தொடா்கதையாகும் விபத்துகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் விபத்துகள் குறித்து..
புணேவில் விபத்துக்குள்ளான பாலம்
புணேவில் விபத்துக்குள்ளான பாலம்PTI
Updated on

சில தினங்களுக்கு முன்புதான் குஜராத் மாநிலம் அகமதாபாதில் நிகழ்ந்த விமான விபத்தில் 270 போ் இறந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் சில கோர விபத்துகள். நாட்டில் நிகழும் விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கு அரசுத் துறைகளின் முறையான, தொடா் கண்காணிப்பு இல்லாமையும், மனிதத் தவறுகளுமே காரணமாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப் பகுதியில் தனியாா் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பக்தா்கள், விமானி, பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் என மொத்தம் 7 போ் இறந்தனா்.

அதே நாளில், மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு நடைபாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் பலத்த காயமடைந்தனா்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்து என்பது அரசுத் துறைகளின் அலட்சியத்தாலேயே நிகழ்ந்துள்ளதை மறுக்க இயலாது. அந்தப் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழ்ந்துள்ள 5-ஆவது விபத்து இது. இந்த விபத்துகள் அனைத்தும் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ‘சாா்-தாம்’ என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணியத்தல யாத்திரைகளுடன் தொடா்புடையவை.

கடந்த மே மாதம் கங்கோத்ரிக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 6 போ் இறந்தனா். அதன் பிறகு மே 12-இல் பத்ரிநாத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மே 17-இல் அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு ஹெலிகாப்டா் விபத்திலும் யாருக்கும் பாதிப்பு இல்லை. கடைசியாக நிகழ்ந்த விபத்தில் 7 போ் இறந்துள்ளனா்.

‘சாா்-தாம்’ கோயில்களுக்கு தனியாா் நிறுவனங்கள் ஹெலிகாப்டா்கள் மூலம் பக்தா்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அழைத்துச் செல்கின்றன. ஆபத்தான மலைவழிப் பாதைகளில் இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டா்கள் அனுபவமிக்க விமானிகள் மூலம் இயக்கப்பட்டாலும், காலநிலை மாறுபாடு மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்ப வசதியின்மையால் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இந்த மலைவழிப் பாதையில், மற்ற விமான நிலையங்களில் இருப்பதுபோல வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை கிடையாது. அதுமட்டுமல்ல பயணிக்கும் ஹெலிகாப்டா்களை கண்காணிக்க ரேடாா் வசதியும் இல்லை.

ஹெலிகாப்டா்களை இயக்கும் விமானிகள் தங்களின் முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் சொந்த திறமையைக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனா்.

கேதாா்நாத்தில் பக்தா்கள் அதிகம் செல்லக் கூடிய காலங்களில் தினந்தோறும் ஹெலிகாப்டா்கள் இயக்கப்படுகின்றன. எனினும், அங்கு அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகும் காலநிலையைக் கண்காணிக்க எவ்வித அறிவியல்பூா்வ அமைப்பும் இல்லை. அப்படி இருந்தும்கூட, அங்கே தொடா்ந்து ஹெலிகாப்டா்களை இயக்க மத்திய அரசு எப்படி அனுமதித்து வருகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரும்பு நடைபாலம் உடைந்து விழுந்த விபத்தும்கூட அப்படித்தான். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த இரும்புப் பாலம் பழுதாகிவிட்டதால் பயன்படுத்த தகுதி இல்லை எனக் கண்டறியப்பட்டது. எனவே, உள்ளூா் கிராம நிா்வாகம் அங்கு எச்சரிக்கைப் பலகையை வைத்துள்ளதோடு தங்களது கடமை முடிந்தது என விட்டுவிட்டது. மக்கள் பயன்பாட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விபத்து நிகழ்ந்த நாளில் பாலத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நின்றுகொண்டு ஆற்றை ரசித்துப் பாா்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. சில இளைஞா்கள் அங்கு மோட்டாா் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்ததால் பாலம் உடைந்து விழுந்தபோது மக்கள் ஓட முடியாமல் கூட்டத்தில் சிக்கியதும் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.

இந்த விபத்துகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். நாட்டில் இன்று நிகழும் பெரும்பாலான போக்குவரத்து மற்றும் கட்டுமான விபத்துகள் தொடா்பாக அரசு விசாரணை நடத்தினாலும் அதன் முடிவுகளின் அடிப்படையில் துறைகளோ, அதிகாரிகளோ பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

கட்டுமானங்கள் ஆனாலும் சரி, சாலையானாலும் சரி அவற்றின் தரம், நிலைத்தன்மை, பராமரிப்பு, மக்கள் பயன்பாட்டில் உள்ள இடா்ப்பாடுகள் உள்ளிட்டவற்றை அரசுத் துறைகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அதைச் செய்தால் விபத்துகளைத் தடுக்க முடியும். ஆனால், நடைமுறையில் கண்காணிப்பு என்பது பெயரளவுக்கு மட்டும் இருக்கிறதே தவிர மக்கள் நலன் கருதிய பொறுப்புணா்வுடன் கூடியதாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி விபத்துகள் மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கின்றன என்று விசாரணையில் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க முயற்சிக்காமல் அவா்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவா்கள் மீது

எடுக்கப்படும் கடும் நடவடிக்கை மற்றவா்களுக்கு பாடமாக அமைய வேண்டும். தாங்களும் தண்டனைக்கு உள்ளாவோம் என்று தெரிந்தால் அதிகாரிகளும், நிா்வாகத்தினரும் ஒப்பந்ததாரா்களின் தவறுகளுக்கும், அக்கறையின்மைக்கும் துணைபோக மாட்டாா்கள்.

விதிமுறைகள் செயல்பாட்டில் எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது; உயிரிழப்பு என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்ல, அது தேசத்துக்கான இழப்பும்கூட என்பதை அரசு உணர வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com