

சிறு வயதில் விவரமில்லாமலும், போதிய கவனம் செலுத்தப்படாமலும், முறையான உளவியல் ரீதியான யோசனைகள் வழங்கப்படாமலும் பதின்ம வயதுக்குட்பட்ட சிறார்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது காலங்காலமாக மனித இனம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னையாக தொடர்கிறது. ஒரு தேசத்தின் நீதி பரிபாலனமும், சட்டத்தின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதை, பதின்மப் பருவம் தாண்டாத குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள், பாதுகாக்கப்படுகிறார்கள், முறைப்படுத்தப்படுகிறார்கள் என்பதன் அடிப்படையில் எடை போடலாம்.
18 வயதை அடையாதவர்கள் சிறார்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர். அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது வழக்கமான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதில்லை. தண்டிப்பதைவிட அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கடமை என்று சட்டம் கருதுகிறது.
அதன் அடிப்படையில்தான் முந்தைய சட்டங்களை மேம்படுத்தி 1986-இல் சிறார் நீதிச் சட்டம் (ஜுவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட்) கொண்டுவரப்பட்டது. குற்றங்களுக்காக சிறார் தண்டிக்கப்படுவதைவிட அவர்களைச் சீர்திருத்தி மறுவாழ்வு அளிப்பதும், அவர்களின் நலனைப் பேணுவதும்தான் இந்தச் சட்டத்தின் நோக்கம்.
அதை மேலும் தீவிரமாக ஆய்வு செய்து, சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, சட்டத்துடன் முரண்படும் சிறார்கள், பாதுகாப்புத் தேவைப்படும் சிறார்கள் என்று இரண்டு வகையாகப் பிரித்து அணுகப்படுகின்றனர். சிறார்களுக்கு நீதி கிடைப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும், சமூகத்துடன் இணைவதற்கும் சில நடைமுறைகள் நிறுவப்பட்டன.
அதற்காக உருவாக்கப் பட்டவைதான் சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் என்று முன்பு அழைக்கப்பட்ட, இப்போது சிறார் இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் அமைப்புகள். அந்த சிறார் இல்லங்களில் அவர்கள் முறையாக நடத்தப்படுவதும், ஆதரவுடன் பராமரிக்கப்படுவதும், உரிய முறையில் அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. நீதி தாமதிக்கப்படுவதும், அவர்கள் முறையாக நடத்தப்படாமல் இருப்பதும், அந்தச் சிறார்களுக்கு முறையான வாழ்க்கையை மறுப்பதும், அவர்களைச் சமூக விரோதிகளாக மாற்றிவிடக் கூடும்.
பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் டாடா அறக்கட்டளை சிறார் இல்லங்கள் குறித்த ஆய்வை அண்மையில் நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சிறார் பாதுகாப்புச் சட்டத்தை முறைப்படுத்தி பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிறார் இல்லங்கள் எப்படி நடக்கின்றன என்பதை ஆய்வு செய்தபோது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
நவம்பர் 2022 முதல் அக்டோபர் 2023 வரையிலான நாடாளுமன்ற புள்ளிவிவரங்கள், 765 மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி திரட்டிய தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும், நேரடியான ஆய்வின் மூலமும் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 352 சிறார் நீதி மையங்களிலும் பெரும்பாலான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு நீதிபதியும் இரண்டு சமூக சேவகர்களும் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஆனால், 25% மையங்களில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. சட்டப்படி இருக்க வேண்டிய சட்ட உதவி மூன்றில் ஒரு பங்கு மையங்களில் கிடையாது. 2015 சட்டப்படி அறிவுறுத்தப்பட்ட ஏழு குறைந்தபட்ச அடிப்படை நிபந்தனைகள் வெறும் 11 மையங்களில் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கிறது ஆய்வு.
50,000-க்கும் அதிகமான சிறார்கள், சிறார் நீதி மையங்களில் (மன்றங்களில்) தீர்ப்பை எதிர்நோக்கி இந்தியாவில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கிறார்கள். 28 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது என்றாலும், தகவல் முழுமையானதா என்றால் இல்லை. சிறார் நீதி வழக்குகள் குறித்துத் தேசிய அளவில் ஒருங்கிணைந்த தரவுகள் சேகரிக்கும் அமைப்பு எதுவும் இதுவரையில் முறைப்படுத்தப்படவில்லை.
விசாரணையின்போதும், தீர்ப்பு வழங்கிய பிறகும் சிறார்கள், சிறார் பாதுகாப்பு மையங்களில் பாதுகாக்கப்படுகிறார்கள். அந்தப் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை.
128 மையங்களுக்கு 28 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள் என்றால், அவர்களும்கூட உதவியாளர்கள் இல்லாமல் தனியாகச் செயல்படும் அவலம் காணப்படுகிறது.
சிறார் நீதிச் சட்டம் 2025-இன் படி குற்றம் சாட்டப்படும் சிறார்களுக்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால், மாதக் கணக்காகவும், வருடக் கணக்காகவும் வழக்குகள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன; 55,816 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன; நவம்பர் 2022 - அக்டோபர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட 1,00,904 வழக்குகள் அடுத்த ஆண்டுக்கு நீட்டிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிலைமை.
நான்கு சிறார் குற்றவாளிகளில் மூன்று பேர் 10 முதல் 18 வரையிலான பதின்ம வயதினர். அவர்களது பருவத்தைக் கருத்தில் கொண்டு, அந்தச் சிறார்கள் கையாளப்படுகிறார்களா என்றால் இல்லை. போதிய உளவியல் ஆலோசகர்களை நியமித்து அவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, வழக்குகள் விசாரிக்கப்படாமலும், அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படாமலும் சமூக விரோதிகளாக்கப்படுகிறார்கள்.
பெற்றோரின் கவனமின்மையும், சரியான வழிநடத்தலும் இல்லாமல் தவறிழைக்கும் சிறார்கள் குற்றவாளியாக்கப்படுவது நியாயமில்லை. சட்டம் இயற்றுவதால் மட்டுமே நமது கடமை முடிந்துவிடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.