
மூன்றாவது மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவின் பாட்டுமி நகரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் சார்பில் 9 பேர் உள்பட மொத்தம் 107 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். இதில் சாம்பியனாகி 19 வயதேயான திவ்யா தேஷ்முக் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்தப் போட்டி பலவிதங்களில் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன்னர் இந்தியர்கள் யாரும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதில்லை. இந்த முறை திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். ஹம்பியும், திவ்யாவும் இதற்கு முந்தைய சுற்றுகளில் ஒரே ஒரு சுற்றில் மட்டுமே தோல்வி கண்டு முன்னேறியபோது சாம்பியன் பட்டம் இந்தியாவுக்குத்தான் என்பதை உறுதி செய்தனர்.
மகளிர் பிரிவில் கடந்த பல ஆண்டுகளாகவே சீன வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 1991 முதல் இதுவரையிலான உலகக் கோப்பை அல்லாத 21 உலக சாம்பியன் போட்டிகளில், 16-இல் சீன மகளிர்தான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளனர். நடப்பு சாம்பியன் ஜு வென்ஜுன் தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன் ஆனவர்.
இந்தப் போட்டியின் தரவரிசையில் சீனாவின் லீ டிங்ஜி, ஜு ஜினெர், டான் ஸோங்யி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருந்தனர். ஹம்பி 4-ஆவது இடத்திலும் திவ்யா 15-ஆவது இடத்திலும் இருந்தனர். இந்தப் பின்னணியில், திவ்யா இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என யாரும் கணித்திருக்க முடியாது.
38 வயதான ஹம்பி கிராண்ட் மாஸ்டர் ஆனபோது (2002) திவ்யா பிறக்கக்கூட இல்லை. தன்னைவிட இருமடங்கு வயதுடையவரும் உலக ரேபிட் செஸ் சாம்பியனுமான ஹம்பியை இறுதிச் சுற்றில் திவ்யா எதிர்கொண்டு 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 28) வென்றபோது விளையாட்டு உலகமே வியந்து பார்த்தது. திவ்யா அப்போது கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறாதவர் என்பதைக் குறிப்பிடவேண்டும்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை, இளம் வீராங்கனை என்ற பெருமையை திவ்யா பெறுகிறார். ஆடவர்களில்கூட விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே உலகக் கோப்பையை (2002) வென்றுள்ளார் என்கிற பின்னணியில் பார்க்கும்போது திவ்யாவின் சாதனை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த வெற்றியை அடுத்து கிராண்ட் மாஸ்டரானார் திவ்யா. இந்திய மகளிரில் இதற்கு முன்னர் ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி ஆகியோர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்யாவின் எழுச்சி வியக்க வைக்கிறது. ஐந்து வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய மகளின் விளையாட்டுக்காக, மகப்பேறு மருத்துவரான அவரது தாயார் நம்ரதா தனது தொழிலையே கைவிட்டார்.
சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய போட்டியில் சாம்பியன், 2014-இல் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாம்பியன், 2017-இல் 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன், குஜராத்தின் காந்தி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் போட்டியில் சாம்பியன், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணி தங்கம் வெல்லக் காரணமானவர், அந்தப் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் என வெற்றி மீது வெற்றி பெற்று வருபவர் திவ்யா.
கடந்த ஓராண்டை செஸ் விளையாட்டில் இந்தியாவின் பொற்காலம் என்றே கூற வேண்டும். 2024 செப்டம்பரில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் ஓபன், மகளிர் பிரிவுகளில் இந்திய அணி தங்கம் வென்றது; இதில் தனிநபர் பிரிவுகளில் குகேஷ், அர்ஜுன், திவ்யா, வந்திகா ஆகியோர் தங்கம் வென்றனர்; அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் கடந்த 2024 நவம்பர் - டிசம்பரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சென்னையைச் சேர்ந்த 18 வயதேயான குகேஷ் கோப்பையை வென்று சாதனை படைத்தார்; நியூயார்க்கில் கடந்த 2024 டிசம்பரில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் ஹம்பி சாம்பியன் ஆனார்; இப்போது திவ்யா உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றதன் வாயிலாக செஸ் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது எனலாம்.
விஸ்வநாதன் ஆனந்த் 35 ஆண்டுகளுக்கு முன்னர் விதைத்த விதை, இன்று ஆலமரமாக பரந்து விரிந்துள்ளது. எண்ணற்ற இந்திய ஆடவரும் மகளிரும் செஸ் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றனர். உலகத் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ஆர்.பிரக்ஞானந்தா (4), அர்ஜுன் எரிகைசி (5), டி.குகேஷ் (6) ஆகியோரும், மகளிர் பிரிவில் ஹம்பி (5), டி.ஹரிகா (12), பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி ஆர்.வைஷாலி (15), திவ்யா தேஷ்முக் (18) ஆகியோரும் முதல் 20 இடங்களுக்குள் உள்ளனர்.
செஸ் போட்டிகளில் இளைஞர்கள், இளம்பெண்களின் சாதனை மேலும் பலருக்கும் ஊக்கம் அளிப்பதுடன், அந்த விளையாட்டின் தாயகமான இந்தியா கோலோச்சும் நிலைக்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். போட்டியின் இறுதிக்கு ஹம்பியும், திவ்யாவும் தகுதி பெற்றபோது, "இந்தியாவின் மூவர்ணக் கொடி மீண்டும் விண்ணளாவ பறக்கிறது' என்று ஹம்பி குறிப்பிட்டது உண்மையிலும் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.