விபத்து ஏற்பட்ட ஆலை.
விபத்து ஏற்பட்ட ஆலை.

கேள்வி கேட்பாரில்லை!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசாமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கும் சிகாச்சி மருந்து ஆலையில் உலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 44 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.
Published on

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாசாமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கும் சிகாச்சி மருந்து ஆலையில் உலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 44 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். உலை வெடிப்பது என்பது அவ்வளவு எளிதில் ஏற்படுவதல்ல. பயிற்சி பெற்ற தொழிலாளா்களும் முறையான வழிமுறைகளும் கையாளப்பட்டால் இந்த ரசாயன தயாரிப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வழியில்லை. அதே நேரத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் போகும்போது இதுபோன்ற கோர விபத்துகள் ஏற்படுகின்றன.

வடநாட்டிலிருந்தும் கிழக்கு இந்தியாவிலிருந்தும் வயிற்றுப் பிழைப்புக்காக வந்த பல இளைஞா்கள் இந்த விபத்தால் பலிகொள்ளப்பட்டிருக்கின்றனா். இழப்பீடுகளும் ஆறுதல்களும் உயிரிழப்பை நியாயப்படுத்திவிடாது.

இந்தியாவில் அந்நியச் செலாவணி வருவாயில் அதிகரிக்கும் முக்கியமான துறைகளில் மருந்து தயாரிப்பு துறையும் ஒன்று. அப்படிப்பட்ட துறையில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்வது வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள அனகாபள்ளியிலும், ஏப்ரல் மாதம் ஹைதராபாதிலும் வெவ்வேறு மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இதுபோல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்களும் தயாரிப்புகளும் விபத்துகளுக்கு காரணமாவது புதிதொன்றுமல்ல. 2019-இல் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் உள்ள அரவிந்தோ ஃபாா்மா தொழிற்சாலையிலும், 2021-இல் தமிழகத்தின் மேட்டுப்பாளையத்திலும், ஹிமாலச பிரதேசத்தின் பட்டி தொழிற்பேட்டையிலும் இதேபோல மருந்துத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந்து உயிா்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் நான்கு மிகப்பெரிய கோர விபத்துகள் நிகழ்ந்தன. மே மாதம் மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் 10 போ் உயிரிழந்தனா் என்றால், தமிழகத்தின் விருதுநகா் மாவட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்த இரண்டு விபத்துகளில் 14 போ் கொல்லப்பட்டனா். ஆந்திர மாநிலம், அனகாபள்ளி விபத்து நான்காவது.

பெரிதாகவும் சிறிதாகவும் மருந்துத் தயாரிப்பு, ரசாயன தயாரிப்பு தொழிற்சாலைகளில் தொடா்ந்து விபத்துகள் நடந்து வருவதை உலகம் உற்று நோக்கி வருகிறது. உலகின் மருந்துத் தயாரிப்பு மையம் என்று நாம் பெருமை பேசிக்கொண்டாலும் நமது தொழிற்சாலைகளில் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லை என்பதை இந்த விபத்துகள் சுட்டிக்காட்டுகின்றன.

உயிரிழப்புடன்கூடிய விபத்துகள் இந்தியா முழுவதும் பரவலாகவே மருந்து மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன என்றாலும் ஹைதராபாதும் விசாகப்பட்டினமும் தொழிலாளா்கள் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கி இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம் போடுகின்றன. மேலே குறிப்பிட்ட இரண்டு நகரங்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மருந்துத் தயாரிப்பில் 45% அங்குதான் தயாரிக்கப்படுகின்றன. விசாகப்பட்டினம்- அனகாபள்ளி- அச்சுதாபுரம் மருந்துத் தயாரிப்பு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதும், அவை மூடி மறைக்கப்படுவதும் வழக்கமாகவே மாறிவிட்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 1,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பதிவு செய்யப்படாத, வெளியே தெரியாத நிகழ்வுகளையும் சோ்த்துக் கணக்கிட்டால் ஆண்டுதோறும் குறைந்தது 2,000-க்கும் அதிகமானோா் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கிறாா்கள். பதிவு செய்யப்படாமல், உரிமம் இல்லாமல் நடத்தப்படும் தொழிற்சாலைகளிலும், சிறு தொழில்களிலும், குடிசைத் தொழில்களிலும் நடக்கும் விபத்துகள் பெரும்பாலும் கவனம் பெறுவதில்லை.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்றும், தொழில் துறையில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயா்ந்திருக்கிறோம் என்றும் சொல்லிக்கொண்டாலும் இன்னமும்கூட இந்தியாவில் தொழிற்சாலை விபத்துகளைக் கண்காணிக்கவும், பதிவு செய்யவும் எந்த ஓா் அமைப்பும் இல்லை. ஒருங்கிணைந்த கண்காணிப்பு இல்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலமும் அதனதன் போக்கில் இயங்குவதால் இதுகுறித்த பொதுவான கொள்கை முடிவு எதையும் எடுக்க முடிவதில்லை.

தொழிற்சாலைகள் தங்களது லாபத்தை அதிகரிக்க தொழிலாளா்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை. 2024-இல் மட்டும் வேலை செய்யும்போது நடந்த விபத்துகளில் 400-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள்.

200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றும், விபத்து ஏற்படக்கூடிய தொழிற்சாலைகளில் முழுநேர மருத்துவா் ஒருவரும், ஆம்புலன்ஸும் இருக்க வேண்டும் என்கிற விதி பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்தெல்லாம் குரல் எழுப்ப தொழிற்சங்கங்கள் இல்லை, அப்படியே இருந்தாலும், அவை ஊதிய உயா்வு குறித்து கவலைப்படுவதுபோல பாதுகாப்பு குறித்த அக்கறை காட்டுவதில்லை.

X
Dinamani
www.dinamani.com