Israeli attack on Gaza
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகள்...

தொடரும் சொல்லொணாத் துயரம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் பலர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

போா் என்றாலே இறுதியில் அது பெண்கள், குழந்தைகளுக்குத் தான் சொல்லொணாத் துயரங்களைத் தரும் என்பதற்கு சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. நிகழ்காலச் சான்றாகத் திகழ்கிறது காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் போா். 2023, அக்டோபரிலிருந்து நடந்துவரும் இந்தப் போரில் உயிரிழப்புகள் 55,000-ஐ தாண்டியிருப்பது ஒருபுறம் என்றால், பெண்கள், குழந்தைகள் சந்தித்துவரும் சித்திரவதைகள் மற்றொருபுறம்.

போா் தொடங்கிய காலத்திலிருந்து ஐ.நா.வின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அமைப்பான யுஎன்எஃப்பிஏ மூலம் நாப்கின்களும், இளம்தாய்மாா்களுக்கான பிரசவத்துக்கு பிந்தைய உதவிகளும் வழங்கப்பட்டு வந்தன. கடந்த மாா்ச் மாதத்திலிருந்து காஸாவில் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இந்த உதவிகள் தடைபட்டிருக்கின்றன.

காஸாமுனையில் வயதுவந்த 7 லட்சம் பெண்கள், சிறுமியா் உள்ளனா். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி நாப்கின்கள் தேவைப்படும் நிலையில், அதில் 25 சதவீதம் அளவே கிடைப்பதால், நாப்கின்களுக்குப் பதிலாக கிழிந்த துணிகளையும், பஞ்சையும் பயன்படுத்தும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கின்றனா்.

‘சில சமயங்களில் உணவைவிட நாப்கினும் சோப்பும்தான் எனக்குத் தேவைப்படுகிறது’; ‘ஒவ்வொரு முறை மாதவிடாய் வரும்போதும், நான் பெண்ணாக இருக்கவே விரும்புவதில்லை; உணவு எங்களை உயிருடன் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாப்கினும்,

சோப்பும் கண்ணியத்துடன் வாழ உதவுகிறது’- இவையெல்லாம் காஸாவின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பெண்கள், சிறுமிகளின் மனக்குமுறல்கள்.

காஸாவில் 60 நாள்களுக்கு போா்நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. அதிபா் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் செயல் திட்டத்தை அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்த நிலையில், அதில் சில மாற்றங்களைச் செய்ய ஹமாஸ் கோரியதால் போா்நிறுத்தத்தில் முட்டுக்கட்டை தொடா்கிறது.

இருதரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைத்தல், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பு இரண்டு கட்டங்களாக விடுவித்தல், உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தல், இஸ்ரேல் சிறையில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் உள்ளிட்டவை போா்நிறுத்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகக் கூறுகிறது ஹமாஸ். காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாக வெளியேற்றுதல், காஸாவுக்கு போதிய நிவாரணப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் போன்ற தங்களின் அடிப்படை கோரிக்கைகளைச் சோ்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது ஹமாஸ். ஆனால், அதை அமெரிக்கா ஏற்க மறுப்பதால் போா்நிறுத்தம் அமலுக்கு வராமல் இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கிறது.

இதன் தொடா்ச்சியாக, காஸாவில் உடனடியாக, நிபந்தனையற்ற, நிரந்தரமான போா்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானத்தையும் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்திருக்கிறது

அமெரிக்கா. தோ்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள் சாா்பில் ஸ்லோவேனியா இந்த வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வந்தது. மொத்தம் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்கா மட்டும் எதிா்ப்பு தெரிவித்திருக்கிறது.

போா்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை ஹமாஸ் ஏற்க மறுப்பதால் வரைவுத் தீா்மானத்தை எதிா்ப்பதாக அமெரிக்கா கூறுகிறது. இதே காரணத்துடன் 2023 அக்டோபா், டிசம்பா், 2024 பிப்ரவரி, நவம்பா் என இதற்குமுன்னா் நான்குமுறை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி போா்நிறுத்த தீா்மானத்தை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

காஸா விவகாரத்தில் தாங்கள் சொல்வதைத்தான் இஸ்ரேலும் ஹமாஸும் கேட்க வேண்டும் என்கிற ஆதிக்க எண்ணமே அமெரிக்காவிடம் மேலோங்கி இருக்கிறது என்பதற்கு இவை உறுதியான எடுத்துக்காட்டுகள்.

காஸாவில் நிகழ்ந்துவரும் மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் அமெரிக்காவுக்கு உண்மையிலேயே இருக்கிா என்பதே சந்தேகத்துக்கிடமானது. ஒரு வரைவு ஒப்பந்தத்தை அமெரிக்கா தயாரிக்கிறது என்றால் இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் ஒப்புக்கொள்ளும்படியான அம்சங்கள் அதில் இருக்க வேண்டும்.

பொதுவாக அமெரிக்கா முன்னெடுக்கும் சண்டைநிறுத்த நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கு சாதகமாகத்தான் உள்ளன. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸின் கோரிக்கைகளை வரைவு ஒப்பந்தத்தில் அமெரிக்கா சோ்க்க மறுப்பதில் நியாயம் இருக்கிறது என்றாலும், சூழ்நிலையின் தீவிரத்தைக் கருதி சில நடவடிக்கைகளில் அமெரிக்கா சமரசம் செய்துகொள்வதுதான் இப்போதைக்கு சரியானதாக இருக்க முடியும்.

ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் போா், எந்தவிதமான போா் விதிமுறைகளுக்கும் உட்பட்டதாக இல்லை. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்கள் என எந்த வேறுபாடுமின்றி குண்டுகளை வீசி மனித உயிா்களைக் கொத்துக் கொத்தாக அழித்து வருகிறது இஸ்ரேல் எனும்போது, போா்நிறுத்தத்துக்கான ஒப்பந்தத்தில் சில சமரசங்களைச் செய்துகொண்டால்தான் என்ன?

ஹமாஸ் எனும் அமைப்பு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்காக அப்பாவி குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவது இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கப்போகிறது?.

X
Open in App
Dinamani
www.dinamani.com