

இணைய விளையாட்டுகளும் சமூக வலைதளங்களும் இளைஞர்களை மட்டும் என்றில்லாமல் முதியவர்களையும் பெண்களையும் கட்டிப் போடுகின்றன. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளைப் போலவே, இணையப் பயன்பாடும் அன்றாட வாழ்வின் பல செயல்பாடுகளில் மிகவும் பயனுள்ளதாக இருப்பினும், அதனால் சில தீமைகளும் ஏற்பட்டு வருகின்றன. விளையாட்டுகளும் சமூக வலைதளங்களும் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன என்றால், இணையவழி சூதாட்டமோ பணத்தையும் சில நேரங்களில் உயிரையே விழுங்கி விடுகின்றன.
சூதாட்டம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மனிதனுக்கு ஆசையும் அது அதிகரிக்கும் பேராசையும் இருக்கும் வரை, சூதாட்டம் தொடரத்தான் செய்யும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத இணையவழியில் விளையாடி பணத்தை இழப்பதும், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது அசிரத் தையாக கடந்துபோகக்கூடியது அல்ல.
கோவையில் வசித்த, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ராஜன்குமார் (18), மெக்கானிக் மணிகண்டன் (35) ஆகியோர் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட்டு பல முறை தோல்வி கண்டு. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் பெற்று, அதைத் திரும்பக் கொடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடந்த ஆக. 12-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த 2019 முதல் 2024 வரை இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையானதால் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல தற்கொலைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று காவல் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர்.
தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட பல மாநிலங்கள் இணைய வழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டங்கள் கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்த்து இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடுத்து தடை பெற்று விடுகின்றன. தமிழக அரசு கொண்டுவந்த இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பின்னணியில்தான், பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில் மத்திய அரசால் 'இணையவழி விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா 2025' மக்களவையில் கடந்த ஆக. 21-ஆம் தேதி நிறை வேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதாவின்படி, கல்வி, திறன் மேம்பாட்டு விளையாட்டு கள் அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும். இதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமு றைகளை வகுக்கும். பயிற்சி மையங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப அமைப்புகள் நிறுவப்படும். பணம் வைத்து விளையாடப்படும் போக்கர், ரம்மி போன்ற அனைத்து விளையாட்டுகளும் சட்ட விரோதமாக்கப்படும்.
இதுபோன்ற விளையாட்டை நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்ப டும். விளம்பரம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ. 2 கோடி அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியபோது, 45 கோடி பேர் இணையவழி சூதாட்டத்தில் எதிர்மறையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர் என்றும், ரூ.20,000 கோடி அள வுக்கு பணத்தை இழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே தடையின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள இணையவழி விளையாட்டுத் துறைக்கு இந்த மசோதா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும், 'இந்திய கேமிங் கூட்டமைப்பு' உள்ளிட்ட பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், அவர்களது வருமான இழப்பைவிட மக்கள் நலனே முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விளையாட்டை நடத்துபவர்கள் பெரும் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். சட்டவிரோதமாக இணையவழி பந்த யத் தளங்களை நடத்தி வந்த கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.சி.வீரேந்திரா கடந்த ஆக. 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது ஓர் உதாரணமாகும்.
கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரை 1,524 சூதாட்ட இணைய தளங்கள், கைப்பேசி செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. விளையாட்டு நிறுவனங்கள், இதுபோன்று பெரும் செல்வாக்கு படைத்தவர்களின் நிர்ப்பந்தத்துக்கு இரையாகாமல் இந்த தடை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.
இப்போது தடை செய்யப்படும் இணையதளங்கள் முறைகேடான வழிகளில் செயல்பட பெரும் வாய்ப்புள்ளது. அதையும் முறியடித்து இணையவழி சூதாட்டங்கள் மூலம் பணம் இழப்பதையும் அதன்மூலம் உயிரை மாய்த்துக் கொள்வதையும் தடுப்பது மத்திய அரசின் கடமையாகும்.
இந்தியாவில் 400-க்கும் அதிகமான இணைய சூதாட்ட புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இணைய சூதாட்டத்தில் தொழில்முறையில் ஈடுபடுவோர் 60 லட்சத்துக்கும் அதிகம் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். 1857 சூதாட்ட தடைச் சட்ட காலத்திலிருந்து இதில் ஈடுபடுவோரை அகற்றி நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மன மாற்றத்துக்கு வழிகோலாதவரை தடை மட்டுமே விடை ஆகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.