

திரைப்படங்களில் காட்டப்படுவது போல, காப்பீட்டுப் பணத்துக்காக பெற்றோர், கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களையும்கூட கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இந்தப் போக்கு இந்தியா முழுவதும் காணப்படுவது அதைவிட அதிர்ச்சி.
திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இ.பி.கணேசன் (56). இவர் கடந்த அக். 22-ஆம் தேதி பாம்பு கடித்து இறந்ததாக காவல் நிலையத்துக்கு அவரது மகன் தகவல் தெரிவித்தார். இவரது மகன்களான ஹரிஹரன் (27), மோகன்ராஜ் (26) ஆகியோர் காப்பீட்டுத் தொகைக்காக நிறுவனத்தை அணுகியபோது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், முன்னதாக தந்தை பெயரில் ரூ.3 கோடிக்கு காப்பீடு எடுத்து, அந்தப் பணத்தைப் பெறுவதற்காக பாம்பை விட்டு அவரைக் கடிக்க வைத்துக் கொன்றது அம்பலமானது.
ஆந்திரத்தின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாராயணமூர்த்தியை (54) ரூ.1.08 கோடி காப்பீட்டுப் பணத்துக்காக அவரது மருமகன் சுன்கரி, பேரன் ஜோதி பிரசாத் ஆகியோர் கடந்த டிச. 9-ஆம் தேதி கொன்று சடலத்தை சாலையில் வீசினர்.
இதேபோன்று ரூ.50 லட்சம் காப்பீட்டுப் பணத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் காலுவை அவரது மனைவி கடந்த 2024 டிச. 25- ஆம் தேதியும், மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் ரூ. 1 கோடிக்காக மன்சக் கோவிந்த் பவாரை அவரது மனைவி கடந்த 2022 ஜூன் 11-ஆம் தேதியும் கொன்று விபத்து என்று நாடகமாடினர்.
தனி நபர்கள் மட்டுமல்ல, காப்பீட்டு மோசடியில் சில கும்பல்களும் களமிறங்கியிருப்பது அண்மைக் காலத்தில் வெளிவந்திருக்கிறது. தில்லியைச் சேர்ந்த திரிலோக் குமார், புற்றுநோய் காரணமாக கடந்த ஜூன் 2024-இல் இறந்த பிறகு, அவரது மனைவிக்கு ஆசைகாட்டி மோசடியாக பாலிசி எடுத்து ஒரு கும்பல் ரூ.70 லட்சம் பெற்றுள்ளது. மோசடி இறப்புச் சான்றிதழ் தயார் செய்த மருத்துவமனை ஊழியர்கள், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வங்கி பெண் ஊழியர் என இந்தக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல மாநிலங்களிலும் இதேபோன்று கைவரிசை காட்டி ரூ.500 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிலரைக் கொலை செய்து, விபத்து என்று போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பித்து லட்சக்கணக்கான ரூபாயை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இன்றைய சூழலில், ஏதாவது நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு என்று மருத்துவமனைக்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் சில லட்சங்கள் ஆகிவிடுவதால், மருத்துவக் காப்பீடு என்பது இன்றியமையாததாக ஆகியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டமும், மாநில அரசின் முதல்வரின் காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டாலும், அவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், கோடிக்கணக்கானோர் தனியார் நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களை நாடுகின்றனர். அரசு, தனியார் என எல்லா வகையான காப்பீட்டுத் திட்டங்களிலும் மோசடிகள் அரங்கேறுகின்றன.
பிரீமியம் தொகை அதிகமாகிவிடும் என்பதாலும், சிகிச்சை பெற்ற பின்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது சிக்கல் என்பதாலும் சர்க்கரை நோய், இதயப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்று தங்களுக்கு ஏதாவது நோய் ஏற்கெனவே இருந்தால் அதை காப்பீட்டு நிறுவன ஊழியர்களிடம் பாலிசி எடுக்கும் நேரத்தில் பாலிசிதாரர் தெரிவிப்பதில்லை. தாம் செலுத்தும் பிரீமிய தொகை அநாவசியமாக வீணாகக் கூடாது என்று கருதி சிகிச்சை பெறாதபோதிலும் சிலர் சிகிச்சை பெற்றதாகக் கணக்கு காட்டி பணத்தைத் திரும்பப் பெறுகின்றனர்.
சிலர் செலவழித்ததைவிட அதிக தொகையைப் போலி ரசீதுகளை சமர்ப்பித்து பெறுகின்றனர். விபத்து நடைபெறாமலே விபத்து நடைபெற்றதாக ஜோடித்தும் சிலர் காப்பீட்டுத் தொகை பெறுகின்றனர்.
செய்யாத பரிசோதனைகளைச் செய்ததாகவும், சேவை மற்றும் மருந்துகளின் மதிப்பைக் கூட்டியும் காண்பித்து நோயாளிகளுடன் இணைந்தும், தனியாகவும், அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சில மருத்துவமனையினரும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெறுகின்றனர். நோயாளி, மருத்துவமனை ஊழியர்கள், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் இந்த மோசடிப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வதும் நடக்கிறது.
இதுபோன்ற மோசடி செயல்களால் யாருக்கும் பாதகமில்லை என்றும், தவறு இல்லை என்றும் கருதும் போக்கு பொதுமக்களிடையே அதிகரித்து வருவதுதான் கவலைக்குரியதாகும். காப்பீட்டுத் துறையில் மோசடிகளைத் தடுக்க இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டீஏஐ) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், புதுப்புது வழிகளை மோசடியாளர்கள் கையாள்கின்றனர்.
இந்த வகையான மோசடிகளால், இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை பெறப்படுகிறது என்று தனியார் நிறுவனமான "பாஸ்டன் கன்சல்டிங் குரூப் - மெடி அசிஸ்ட்' தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காப்பீட்டு விவகாரத்தில் மோசடி என்பது புதிது அல்ல. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், மத்திய, மாநில அரசுகளிடையே வேகமாகத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காப்பீடு தொடர்பான மோசடிகளைத் தடுப்பது அவசர அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.