திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் ஆடுகளை குளிப்பாட்டிய விவசாயிகள்.
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் ஆடுகளை குளிப்பாட்டிய விவசாயிகள்.

மாசுபடும் தாமிரவருணி!

தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே நதி என்கிற சிறப்பு தாமிரவருணிக்கு உண்டு.
Published on

தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே நதி என்கிற சிறப்பு தாமிரவருணிக்கு உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சுமார் 128 கி.மீ. தொலைவு பயணித்து புன்னைக்காயல் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி அந்த மாவட்டத்திலேயே கடலில் கலந்த தாமிரவருணி இப்போது திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களில் தாகத்தை தீர்க்கும் நதியாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கர் விளைநிலங்கள் தாமிரவருணியால் பாசன வசதி பெறுகின்றன. விருதுநகர், தென்காசி உள்பட 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் அது விளங்குகிறது. தாமிரவருணியின் குறுக்கே சிறியதும், பெரியதுமாக மொத்தம் 12 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது மணிமுத்தாறு அணை. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 11 பிரதான கால்வாய்கள் மூலம் பாசனத்துக்காக பிரித்து அனுப்பப்படுகிறது.

பல்வேறு பெருமைகளைக் கொண்ட தாமிரவருணி ஆறு தொடர்ந்து மாசுபடுவது கவலை அளிக்கிறது. பாபநாசத்தில் தொடங்கி சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு தாமிரவருணி ஆற்றில் தன்னார்வலர்களால் அண்மையில் சுமார் 21 நாள்கள் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 120 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டன. புனிதத் தலமான பாபநாசத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளால் இந்தக் கழிவுகள் ஆற்றில் விடப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம்.

பொதிகை மலையில் உற்பத்தியாகி தாமிரவருணி பாபநாசத்தை எட்டும்போது பரிகாரங்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற சடங்குகள் அங்கே பக்தர்களால் செய்யப்படுகின்றன. காலம்காலமாக நடந்துவரும் இதற்கு எந்தத் தடையும் விதிக்கமுடியாது. அதுதான் தாமிரவருணி மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணமாக மாறி இருக்கிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியின்போது, 92.8 டன் ஈரத் துணிகள் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டன. 3.5 டன் கற்கள், 4,540 கிலோ நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், 1,720 கிலோ உலோகத் துண்டுகள், 580 கிலோ காலணிகள், 975 கிலோ கண்ணாடிகள், புகைப்பட சட்டங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், 1,800 கிலோ மண் பானை ஓடுகள், 3.5 டன்கள் உடைந்த தெய்வச் சிலைகள் , பெருமளவுக்கு தாவரக் கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டன.

இறந்தவர்கள் பயன்படுத்திவந்த பொருள்களை ஆற்றில் கொட்டுவது அவர்களின் ஆன்மா அமைதியடைவதை உறுதி செய்யும் என சில ஜோதிடர்கள் கூறுவதைப் பின்பற்றி, பலரும் இதுபோன்று ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர். பரிகாரச் சடங்குகளின் போது கழிவுகளைப் போடுவதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஆற்றங்கரையோரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தும்கூட பெரும்பாலான பக்தர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

ஆற்றில் வீசப்படும் துணிகள் நீரில் மிதந்து வரும்போது, அந்தப் பகுதியில் குளித்த சிலரின் கழுத்தில் இறுக்கி மூச்சுத் திணறி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் துணிகள் வீசப்படுவது தொடர்கிறது.

பரிகாரச் சடங்குகளின்போது ஆற்றங்கரைகளில் விடப்படும் புதிய துணிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. இருந்தாலும், பிற பொருள்கள் ஆற்றில் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை. பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு வசனங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதைத்தான் ஆற்றில் வீசப்படுவது அதிகரித்திருப்பது உணர்த்துகிறது.

தாமிரவருணியை மாசுபடாமல் பாதுகாக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. தாமிரவருணி கரைகளில் உள்ள முக்கிய நகரங்களில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள், சமூக சேவை அமைப்புகள் மூலம் அவ்வப்போது ஆற்றில் சேகரமாகும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் கடந்த ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கையடுத்து, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் 2024-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் திருநெல்வேலிக்கு வந்து தாமிரவருணி ஆற்றைப் பார்வையிட்டனர். 20 இடங்களில் ஆய்வு நடத்தி கழிவுநீர் கலப்பதை உறுதி செய்தனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தாமிரவருணி ஆற்றில் பாபநாசத்தில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியைப் பரிசோதித்ததில், அது கடுமையாக மாசுபட்டிருப்பதுடன் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரியவந்துள்ளது. நதியின் புனிதத்தை அங்கீகரிக்கும் மக்கள், அதை மாசுபடுத்தும் செயல்களைத் தவிர்த்தால் மட்டுமே வற்றாத ஜீவநதியான தாமிரவருணியைப் பாதுகாக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com