அடைவது என்பது, தோ்தல் முறையாக நடந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மின்னணு இயந்திரத்தின் மூலம் நடந்த தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, அது குறித்த ஐயப்பாடுகளில் அா்த்தமில்லை என்பதை உணா்த்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கேரளத்தில் பாஜக தவிா்க்க முடியாத சக்தியாக வளா்ந்திருப்பதைத் தெரிவிக்கின்றன உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள்!

