
நாட்டின் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு 13.8 கோடியாக இருந்த நிலையில், இது 2031-இல் 19.4 கோடியாக அதிகரிக்கும் என்று மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வயதான பெற்றோரைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் வாரிசுகள் செவிலியர் உதவியாளர்களைப் பணிக்கு அமர்த்தும் போக்கு அதிகரித்து வருகிறது .இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்புகள் வலுவாக இருந்தாலும், மருத்துவம் அல்லாத சேவைகளை வழங்க பயிற்சி பெற்ற செவிலியர் இல்லாதது மிகப் பெரிய குறை.
நகரங்களில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் முதியோர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியில் செவிலியர் உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதியோர்களுக்கு சரியான நேரத்தில் மாத்திரைகள், உணவு போன்றவற்றை வழங்குவது மற்றும் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவிகரமாக அவர்கள் இருந்துவருகின்றனர்.
முதியோருக்கு வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பு, உதவிக்காக உதவியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், செவிலியர் உதவியாளர்களின் தேவை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதற்காக சில தனியார் நிறுவனங்கள் நபர்களை மாத ஊதிய அடிப்படையில் வழங்கி வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.
மேலும், செவிலியர்களை அதிக ஊதியம் கொடுத்து வீடுகளில் முதியோர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியில் உதவியாளர்களாக ஈடுபடுத்துவதும், ஒருவகையில் அவர்களின் திறன்கள் பலருக்கும் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும். எனவே, முதியோர் மற்றும் நலம் சார்ந்த பயிற்சிகளை வீட்டு சுகாதார உதவியாளர்களுக்கு அளிக்க வேண்டியது கட்டாயம். இதற்காக செவிலியர் ஆணையம் அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். முதியோர்களைக் கவனித்துக் கொள்ளும் உதவியாளர்களுக்கான சான்றிதழ் பயிற்சி தொடங்கப்பட வேண்டும்.
மேலும், அவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்போது, அவர்கள் போதிய மருத்துவ அறிவுடனும், சமயோஜிதத்துடனும் பணியாற்றுவர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மருத்துவ உதவியாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளித்து முறைப்படுத்தியுள்ளன.
செவிலியர்கள் பற்றாக்குறை இந்தியா முழுவதும் பரவலாக உள்ளது. இந்திய மக்கள்தொகையின்படி, 670 பேருக்கு ஒரு செவிலியர் என்ற விகிதமே தற்போது உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 300 பேருக்கு ஒரு செவிலியர் என்ற நிலையைவிட ஒரு மடங்கு அதிகமாக உள்ளது.
தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆயிரம் பேருக்கு 2 செவிலியர்கள் என்ற நிலை உள்ளது. இதை ஈடுகட்டும் விதமாக வீடுகளில் முதியோர் பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கு சான்றளிக்கப்பட்ட வீட்டு சுகாதார உதவியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இவர்கள் வீடுகளில் தனிநபர்களுக்கு மருத்துவம் சாராத பணிகளிலும், அடிப்படை சுகாதார கண்காணிப்பு-அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்கும் உதவுபவர்கள்.
இவர்கள் நோயாளிகள் அல்லது முதியோர்களுக்கு உடல்நலம் சார்ந்த உதவி செய்வதற்கு அப்பால், தோழமை மற்றும் உணர்வுபூர்மான ஆதரவை வழங்குகின்றனர். எனவே, மருத்துவ நிபுணர்களாக இல்லாவிட்டாலும் குடும்பச் சுமைகளைக் குறைப்பதில் சான்றளிக்கப்பட்ட வீட்டுச் சுகாதார உதவியாளர்கள் இன்றியமையாதவர்களாகி விட்டனர்.
அமெரிக்காவில் 10-ஆம் வகுப்பு நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு 75 முதல் 120 மணிநேரம் வரை பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிளஸ் 2 நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு 12 வார பயிற்சி வழங்கப்படுகிறது. இது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமைகிறது.
சர்வதேச தரத்தில் இந்தப் பயிற்சிகளை இந்தியாவில் தொடங்கினால், கல்லூரிப் படிப்புகளை பாதியிலேயே நிறுத்தியவர்கள் முறையான சான்றிதழ் பெற்று வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பைப் பெறலாம். மருத்துவத் துறையின் தொழில்நுட்பத்தால் தொலை மருத்துவம் போன்றவற்றில் மருத்துவரின் அறிவுரையை ஏற்று வீடுகளிலேயே நோயாளிகள், முதியோருக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கும் வசதியும் மருத்துவ உதவியாளர்களால் சாத்தியமாகும். இது தொடர் பயிற்சியால் மட்டுமே கிடைக்கும்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக மட்டும் இல்லாமல் மாநில அளவிலான செவிலியர் கவுன்சில் வாயிலாக அளிக்கப்படும்போது, அது இன்னும் சிறப்பானதாக அமையும். முதியோர் நலன் சார்ந்த பாதுகாப்புகளையும் மேம்படுத்தலாம்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு மருத்துவ உதவியாளர்களுக்கு உரிமம் போன்றவற்றை வழங்கும்போது, பிற சுகாதாரப் பணியாளர்களைப் போல இவர்களையும் முறைப்படுத்தலாம். இதனால், அவர்களின் தொழில் சார்ந்த பொறுப்புணர்வுகள் அதிகரிக்கும்.
ஞாபக மறதி நோய் (டிமென்ஷியா), நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிந்தைய பராமரிப்பு போன்றவற்றுக்கு சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வீட்டு சுகாதார உதவியாளர்களின் பணிகளை அங்கீகரிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, முதியோர் நலம் பாதுகாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.