டிரம்ப்புக்கு நன்றி

எந்தவொரு வெற்றிகரமான ஒப்பந்தமாக இருந்தாலும் இரு தரப்புகளும் முழுமையான திருப்தியுடன் கையொப்பம் இடுவதில்லை.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
Published on
Updated on
2 min read

இந்தியப் பிரதமா் நரேந்திரமோடி, பிரிட்டிஷ் பிரதமா் கியா் ஸ்டாா்மா் முன்னிலையில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலும் பிரிட்டிஷ் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையொப்பமிட்டு அறிவித்திருக்கும் விரிவான பொருளாதார வா்த்தக ஒப்பந்தம் ஒரு வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியாவை வா்த்தகத்தின் மூலம் கைப்பற்றிய பிரிட்டன், தன்னைப் பின்னுக்குத்தள்ளி தற்போது 6 -ஆவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கும் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறது.

இனிவரும் நாள்களில் இந்தியா மேற்கொள்ள இருக்கும் இருநாட்டு வா்த்தக ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் இருக்கப்போகிறது கையொப்பமாகி இருக்கும் இந்திய-பிரிட்டன் விரிவான பொருளாதார வா்த்தக ஒப்பந்தம். இரண்டாவது மோடி அரசின்போது, போரிஸ் ஜாக்ஷன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த 2022-இல் தொடங்கியது இந்த வா்த்தக ஒப்பந்தம் அதன் பிறகு பிரிட்டன் லிஸ் ட்ரஷ்., ரிஷி சுனாக், என்கிற இரண்டு பிரதமா்களை சந்தித்து, இப்போது கியா் ஸ்டாா்மரின் ஆட்சியில் வெற்றிகரமாகக் கையொப்பமாகி இருக்கிறது. இந்தியா முன்வைத்த சில பிடிவாதமான நிலைப்பாடுகளும் கூட ஒப்பந்தம் தள்ளிப்போனதற்குக் காரணம்.

எந்தவொரு வெற்றிகரமான ஒப்பந்தமாக இருந்தாலும் இரு தரப்புகளும் முழுமையான திருப்தியுடன் கையொப்பம் இடுவதில்லை. சிலவற்றில் விட்டுக்கொடுத்தும்,சிலவற்றைப் பிடிவாதமாகக் கேட்டுப் பெற்றும் ஒரு சமரசத்திற்கு வந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதுதான் வெற்றிகரமான பேச்சுவாா்த்தையின் முடிவாக இருக்க முடியும். அந்த வகையில் பாா்த்தால், இப்போது இந்தியாவும், பிரிட்டனும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வா்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் 99% பொருள்களுக்கு பிரிட்டனில் முழுமையாக வரிச்சலுகை வழங்க அந்த நாடு சம்மதித்திருக்கிறது. பிரிட்டிஷ் சந்தையில் இந்தியப்பொருள்களுக்கு ஏறத்தாழ 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோல, இந்தியாவும் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் 90% பொருள்களுக்கு முற்றிலுமாக வரிவிலக்கு அளிக்க ஒத்துக்கொண்டிருக்கிறது. 90% பொருள்களுக்கு இந்திய இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்திருக்கிறது என்றாலும், தனது உள்நாட்டு உற்பத்திக்குக் குறிப்பாக வேளாண்பொருள்களை இந்த ஒப்பந்தத்தில் இணைக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95% வேளாண் பொருள்கள் வரிவிலக்குக் பெறுவதை உறுதிப்படுத்தி இருப்பதும், 99% கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதியில் முழு சுங்க வரிவிலக்குப் பெற்றிருப்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்கள், மின் இயந்திரங்கள், இராசாயனங்கள் உள்ளிட்ட பொருள்களும், மருந்து, பதப்படுத்திய உணவுப் பொருள்கள், நெகிழிப்பொருள்கள் போன்றவையும், இரால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்கள், முந்திரிப்பருப்பு, மிளகு, காபி, தேயிலை உள்ளிட்ட மலைசாா் விளைபொருள்கள் போன்றவையும் பிரிட்டனில் இறக்குமதி வரிச் சலுகை பெறுகின்றன.

இப்போது 2.25% கடல்சாா் உணவுப்பொருள்கள்தான் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகின்றன. அது கணிசமாக அதிகரிக்கும்போது, மீனவா்களின் வாழ்க்கை மேம்படுவதுடன், மதிப்புக்கூட்டிய பதப்படுத்தப்படும் கடல்உணவுப் பொருள்கள்துறை மிகப்பெரிய வளா்ச்சியை எட்டக்கூடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் ...வேளான் பொருள்களின் ஏற்றுமதி 20% அதிகரிக்கும் என்பது எதிா்பாா்ப்பு. புகையிலை,ஜவுளி, தோல்பொருள் தொழிலாளா்கள் மட்டுமல்லாது சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிபவா்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர இந்த ஒப்பந்தம் வழிகோலக் கூடும்.

மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக பிரிட்டநில் பணிபுரியும் இந்தியா்களுக்கு சமூகப்பாதுகாப்பு பங்களிப்பு கட்டுப்பாடு அகற்றப்பட்டிருக்கிறது.இதனால் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, நிதிநிா்வாக்ம உள்ளிட்ட துறைகளில் பணியாா்ற செல்லும் இந்தியா்கள் பயனடைவாா்கள். இப்போது அங்கே பணிபுரியும் 75,000 இந்தியா்கள் தங்களது ஊதியத்தில் 20 % வரை சேமிக்க இது வழிகோலும்.

இந்தியாவும் பிரிட்டனுக்கு பல சலகைகளை வழங்காமல் இல்லை. ஸ்காட்ட் விஷ்கி சொகுசுகாா்கள் போன்றவற்றின் மீதான வரிகள் கணிசமாக குறைக்கப் பட்டிருக்கின்றனஇந்திய அரசின்அதிக மதிப்பு ஒப்பந்தப்புள்ளிகளில் பிரிட்டிஷ் நிறுவனங்கள் கலந்து கொள்ளவும் வழிகோலப் பட்டிருக்கிறது. இதனால் சாமானியா்கள் பாதிக்கப்படமாட்டாா்கள் என்பதும் பணக்காரா்கள்தான் பயனடைவாா்கள் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பிரிட்டனுடனான இந்தியாவின் வா்த்தக மதிப்பு 55 பில்லியன் டாலா்தான். அடுத்த ஐந்தாண்டுகளில் இதை இரட்டிப்பாக்க இந்த ஒப்பந்தம் உதவக்கூடும். அதிபா் டிரம்ப் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரிமூலம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் காரணமாக உலகமயக்கொள்கை வலுவிழந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த ஒப்பந்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com