புதியதொரு அத்தியாயம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று வளைகுடா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)AP
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று வளைகுடா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணம் சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது. காஸா ஒப்பந்தத்துக்குப் பிறகும்கூட முழுமையான அமைதி எட்டப்படாத சூழ்நிலையில், வளைகுடா நாடுகளுக்கான பிரதமரின் விஜயம் கவனத் திருப்பமாக அமைந்தது எனலாம்.

2018-க்குப் பிறகு பிரதமர் மோடி மீண்டும் ஓமன் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். இந்தியா-ஓமன் உறவின் 70-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக அமைந்த இந்த அரசு முறைப் பயணம், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் 2023 டிசம்பர் 16 இந்திய விஜயத்தின் நீட்சி என்றும்கூடக் கொள்ளலாம்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அந்த நாட்டின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமன்' இருநாட்டு உறவை வலுப்படுத்தி நல்லுறவு பேணுவதற்காகப் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளால் வழங்கப்படும் 28-ஆவது உயரிய விருது இது.

இந்தியாவுக்கு ஓமனுடனான முக்கியத்துவம் என்பது புவியியல் அருகமை, வரலாற்றுத் தொடர்பு உள்ளிட்டவை மட்டுமே அல்ல. வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுடனான உறவில் ஆர்வம் காட்டாமலும் இருந்த நேரத்தில்கூட, இந்தியாவுக்குத் தனது கதவுகளைத் திறந்து வைத்திருந்த நாடு ஓமன் மட்டும்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுற்றிலும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் அமைதிப் பூங்காவாகத் திகழும் ஓமன், நடுநிலை வகிக்கும் நாடாக இருந்து வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நமது மேற்காசிய வெளியுறவுக் கொள்கையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது ஓமன். 2008 நவம்பரில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அரசு ஓமனுடன் நட்புறவு ஒப்பந்தம் மேற்கொண்டது என்றால், 2023-இல் இந்தியா தலைமையேற்ற ஜி-20 மாநாட்டுக்கு ஓமன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது.

2005-இல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் தனித்துவமானது. இந்தியாவின் முப்படைகளும் ஓமன் ராணுவத்துடன் இணைந்து பயிற்சிகள் நடத்துவது என்று மேற்கொள்ளப்பட்ட முடிவைத் தொடர்ந்துதான், ஏனைய பல வளைகுடா நாடுகளும் அதுபோன்ற ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளத் தலைப்பட்டன. அத்துடன் நின்றுவிடவில்லை இரு நாட்டு நட்புறவும் நெருக்கமும்.

2012 முதல் ஓமன் வளைகுடாவில், கடற் கொள்ளையர்களை எதிர்கொள்ளவும் கண்காணிக்கவும், இந்தியக் கடற்படையின் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் ஓமன் வான்வெளி வழியாகப் பறக்கவும், ஓமனில் இறங்கவும் நிரந்தர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 2010 முதல் இந்தியாவில் இருந்து சிறிய ரக ராணுவத் துப்பாக்கிகளை வாங்கும் முதல் வளைகுடா நாடும் ஓமன்தான்.

2018-இல் பிரதமர் நரேந்திர மோடி முதல்முதலாக ஓமனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ஓமனின் டூக்கம் துறைமுகத்தை இந்தியக் கடற்படை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஓமன் வளைகுடாவையும், அரபிக் கடலையும் எதிர்கொள்ளும் ஓமனின் புவியியல் அமைப்பு, அந்தப் பகுதியில் அதிகரித்துவரும் சீனக் கடற்படையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வழிகோலுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, ராணுவ நட்புறவுடன் முடிந்து விடுவதல்ல. அதிக அளவில் இல்லாவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது (2024-25) 10.61 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது. அதேபோல, இந்தியாவுக்கான ஓமனின்

முதலீடும் அதிகரித்து வந்திருக்கிறது. 2000-க்கும் 2025-க்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளில் ஓமன் 60.55 பில்லியன் டாலரை, நேரடி முதலீடாக வழங்கி இருக்கிறது.

ஓமனில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், யூரியா இரண்டும் இந்தியாவின் முக்கியமான இறக்குமதிகள். இந்தியாவில் இருந்து கனிம எரிபொருள்கள், ரசாயனங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் என்று ஏராளமானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரதமரும், ஓமனின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கும் செய்திருக்கும் இப்போதைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 98% பொருள்களுக்கு ஓமன் முழு வரிவிலக்கு வழங்குகிறது. ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 78% பொருள்களுக்கு இந்தியாவும் முழு வரிவிலக்கு வழங்கி இருக்கிறது.

இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை மிகப் பெரிய ஊக்கம் பெறக்கூடும். பென்சிலின், ஸ்ட்ரெப்மைஸின், டெட்ராஸைக்ளின், எரித்ரோமைஸின் உள்ள பொதுப்பெயர் மருந்துகளின் இறக்கு மதிக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் இல்லாத நிலையில், ஓமனுக்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்க இது வழிகோலும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒருங்கிணைந்த ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டாவது வளைகுடா நாடு ஓமன். கல்வி, மருத்துவம், எண்மப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இந்தியாவைச் சார்ந்திருக்க முன்வந்திருக்கும் ஓமன், வளைகுடா நாடுகளில் நமது நீண்ட நாள் நட்பு நாடு என்பதால், பிரதமரின் அரசுமுறைப் பயணமும், மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களும் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்துக்கு வழிகோலி இருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com