
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமான உணவுப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க, சேவை உரிமம் பெற்ற நிறுவனங்களின் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அல்லது "ஐஆர்சிடிசி' மூலம் அடையாள அட்டைகள் வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள், கலப்படமான உணவுப் பொருள்களை விற்று பயணிகளின் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்குத் தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்தப் புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம், அளவு, விலை, சுகாதாரம் ஆகியவற்றையும், அவற்றை விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களின் செயல்பாடுகளையும் ரயில்வே நிர்வாகம் கண்காணிக்க இது உதவும் என்று நிர்வாகம் கருதுகிறது.
கடந்த மே மாதம் கேரள மாநிலம், கொச்சி மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள தனியார் உணவு தயாரிப்புக் கூடம் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 50 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கைப்பற்றியதுடன் உணவுக்கூடத்துக்கும் "சீல்' வைத்தனர்; ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
விசாரணையில், ரயில்களில் விற்பனை செய்ய அங்கிருந்து உணவு தயாரிக்கப்படுவது தெரியவந்தது. வேடிக்கை என்னவென்றால், அந்த உணவுக் கூடம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்றிதழைப் பெற்றிருந்தது என்பதுதான்.
அண்மையில், விராவல்-ஜபல்பூர் (வண்டி எண் 11463) விரைவு ரயிலில், உணவு மற்றும் தண்ணீரை அதிக விலைக்கு விற்றதைக் கண்டித்த பயணியை விற்பனையாளர் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்களில் இயங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் குறித்துப் புகார் எழுப்பவோ, அவர்களது நடவடிக்கைகளை தட்டிக் கேட்கவோ வழி இல்லை. முன்பு ரயில்வே நேரடியாக பயணிகளுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்தபோது அதன் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க முடிந்ததுபோல இப்போது அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நாடு முழுவதும் நாள்தோறும் இயக்கப்படும் சுமார் 13,000 ரயில்களில் சுமார் 2.5 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். அனைவரும் தமக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரைக் கொண்டு வருவதில்லை. ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தண்ணீர் இருந்தாலும் அவற்றை நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. எனவே, அங்கு விற்பனை செய்யப்படும் உணவையும், தண்ணீரையும் மட்டுமே பயணிகள் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள அனுமதி பெற்ற விற்பனையகங்களில் வாங்கும் பொருள்களுக்கு ரசீது கொடுக்காவிட்டால் அது இலவசம் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால், எந்தக் கடையிலும் அவர்களாகவே ரசீது கொடுப்பதில்லை. ரயில்களில் ரூ. 15-க்கு விற்க வேண்டிய குடிநீர் பாட்டில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. பயணிகள் கேட்டால், அது ரயில் நிலையங்களில்
ரூ.15 என்றும், ஓடும் ரயிலில் ரூ.20 என்றும் புதுவிதமான விளக்கத்தை அளிக்கின்றனர். உணவின் விலை விற்பனையாளர்களின் விருப்பம்போல நிர்ணயிக்கப்படுகிறது. உணவின் தரம் குறித்தும், அளவு குறித்தும் ஏராளமான புகார்கள் உண்டு.
நீண்ட தொலைவு ரயில்கள் பலவற்றில் முன்புபோல சமையல்கூடப் பெட்டிகள் (பேண்ட்ரி கார்) இருப்பதில்லை. ரயில் நிலைய வளாகத்துக்கு வெளியே சமைக்கப்பட்டு உணவுப் பொருள்கள் ரயில் பெட்டிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், உணவின் தரத்தை அதிகாரிகளால் தொடர்ந்து ஆய்வு செய்யவோ, கண்காணிக்கவோ முடிவதில்லை. இதனால், தரத்துக்கு உத்தரவாதம் இருப்பதில்லை.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த அதிர் ரஞ்சன் செüதரி தலைமையிலான பொதுக்கணக்கு குழு, 2024 பிப்ரவரியில் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே நிர்வாகம் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் உணவு தயாரிப்புக் கொள்கை காரணமாக உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை சமரசத்துக்கு இட்டுச் செல்கிறது எனச் சுட்டிக்காட்டியது.
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள், செலவைக் குறைத்து அதிக லாபம் பெறும் நோக்கிலும், ஒப்பந்தங்களைப் பெற அதிகாரிகளுக்கு கொடுக்கும் கையூட்டுச் செலவை ஈடுகட்டவும் உணவின் தரம் மற்றும் அளவில் சமரசம் செய்து கொள்கின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. உரிமம் பெறுவதால் கிடைக்கும் ஏகபோகம் காரணமாக ஏற்படும் போட்டியால் பயணிகள் தாங்கள் விரும்பும் பொருள்களைப் பெற முடியாமல் போவதற்கும், வேறு வழியில்லாமல் தரமற்ற பொருள்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்துக்கும் உள்ளாகிறார்கள். இது குறித்தும் நிர்வாகம் சிந்தித்து மாற்றுவழி காணவேண்டியது அவசியம்.
சேவைகளில் உள்ள குறைபாடுகளைத் தெரிவிக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள தொலைபேசி எண்களில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிர்வாகம் கூறினாலும், அவற்றின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அடையாள அட்டை வழங்குவதாலேயே பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.