
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை எட்டியிருக்கிறது. தற்போது உலக அளவில் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஒரு காலத்தில், ஒருவேளை உணவுக்கே வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைமை இருந்தது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிமுகப்படுத்திய பசுமைப் புரட்சியால் இன்று நமது நாடு உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டியுள்ளது.
2023-24-ஆம் ஆண்டு வேளாண் பருவத்தில் சுமார் 14.46 கோடி மெட்ரிக் டன் உற்பத்தியுடன் உலகின் முன்னணி அரிசி உற்பத்தி நாடாக சீனா இருந்தது. இதே காலகட்டத்தில் இந்தியா சுமார் 13.78 கோடி மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.
2024-25-ஆம் ஆண்டு வேளாண் பருவத்தில் இந்தியாவில் சுமார் 14.90 கோடி மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் முன்னணி அரிசி உற்பத்தி நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
இதேபோல, 2024-25 பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி சுமார் 11.50 கோடி மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இது, முந்தைய 2023-24 பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 11.30 கோடி மெட்ரிக் டன் கோதுமை அளவைவிட அதிகமாகும். அதாவது, நமது நாட்டின் கோதுமை உற்பத்தி தற்போது 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2015-16-ஆம் ஆண்டின் வேளாண் கணக்கெடுப்பின்படி, சுமார் 14.60 கோடி பேர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்தது. அரிசி, கோதுமை உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றபோதிலும், இதற்குக் காரணமான விவசாயிகளின்ஆண்டு சராசரி வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயரவில்லை.
இவர்களது நிலையை ஓரளவேனும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தற்போதைய மோடி அரசு விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 தவணைகளாக விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 11 கோடி விவசாயிகள் நிதியுதவி பெறுகின்றனர்.
இதற்கு முன்னால் கடந்த 2008-ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் ரூ. 71,000 கோடி விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. வேளாண் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்கும், விவசாயிகளின் வருமானம் கணிசமாக உயர்வதற்கும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும், இவ்வாறு வேளாண்மையைக் கைவிடுபவர்கள் விவசாயம் சாராத தொழில்களில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மறைந்த மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
அதாவது, குறைந்த அளவு விவசாயிகள் மூலம் அதிக அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றைச் செயல்படுத்துவதன்மூலம் அவர்க ளின் வருமானம் அதிகரிக்கும் என்பது மன்மோகன் சிங்கின் தொலை நோக்கு சிந்தனை. அவரது இந்த எண்ணத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் இன்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் வேளாண்மையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தவர்களை அதிலிருந்து விடுவித்து, வேளாண் சாராத பிற தொழில்களில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அண்மையில் சமர்ப்பித்த அறிக்கைமூலம் இது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் வேளாண் சாராத தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 57.1 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு 78.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, புதுக் கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்மூலம் இந்தப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை விட, அது சாராத பிற தொழில்களைச் செய்பவர்களின் வருமானம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அரிசி, கோதுமை உற்பத்தியில் நமது நாடு இலக்கை விஞ்சி, தேவைக்கும் அதிகமாகவே கையிருப்பு வைத்துள்ளது. எனவே, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண் ணெய் வித்துகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்க வேண்டும். இதுபோன்ற அணுகுமுறைகளால் மட்டுமே ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.
அரிசி, கோதுமை உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து, பிற உணவு தானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடு வதற்குத் தேவையான மானிய உதவிகளையும், இடுபொருள்களையும் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இலக்குகளை மாற்றிக் கொண்டால் மட்டுமே விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். கைவிடப்பட்ட மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களை கலந்துரையாடல் மூலம் மீள்பார்வைக்கு உட்படுத்துவதில் தவறில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.