பூவுலகு புதுப்பொலிவுறுக!

புத்தாண்டில் (2026)அடியெடுத்து வைக்கிறது உலகம்.
பூவுலகு புதுப்பொலிவுறுக!
ANI
Updated on
2 min read

புத்தாண்டில் (2026)அடியெடுத்து வைக்கிறது உலகம். போர், சமாதானம், இயற்கைச் சீற்றங்கள், தொழில்நுட்பப் பாய்ச்சல், அறிவியல் முன்னேற்றம் என 2025-ஆம் ஆண்டு கடந்து வந்த பாதை வழக்கம்போல பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சுவார்த்தை மூலம் போர்களை நிறுத்த முடியும் என்ற புதிய நம்பிக்கையையும், எதிர்கால பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் அனுபவப் பாடத்தையும் தந்திருக்கிறது.

2025-ஆம் ஆண்டை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சொல்லலாம். இரண்டாவது முறை அதிபராக ஜனவரியில் பதவியேற்றதுமுதலே உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதல் வரி, குடியுரிமை, விசா கட்டுப்பாடு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டையும் பட்டியலிட்டு டிரம்ப் வெளியிட்ட கூடுதல் வரி அறிவிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டியும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறியும் இந்தியப் பொருள்களுக்கு டிரம்ப் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவித்த 50% கூடுதல் வரி, ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. இந்த வரிவிதிப்பால் இந்திய ஜவுளி, தோல், ரசாயனங்கள், மருந்துப் பொருள்கள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஏற்றுமதி கடும் பாதிப்பைச் சந்தித்தது.

அமெரிக்க வரிவிதிப்பு ஒருபுறம் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மற்றொரு புறம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்தியிருக்கிறது. பிரிட்டன், நியூஸிலாந்துடன் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஐக்கிய அரபு அமீரகத்துடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றுடன் தனது வர்த்தக செயல் திறனை இந்தியா விரிவுபடுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், சிலி, பெரு, மாலத்தீவுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தென் கொரியாவுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தம், இலங்கையுடன் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆசியானுடன் சரக்கு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

அமெரிக்காவின் வரித் தடைகள், உலக அளவில் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றையும் தாண்டி 2025-26-ஆம் நிதியாண்டில் வெளிநாட்டு வர்த்தகத்தில் இந்தியாவின் சாதனை தொடர்கிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 6.06 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் 825 பில்லியன் டாலரை எட்டியது என்றால், 2025-26ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 418 பில்லியன் டாலராக ஏற்றுமதி உயர்ந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட இது 5.86% அதிகமாகும்.

இந்திய மக்களை தீராத துக்கத்தில் ஆழ்த்திய சம்பவம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல். பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பின்னணி இருப்பதை உறுதி செய்த இந்தியா, "ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப் படையின் அதிதுல்லியமான தாக்குதலில் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தானின் பதில் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்தியாவின் பதிலடி திறனில் புதிய பரிமாணத்தை "ஆபரேஷன் சிந்தூர்' உலகுக்குப் பறைசாற்றியது.

சீனா-தைவான் இடையிலான பதற்றம் அதிகரிப்பு, தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல், பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் படைகள் மோதல், ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கானோரை பலிகொண்ட நிலநடுக்கம், நேபாளத்தில் ஜென் இஸட் இளைஞர்களின் போராட்டம், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பூர்வகுடி மக்களின் போராட்டம்- இவையெல்லாம் கவனிக்கத்தக்க நிகழ்வுகள்.

2025-இல் உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஒரு நிகழ்வு காஸô போர் நிறுத்தம். இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸô மீதான போரைத் தொடங்கியது இஸ்ரேல். இரண்டு ஆண்டுகளில் காஸôவில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், டிரம்ப்பின் அமைதி முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே அக்டோபர் மாதம் கையொப்பமானது. குண்டு சப்தம் ஓய்ந்துவிட்டாலும், முற்றிலும் அழிந்துவிட்ட காஸôவை மறுகட்டமைக்க வேண்டிய தேவை புதிய ஆண்டில் காத்திருக்கிறது.

சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் ரஷியா-உக்ரைன் போரும் புத்தாண்டில் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தின் பெரும்பாலானவற்றை ரஷியாவும், உக்ரைனும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

போரில்லா உலகமும், பொருளாதார வளர்ச்சியும்தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அந்த எதிர்பார்ப்பை 2026-ஆம் ஆண்டு நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com