
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வயது முதிர்வை எட்டியதும் ஓய்வுபெறுவது என்பது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அமைப்புகளின் செயல்பாடுகள் தொடரவும், பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவையான ஊழியர்கள் இருக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி வந்த 8,144 ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளனர். நடப்பாண்டில் ஒரே நாளில் ஓய்வு பெறுவோரில் இது அதிக எண்ணிக்கை . இதனால் அரசு இயந்திரம் முடங்கி விடாது என்றாலும் பணிகளில் பாதிப்பு ஏற்படாது எனக் கூற முடியாது.
நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய பிரதேசங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாடு அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகும். நீதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறியீடுகளின் (2023-24) அடிப்படையில் 3-ஆவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. அது மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்குகிற மாநிலம் இது.
வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும், அந்த வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநில அரசுகளின் திட்டங்கள் மட்டுமல்லாது மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களும் ஏராளம்.
அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அவை பொதுமக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதிலும் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆளும் அரசுகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஊழியர்கள் அவ்வப்போது சில பாதிப்புகளை எதிர்கொண்டாலும் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது என்பதை ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்லர்.
தமிழக அரசின் 43 துறைகளில் கீழ்நிலைப் பணியாளரான அலுவலக உதவியாளர்முதல் தலைமை அதிகாரி வரையில் அனுமதிக்கப்பட்ட பணி இடங்களின் எண்ணிக்கை என்பது சுமார் 14 முதல் 15 லட்சம் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் தற்போது சுமார் 9.50 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். எஞ்சியுள்ள சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த மாதம் ஓய்வு பெற்றுள்ளவர்கள் மொத்த ஊழியர்களில் ஒரு சதவீதத்துக்கும் (0.86) குறைவுதான் எனக் கூறி அசட்டை செய்துவிட முடியாது. காரணம், இந்த நிதியாண்டில் தொடர்ந்து சுமார் 20,000 பேர் வரை ஓய்வு பெற இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதனால் பாதிப்புகள் வெளியே தெரிய வருமுன் அரசு ஊழியர்களுக்கான தேர்வுப் பணிகளை தொடங்க வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசுத் துறைகளில் சுமார் 75,000 காலிப் பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் என அறிவித்தார். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூலம் 17,595, ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் 19,260, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்மூலம் 3,041, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6,688 பேர் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவித்தார். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட இதர துறைகள்மூலம் 30,219 பேர் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.
அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,566 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. போட்டித் தேர்வுகள் முடிவடைந்து பல சுற்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டும் இதுவரையில் அதற்கான தேர்வுகூட நடத்தப்படவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூலம் கடந்த 2022, 2024-ஆம் ஆண்டுகளில் அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் ஏற்பட்ட இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட தொகுதி 4-இன் கீழான காலிப் பணியிடங்களில் 17,799 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 3,560 பேரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் கடந்த ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி 31.84 லட்சம் பேர்; இவர்களில்14.32 லட்சம் பேர் ஆண்கள், 17.52 லட்சம் பேர் பெண்கள். அனைவருக்கும் உயர் கல்வி என்று மாறிவிட்டிருக்கும் நிலையில், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருப்பது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் பெருகி வருவது ஒரு புறம் என்றால், வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மறுபுறம். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப நபர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தேர்வாணையங்களும், தேர்வு வாரியங்களும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அரசு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். அப்போதுதான் அரசு இயந்திரம் சுமுகமாக செயல்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.