

கடலோரத்தில் கைவிடப்படும் அல்லது இழந்த மீன்பிடி உபகரணங்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உள்ளிட்ட குப்பைகள், கழிவுகள் குறித்த ஆய்வை தமிழக அரசின் சார்பில் தனியார் நிறுவனம் மேற்கொண்டது.
தமிழக கடற்கரை 1,076 கி.மீ. நீளமானது. இந்தியாவின் கடற்கரையில் இது 15 சதவீதமாகும். மீன் உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் 13 மாவட்டங்களில் 52 கடலோர கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு சராசரியாக ஒவ்வொரு கிராமத்திலும் 20 மீ. என மொத்தம் 1,040 மீ. தொலைவுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்தப் பகுதிகளில் சராசரியாக ஒரு சதுர மீட்டருக்கு 0.05 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 0.20 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. குப்பைகளில் 47.46 சதவீதம் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மிதவைகளின் கழிவுகள் ஆகும். இதன் அளவு ஆண்டுக்கு 4,554 டன்னாகும். இதேபோன்று, இந்தக் குப்பைகளில் நெகிழிக் கழிவுகளின் பங்கு 39.64 சதவீதமாகவும் நெகிழி அல்லாத பொருள்களின் கழிவுகளின் பங்கு 12.9 சதவீதமாகவும் உள்ளன.
தமிழகத்தில் 31 சதவீத கடற்கரைகள் சுகாதாரமற்றதாகவும், 46 சதவீதம் தீவிர சுகாதாரமற்றதாகவும் 39 சதவீத கடற்கரைகளில் அதிக நெகிழிக் கழிவுகளும், 62 சதவீத கடற்கரைகளில் அபாயகரமான கழிவுகளும் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், நெகிழிப் பொருள்கள், குப்பைகள் ஆகியவை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. வலைகளில் சிக்கிக் கொள்ளும் விலங்குகள் காயமடைவதுடன், சில உயிரிழக்கவும் நேரிடுகிறது.
இதைத் தவிர, நாம் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழி உறைகள், பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களின் உறைகள், ஐஸ்கிரீம் டப்பாக்கள், பழச்சாறு (ஜூஸ்) அடைக்கப்பட்ட நெகிழி பாட்டில்கள், காலணிகள், முகக்கவசம், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை மழைக் காலத்தில் ஓடைகள், கழிவு நீர்க் கால்வாய்கள் மூலம் கடலுக்குள் சென்று சேருவதால் நீர் மாசுபட்டு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
காலப்போக்கில் நெகிழிப் பொருள்கள் நுண்ணிய (மைக்ரோ) பிளாஸ்டிக்காக உடைவதால் அவற்றை உணவு என நினைத்து கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன. இது அந்த உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் கடல் உணவுகளை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற கடற்கரைகளால் சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுலாவும் பாதிக்கப்படுகிறது.
நமது நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. 1997- 2009-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 1,000-த்துக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்களில் சிக்கிக் கொண்டதாக அமெரிக்க உள்துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நமது நாட்டில் இந்தப் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒன்பது கடலோர மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகளில் மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்களை அளிக்கும் மீனவர்களுக்கு கிலோவுக்கு ரூ.38 வீதம் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.9.93 லட்சம் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மீன்வலை முன்னெடுப்புத் திட்டத்தின்கீழ் கடலோர மாவட்டங்களில் கைவிடப்பட்ட வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைச் சேகரிக்கும் மையங்களை நிறுவ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற முதல் மையம் சென்னை காசிமேட்டில் கடந்த ஆகஸ்ட் 2024-இல் தொடங்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டில் 26,101 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது; இவற்றில் 23,270 கிலோ மீன்பிடி உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட மறு சுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண ஏற்கெனவே திட்டமிட்டபடி, 14 கடலோர மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் சேகரிப்பு மையங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும். மேலும் மறுசுழற்சி மையங்களும் விரைந்து அமைக்கப்பட வேண்டும். கடலோரத்தில் கைவிடப்படும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள், நெகிழிப் பொருள்கள், குப்பைகள் போன்றவற்றை அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடம் மாற்றம் ஏற்படச் செய்வதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.