வாவ்வ் விம்பிள்டன்!

விம்பிள்டனில் புதிய தலைமுறையினரால் புது வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.
வாவ்வ் விம்பிள்டன்!
Published on
Updated on
2 min read

விம்பிள்டனில் புதிய தலைமுறையினரால் புது வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. ஆல் இங்கிலாந்து கிளப்பின் விம்பிள்டன் சென்ட்டர் கோர்ட் டென்னிஸ் மைதானம் அடுத்த தலைமுறை சாம்பியன்களை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அமெச்சூர் விளையாட்டுப் போட்டியாக இருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, 1968-இல் தொழில்முறைப் போட்டியாளர்களின் (ப்ரொஃபஷனல்) களமாக மாறியது. அது முதல் அந்த மைதானம் உருவாக்கிய தலைசிறந்த வீரர்களின் பட்டியலில் இந்த ஆண்டு யானிக் சின்னரும், இகா ஸ்வியாடெக்கும் இணைகிறார்கள்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதலாவது இத்தாலியர் என்று வரலாறு படைத்திருக்கிறார் யானிக் சின்னர் என்றால், விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது போலந்து வீராங்கனை என்கிற பெருமையைப் பெறுகிறார்இகா ஸ்வியாடெக். இருவரும் முதல் முறையாக விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்கு வந்தது மட்டுமல்லாமல் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார்கள்.

கடந்த ஏழு சர்வதேசப் போட்டிகளில் யானிக் சின்னரும், கார்லோஸ் அல்கராஸூம் மோதி இருக்கிறார்கள். 2023, 2024 விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் என்பது மட்டுமல்லாமல், கடந்த ஐந்து போட்டிகளில் சின்னரை அரையிறுதி, இறுதிச் சுற்றில் தோற்கடித்தவர் ஸ்பெயினைச் சேர்ந்த அல்கராஸ். இந்த முறையும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறை விம்பிள்டன் கோப்பையை வென்றவர் என்ற பெருமையை அடையக் காத்திருந்த அல்கராஸூக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது போட்டி.

இதற்கு முன்பு நடந்த பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் அல்கராஸிடம் தோல்வி அடைந்த யானிக் சின்னர், விம்பிள்டன் இறுதிச் சுற்றின் முதல் செட்டில் 4-6 என்று பின்னடைவைச் சந்தித்தபோது, கோப்பை அல்கராஸூக்குத்தான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன் பிறகு, சற்றும் பதற்றமடையாத சின்னரால் 6-4, 6-4, 6-4, என்று அவர் வீழ்த்தப்பட்டு புதிய வரலாறு சென்ட்டர் கோர்ட்டில் படைக்கப்பட்டது.

அரை இறுதிச் சுற்று அல்லது இறுதிச் சுற்றில் அவர்கள் இருவரும் இதுவரையில் மொத்தமாக 10 முறை மோதியிருக்கிறார்கள். இந்த முறை விம்பிள்டன் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் முன்பு ரோஜர் ஃபெடரரும், ரஃபேல் நடாலும் மோதிக்கொண்ட இறுதிச் சுற்றுகளை நினைவு கூர்ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோலத்தான் இந்த ஆண்டில் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றும் பழைய நினைவுகளைக் கிளறின. விளையாடத் தொடங்கிய 57 நிமிஷங்களில் விம்பிள்டனில் புதியதொரு சாம்பியனாக போலந்தின் இகா ஸ்வியாடெக் உயர்ந்தார். இதற்கு முன்னால் விம்பிள்டனில் காலிறுதிச் சுற்றைக்கூடக் கடந்திராத ஸ்வியாடெக், கோப்பையை வென்றது நிஜமாகவே ஒரு வரலாற்று வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

6-0, 6-0 என்று இரண்டே செட்களில் அமாண்டா அனிஸிமோவாவை ஸ்வியாடெக் வீழ்த்தியதை பிரமிப்புடன் ரசிகர்கள் பார்த்து வியந்தனர். 1988 பிரெஞ்சு ஓபனில் ரஷியாவின் நதாஷா ஸ்ரேவாவை ஸ்டெஃபி கிராஃப் இதே போலத் தோற்கடித்திருக்றார். இதற்கு முன்னால் நான்கு முறை பிரெஞ்சு ஓபனிலும் ஒரே ஒரு முறை அமெரிக்க ஓபனிலும் வென்றிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக்கின் வெற்றியில் இன்னும் சில வரலாற்றுச் சாதனைகளும் இருக்கின்றன. தனது முதல் விம்பிள்டன் இறுதிச் சுற்றில் கோப்பையைப் பெற்றார் என்பது மட்டுமல்லாமல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்காவை அரை இறுதிச்

சுற்றில் வீழ்த்தியும் இருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு.

வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளுக்குப் பிறகு இப்போது, மகளிர் டென்னிஸில் புதிய சாம்பியன்களின் அணிவகுப்பு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எட்டு போட்டிகளில் புதிய சாம்பியன்கள் உருவாகி இருக்கிறார்கள். 1968 முதல் நடந்த 57 விம்பிள்டன் போட்டிகளில் 35 கோப்பைகள் ஆறு வீராங்கனைகளால் வெல்லப்பட்டுள்ளன என்பது வரலாறு.

மார்ட்டினா நவரத்திலோவா (9), ஸ்டெஃபி கிராஃப் (7), செரீனா வில்லியம்ஸ் (7), வீனஸ் வில்லியம்ஸ் (5), பில்லி ஜீன் கிங் (4), கிறிஸ் எவர்ட் (3) என்று ஒரு சிலர் மட்டுமே விம்பிள்டனின் "வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ்' எனப்படும் பதக்கத்தை வென்றுவந்த நிலைமைக்கு 2017 முற்றுப்புள்ளி வைத்தது. 2020-இல் கொவைட் கொள்ளை நோய் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. 2017-இல் வீனஸ் வில்லியம்ûஸ வீழ்த்தி ஸ்பெயினின் கர்பின் முகுருஸா, 2018-இல் ஜெர்மனியின்

ஏஞ்சலிக் கெர்பெர், 2019-இல் ருமேனியாவின் சிமோனா ஹாலேப், 2021-இல் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி, 2022-இல்

கஜகஸ்தானின் எலேனா ரைபகினா, 2023-இல் செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரோ சோவா, 2024-இல் செக் குடியரசின் பார்பரா க்ரேஜிகோவா, இப்போது போலந்தின் ஸ்வியாடெக் என்று புதியவர்கள் வெற்றி வலம் வருகிறார்கள்.

ஆடவர் பிரிவில் இனிமேல் சின்னர் -அல்கராஸ் காலம் என்றால், மகளிர் பிரிவில் அரை டஜன் வீராங்கனைகள் களத்தில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் ஸ்டெஃபி

கிராஃபாகவும், செரீனா வில்லியம்ஸாகவும் உயரப் போகிறார்கள் என்பதைக் காலம்தான் அடையாளம் காட்டும். ஆனால், இப்போதைக்கு ஒன்று மட்டும் நிச்சயம், ஜோகோவிச்சின் காலம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.

விம்பிள்டன் பரபரப்பு ஓய்ந்த கையோடு அடுத்து நடக்க இருக்கும் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் குறித்த எதிர்பார்ப்பு உயர்ந்து விட்டது. இந்திய ஆட்டக்காரர்கள் கிராண்ட் ஸ்லாமில் சாதனை புரியும் காலத்துக்காக நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கப் போகிறோமோ, அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com