
ஒரு மாதத்துக்கு முன்பு குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் நெருப்புக்கோளமாக தகர்ந்து விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும்கூட 142 கோடி இந்தியர்கள் மீளவில்லை. 260 உயிர்களைப் பலிகொண்ட அந்த பெரும் விபத்து இன்னும்கூட பலரைக் கனவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 287 ட்ரீம்லைனர் (ஏஐ171) ரக விமானம், வெளிநாட்டினர் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் அகமதாபாதிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. சில விநாடிகளிலேயே அருகில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.
நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஐஐபி) விசாரணை நடத்தி வருகிறது. 15 பக்கங்கள் கொண்ட தனது முதல் விசாரணை அறிக்கையை ஏஐஐபி வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை சில தகவல்களை வெளிப்படுத்துவதுபோலவே பல ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது.
விபத்து குறித்த முதல்கட்ட அறிக்கை என்பது முழுமையானது அல்ல என்றாலும்கூட விசாரணையின் போக்கு குறித்தும், உடனடி காரணமான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. முதல்கட்ட அறிக்கை இந்த இரண்டு அம்சங்களிலும் எந்தவிதத் தெளிவையும் ஏற்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக விசாரணையின் நம்பகத்தன்மை குறித்தும், போக்கு குறித்தும் ஐயப்பாட்டை எழுப்பி புதிய பல கேள்விகளுக்கு வழிகோலியிருக்கிறது.
என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கட்-ஆஃப் நிலையில் இருந்தது தொடர்பாக விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் உரையாடிக் கொள்வது விமானத்தின் கருப்புப் பெட்டியில் இடம்பெற்றுள்ள குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அந்தக் குரல் பதிவு ஐயப்பாடுகளுக்கு வழிகோலுகிறது.
விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் அதன் இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் கட்ஃஆப் நிலைக்குச் சென்றது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கையில் இல்லை. விமானம் தரையில் இருந்து புறப்பட்டவுடன் இரண்டு சுவிட்சுகளும் சில விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து கட் ஆஃப் நிலைக்குச் சென்றுவிட்டன. எரிபொருள் விநியோகம் தடைபட்டதும் இரண்டு என்ஜின்களும் படிப்படியாக செயல்பாட்டை இழந்துள்ளன.
விமானிகள் எரிபொருள் சுவிட்சுகளை இயக்க முயற்சித்திருக்கிறார்கள். அப்போது முதல் என்ஜினுக்கு மட்டும் எரிபொருள் விநியோகம் சீராகி இயங்கத் தொடங்கியிருக்கிறது. இரண்டாவது என்ஜின் செயல்படவில்லை. என்ஜின்கள் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியதும் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்கக்கூடிய "ரேம் ஏர் டர்பைன்' என்கிற உந்துவிசை சாதனம் செயல்பட்டது விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் நடத்திய ஆய்விலிருந்து, என்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகள் இரண்டும் செயல்படும் நிலையில் இருந்தன என்பது தெரிகிறது. அதிலிருந்து விமானம் விபத்தைச் சந்தித்ததற்கு முன்பாக விமானிகள் இவற்றை மீண்டும் இயக்க முயற்சித்தனர் என்பது உறுதியாகிறது என்பதை அறிக்கை தெரிவிக்கிறது.
என்ஜினுக்கு எரிபொருள் செல்வதைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகளை யாராவது ஆஃப் ஆக்கினார்களா அல்லது தயாரிப்புக் கோளாறால் அது தானாகவே கட்ஆஃப் நிலைக்குச் சென்றதா என்பது குறித்து அறிக்கையில் தெளிவில்லை. "ஏன் சுவிட்சை அணைத்தீர்கள்?' என்று விமானிகளில் ஒருவர் கேட்பதும், "நான் அணைக்கவில்லை' என்று சக விமானி பதிலளிப்பதும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் பதிவிலிருந்து தெரியவந்திருக்கிறது.
இரண்டு விமானிகளும் அனுபவசாலிகள். தலைமை விமானி சுமீத் சபர்வால் 8,596 மணி நேரம் போயிங் 787 விமானத்தைச் செலுத்தியவர். சக விமானி க்ளைவ் குந்தர் 1,128 மணி நேரம் அந்த விமானத்தில் பறந்திருக்கும் அனுபவசாலி. அவர்கள் இருவருமே கைதவறி சுவிட்சுகளை அணைத்திருக்க வாய்ப்பில்லை.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் எலக்ட்ரிக்கல் அமைப்பிலோ, காக்பிட்டின் கட்டமைப்பிலோ ஏற்பட்டிருக்கும் தவறு காரணமாகக்கூட தன்னிச்சையாக சுவிட்ச் கட்ஆஃப் நிலைக்குச் சென்றிருக்கும் வாய்ப்பைப் புறந்தள்ள முடியாது. விமானிகள் தங்களின் உயிருக்கு ஆபத்தான எதையும் செய்துவிட மாட்டார்கள் என்பது தெளிவு.
போயிங் விமானங்களின் ஃபியூயல் கட் ஆஃப் சுவிட்சின் செயல்பாடு குறித்து அமெரிக்கன் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் 2018-இல் விமான சேவை நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கியிருக்கிறது. அதை ஏர் இந்தியா கருத்தில்கொண்டு விமானம் புறப்படும்போது பரிசோதித்ததா என்பதை விசாரணைதான் தெளிவுபடுத்த முடியும். சிறிய தவறுகள்கூட நிரபராதிகளான பலரின் உயிர்களுக்கு உலைவைத்துவிடும் என்பதை விமான சேவை நிறுவனங்கள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
அவசரப்பட்டு விமானிகள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரின் முழுமையான பதிவு வெளியிடப்படவில்லை. முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது என்பது சரி. அதே நேரத்தில் விசாரணை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை ஏர் இந்தியா நிறுவனத்துக்கும், போயிங் நிறுவனத்துக்கும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.