

நாட்டில் அங்கு இங்கு என இல்லாதபடி எங்கும், எதிலும் போலிகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதிலும் உயிர்காக்கும் மருந்துகளில் போலிகள் புழக்கம் என்பது அதிர்ச்சி அடையச் செய்கிறது. இந்தியாவில் 'அபய்ரேப்' என்ற வெறிநாய்க் கடி மருந்தின் போலிகள் புழக்கம் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அந்நாட்டு மக்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான முன்னெச்சரிக்கை குறித்து வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெறிநாய்க் கடிக்கு சிறந்த மருந்து என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது இந்த அபய்ரேப் மருந்து. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு இந்தியா சென்று, அங்கு அபய்ரேப் வெறிநாய்க் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்த் தடுப்புக்கான போதிய அளவு பாதுகாப்பு கிடைத்திருக்காது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிமேல் இந்தியா செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் உள்நாட்டிலேயே முழுமையான வெறிநாய்க் கடி தடுப்பூசியை செலுத்திக் கொண்டு புறப்படவும்; ஒருவேளை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நேரிட்டால் தடுப்பூசி மற்றும் மருந்துச் சீட்டை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கடந்த 2023 முதல் இந்த போலி மருந்து புழக்கத்தில் இருப்பதாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. தில்லியில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை கடந்த மார்ச் மாதமே இதற்கான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனினும், அந்தப் போலி மருந்தின் புழக்கம் ஏன் இதுவரையில் தடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தில்லி, மும்பை, அகமதாபாத், லக்னௌ உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்தப் போலி மருந்துகளின் விற்பனை அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அபய்ரேப்' மருந்தின் வேதியியல் கூறுகளில் சிறிய அளவிலான மாறுபாடுகள், பொட்டலம் மற்றும் அடையாளப்படுத்துவதில் சற்று வேறுபாட்டுடன் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
உலகில் வெறிநாய்க் கடிக்கு ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி பேர் உள்ளாவதாகவும், அதில் கணிசமானவர்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2024-இல் இந்தியாவில் சுமார் 37 லட்சம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், பிகார், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெறிநாய்க் கடி பாதிப்பு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெறிநாய்க் கடியின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி மருந்தின் தேவை ஆண்டுக்கு சுமார் 6 கோடி 'டோஸ்'கள் என்ற நிலையில், உற்பத்தி சுமார் 5 கோடி 'டோஸ்'கள் மட்டுமே. இவற்றை நான்கைந்து நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கின்றன. இதில் சுமார் 1.5 கோடி 'டோஸ்'கள் ஏற்றுமதி செய்யப் பட்டு விடுவதால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், போலி மருந்துகளின் புழக்கம் அதிகரிப்பது இயல்பாகி விடுகிறது.
மேலும், வெறிநாய்க் கடிக்கு பின்னால் பெரிய அளவிலான வர்த்தகம் இருப்பதையும் மறுக்க முடியாது. ஆண்டுக்கு சுமார் ரூ. 500 கோடி வர்த்தக வாய்ப்பைக் கொண்டுள்ள இந்தத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதால் பணம் சம்பாதிக்க நினைக்கும் நிறுவனங்கள் போலிகளைச் சந்தையில் விற்பனை செய்வது அதிகரிக்கிறது.
வெறிநாய்க் கடிக்கு உள்ளானவர்கள் உடனடியாக தக்க முதலுதவியும், தொடர் தடுப்பூசி சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாவிட்டால் 'ரேபிஸ் வைரஸ்' உடலில் வேகமாகப் பரவி அது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும். கடிபட்ட நாள்முதல் தொடங்கி 4 முதல் 6 தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம். இதற்காக நபர் ஒருவருக்கு சுமார் ரூ.5,000 முதல் ரூ. 20,000 வரையில் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
வெறிநாய்க் கடியை ஒரு சமூகப் பிரச்னையாக கருதி அரசு அதற்கான ரேபிஸ் தடுப்பூசியை இலவசமாக அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்தத் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அங்கே அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு போலி மருந்து விற்பனையாளர்களை ஊக்கப்படுத்துகிறது.
வெறிநாய்க் கடி பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் வரை தலையிட்டும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் இதுவரையில் பிரச்னைக்குத் தீர்வு இல்லாதது சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்போருக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
வெறிநாய்க் கடி தடுப்பூசிகளின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, தர சோதனை போன்றவற்றை அரசு தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே போலி மருந்துகளை சந்தையில் இருந்து அப்புறப்படுத்த முடியும். தனி மனிதர்களால் போலி மருந்துகளை எளிதில் கண்டறிய முடியாது என்றாலும் அதுகுறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
செலுத்தப்படும் மருந்துகள் குறித்த முழு விவரத்தையும் மருத்துவர்களிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொண்டால் தான் போலிகளிடமிருந்து தப்பிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.