தீர்வு தனிப்படைக் கலைப்பல்ல!

தனிப்படைகளைக் கலைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தீர்வு அல்ல. பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து அதை சரி செய்ய அரசு முயற்சிக்க வேண்டும்.
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
காவல்துறை விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமார்
Published on
Updated on
2 min read

மனித உடலில் ஓர் உறுப்பில் சிறு கட்டி வந்துவிட்டால் அந்த உடல் உறுப்பை வெட்டி எறிவது சரியான சிகிச்சை முறை அல்ல. மாறாக, ஒட்டுமொத்த உடலில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு நோயின் வெளிப்பாடுதான் அந்தக் கட்டி என் பதை உணர்ந்து அதற்கேற்ப சிகிச்சை அளித்து கட்டியை அகற்றுவதுதான் சீராவதற்கான தீர்வாகும்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்ததையொட்டி காவல் நிலையங்களில் செயல்பட்டு வந்த அனைத்துத் தனிப்படைகளையும் கலைத்து காவல் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தனிப்படைகள் கலைக்கப்பட்டு அதில் பணியாற்றியவர்கள் அவரவரின் தாய்ப் பிரிவுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதுவரையில் அவர்கள் விசாரித்து வந்த வழக்குகளை இனி யார் விசாரிப்பார்கள்? வழக்குகளின் நிலை என்னவாகும்? குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்வது, திருட்டு வழக்குகளில் பொருள்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை செய்வது எப்படி? விசாரணையில் காலதாமதம் ஏற்படாதா என்கிற கேள்விகள் எழுகின்றன.

"தனிப்படை' என்பது காவல் துறையின் அதிகாரபூர்வமான கருத்தியல் கிடையாது. மாறாக, வழக்கின் முக்கியவத்துவத்தைப் பொருத்து தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. கொடுங்குற்றங்கள், பெரும் மதிப்புடைய திருட்டுகள், முக்கியமான பொது, அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை விசாரிக்கவும், கண்காணிக்கவும் அவை அமைக்கப்படும். குற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தை பொருத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வையில் சார்பு}ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு இந்த தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.

அண்மைக்காலமாக இந்தத் தனிப்படைகள் காவல் துறையில் உள்ள இதர பிரிவுகளைவிட அளவற்ற அதிகாரம் படைத்த பிரிவாக மாறத் தொடங்கியது என்பதே உண்மை. தனிப்படையில் உள்ளவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களின் செயல்பாடுகளும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே மாறிவிட்டன. அதற்குக் காரணம், தனிப்படைகளின் பணிகளின் தன்மை மாறத் தொடங்கியதுதான்.

அதிகாரிகளின் தனிப்பட்ட பணிகள், நிதி மற்றும் அதிகார முறைகேடுகள், வேண்டப்பட்டவர்களின் புகார்களை விசாரிப்பது போன்ற செயல்களுக்கும் தனிப்படைகளை பயன்படுத்துவது அதிகரிக்கத் தொடங்கியதால் அவர்களின் செயல்பாடுகள் வரைமுறைகளை மீறியது. தனிப்படையினரின் செயல்பாடுகளை கேள்வி கேட்க முடியாது என்பது மட்டுமல்லாது, அதில் உள்ள போலீஸôரில் சிலர் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பது, வர்த்தக நிறுவனங்களில் ஆதாயம் பெறுவது, சட்டவிரோத தொழில் செய்வோரிடம் மாமூல் பெறுவது என அவர்கள் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது என்பது ஒரு கலை. அதை அனுபவம் வாய்ந்த காவல் துறை அதிகாரிகள் அறிவர். அடித்து, உதைத்து வாங்க முடியாத சில உண்மைகளை அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் பேசியே கறந்து விடுவார்கள். எதற்கும் மசியாதவர்களிடம்தான் சட்டப்படி மனித உரிமை மீறல் என்றாலும்கூட, இறுதியாக மூன்றாம் தர விசாரணை முறைகள் மேற்கொள்ளப்படும்.

ஐ.பி.எஸ். அதிகாரியோ, டி.பி.எஸ். அதிகாரியோ தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடித்து வேலையில் சேர்ந்த உடன் அவருக்கு விசாரணை நுணுக்கங்கள் எல்லாம் அத்துபடி ஆகிவிடாது. புத்தகப் படிப்புக்கும், கள அனுபவத்துக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. அது தெரியாமல்தான் கம்பியால் தாக்கியும், சிகரெட்டால் சுட்டும், பற்களை பிடுங்கியும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

வழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளைக் கைது செய்வது வரைதான் தனிப்படையின் பணியாக இருக்கும். அதன் பிறகு விசாரணை மூத்த அதிகாரியின் முன்னிலையில் நடைபெறும். அவர் அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்கவோ, கீழ்நிலை காவலர்களிடம் ஒப்படைக்கவோ மாட்டார். குற்றவாளியை நோக்கி போலீஸôரின் கை எதுவரையில் நீளலாம் என்பதை அந்த அதிகாரி தெளிவாகவே தெரிந்திருப்பார். அப்படிப்பட்ட அதிகாரிகளின் தனிப்படைகளால் தவறு நிகழ வாய்ப்பில்லை.

மடப்புரம் கோயில் காவலாளி இறப்பு என்பது வெளியே தெரிந்துவிட்ட சம்பவம். வெளியே தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்று சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தனிப்படைகளைக் கலைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தீர்வு அல்ல. பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து அதை சரி செய்ய அரசு முயற்சிக்க வேண்டும்.

காவல் ஆணையங்களைத் தவிர்த்து, துறையில் அனுபவம் வாய்ந்த நேர்மையான, திறமையான இன்னாள், முன்னாள் அதிகாரிகள் நான்கைந்து பேரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து காவல் நிலையங்களில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை முனைப்புடன் செயல்படுத்தினால் மட்டுமே காவல் நிலைய மரணங்களைத் தடுக்க முடியும்.

Summary

Disbanding the police special forces is not the solution, and everything will be fine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com