
குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், எந்த வகையான குற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்பது தொடர்பாகவும் தரவுகளைச் சேகரித்து, அவற்றைத் தடுக்க தேவையான முன்னெடுப்புகளை தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
1986-இல் உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது மாநில காவல் துறைக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கும். குறிப்பாக, குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள், குற்றங்கள் போன்றவற்றின் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பாக காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு வருகிறது தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையம். இதன் தொடர்ச்சியாக, மாநில அளவிலான குற்றப் பதிவேடுகள் ஆணையமும் அவற்றைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் விரல்ரேகைப் பதிவுகளைப் பெற்று, அதைப் பாதுகாக்க வேண்டும் என மாநில மற்றும் ஒன்றிய பிரதேச காவல் துறைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக குற்றச் செயலில் ஈடுபட்டு கைதானவரின் விரல் ரேகைகளைப் பெறுவதுடன், விழித்திரை, கருவிழிப் பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் தகவல்கள் சேமிக்கப்பட்டு, எதிர்காலத்தில் குற்றங்கள் தொடர்பாக பகுப்பாய்வு செய்து விரைவான நடவடிக்கைக்கு உதவும் எனக் கருதப்படுகிறது.
பயோமெட்ரிக் பதிவுகளைப் பெறும் முறை கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் 2022 இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது சோதனை அடிப்படையில் தில்லி, ராஜஸ்தானில் செயல்படுத்தப்படுகிறது. காவல் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரித்து சேமித்து, பகுப்பாய்வு செய்ய இந்தச் சட்டம் உதவுகிறது.
அந்த வகையில், நாட்டிலேயே முதல்முறையாக குற்றவாளிகளின் கருவிழிகளை ஸ்கேன் செய்து சேமிக்கும் பணியை தில்லி மற்றும் ராஜஸ்தான் மாநில காவல் துறை ஆகியவை தொடங்கியுள்ளன. மேலும், தடயவியல் திறன்களின் வரம்புகள் காரணமாக, ரத்த மாதிரிகளை எடுத்து டிஎன்ஏ}வை சேகரிக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு போன்றவை குறித்து சட்டம், விதிகளில் வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், மாநில காவல் துறைக்கும், அதன் கீழ் செயல்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் என நாடு முழுவதும் 1,300 இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தரவுகளைப் பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
விரல்ரேகைப் பதிவுகள் தொடர்புடைய குற்றவாளியின் வயதுக்கேற்ப மாறவும், ரேகைகள் மறையவும் வாய்ப்புள்ளது. மேலும், பலரின் விரல்ரேகைப் பதிவுகள் சரியாக இல்லாதது போன்ற காரணங்களால் குற்றத்தில் ஈடுபட்டவரைக் கண்டறிவதில் சிரமம் நிலவுகிறது. எனவேதான், இதை எளிதாக்கும் வகையில் விரல்ரேகைப் பதிவுகளுடன், விழித்திரை, கருவிழிப் பதிவுகளும் அவசியம் எனக் கருதியதால் இது தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.
டிஎன்ஏ விவரக் குறிப்புகளை சேமிப்பது தொடர்பாக தடயவியல் ஆய்வகங்களுடன் தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையம் ஆலோசித்துள்ளது. இதுதொடர்பான முடிவுகள் விரைவில் இறுதி செய்யப்படும். அதன் பிறகு, டிஎன்ஏ விவரங்களும் சேமித்து வைக்கப்படும். இதனால், குற்றங்களில் தொடர்புடையோர் விரைவாகக் கைது செய்யப்படுவதுடன், அந்தக் குற்றத்தில் அவர்களுக்கான தொடர்பையும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க டிஎன்ஏ வலுவான ஆதாரமாகத் திகழும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சில மாவட்டக் காவல் துறைகளில் மட்டும் விழித்திரை, கருவிழிப் பதிவை சேகரிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், டிஎன்ஏ தரவுகள் சேகரிக்கப்படவில்லை. பிற தரவுகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சேகரிக்கப்படுகின்றன. தில்லியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் அனைவரின் விழித் திரை, கருவிழிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி பேரின் விரல்ரேகைப் பதிவுகள் தனித்துவமான 10 இலக்க எண்களுடன் தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டனிலும் இந்த பயோமெட்ரிக் பதிவு நடைமுறையில் இருந்து வருகிறது.
2017-ஆம் ஆண்டில் தேசிய அளவில் காவல் துறைக்கான இணையவழி தளத்தை (போர்ட்டல்) தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையம் உருவாக்கியது. அதன் அடிப்படையில், தேசிய அளவிலான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த விவரங்களை காவல் துறை அதிகாரிகள் தேடும் வசதி முதலில் கொண்டுவரப்பட்டது.
அடுத்தகட்டமாக, பொதுமக்கள் இணையவழியில் புகார் அளிக்கும் வசதி உருவாக்கப்பட்டது. தற்போது, அது பல்வேறு படிநிலைகளைக் கடந்து நவீனத்துவம் பெற்று பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குற்றவாளிகளின் விரல்ரேகைகளைப் பதிவு செய்து சேமித்து, விரல்ரேகைகளின் தேசிய களஞ்சியமாக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக விழித்திரை, கருவிழிப் பதிவுகளும் சேர்ந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.