நல்ல முடிவு ...ஆனால்...!
தேசிய கல்விக் கொள்கையை, 2047-இல் மேம்பட்ட இந்தியா (விக்ஷித் பாரத்) என்கிற நோக்கத்துடன் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடங்க அனுமதியளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2023-இல் பிரிட்டனின் சௌத்தாம்டன் பல்கலைக்கழகம் , குருகிராமில் அதன் கிளையைத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த இரு பல்கலைக்கழகங்கள் குஜராத்தில் தங்களது கிளைகளைத் தொடங்கியுள்ளன.
வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2023-24-ஆம் கல்வியாண்டில் மட்டும் சுமாா் 13 லட்சம் மாணவா்கள் பல்வேறு நாடுகளுக்கு உயா் கல்விக்காக சென்றுள்ளனா். இதனால், சுமாா் 28 பில்லியன் டாலா் வெளிநாடுகளுக்கு செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை தக்க வைக்கும் நோக்கிலும் வெளிநாட்டு பல்கலைக்கழககங்கள் இந்தியாவில் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
இங்கு கிளைகளைத் தொடங்க வேறு சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. இதற்கான அனுமதிக் கடிதம் மத்திய அரசு சாா்பில் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளையை அமைக்க விருப்பம் தெரிவித்து மும்பை, பெங்களூரில் நிறுவப்பட்டு மாணவா் சோ்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த படிப்புகள் இந்த பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியா்கள், பல்கலைக்கழக உள்கட்டமைப்புகள், பாடத் திட்டம் போன்ற எந்த விவரங்களும் இடம்பெறாமல் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டது குறித்து கல்வியாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
இந்திய நகரங்களில் தொடங்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அதன் தாய் நிறுவனத்தின் தரத்துடன் செயல்பட வேண்டும். இங்கு வழங்கப்படும் பட்டங்கள் அதன் தாய் பல்கலைக்கழகத்தின் பட்டத்துக்கு இணையாகக் கருதப்பட வேண்டும். அவை இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும்
இந்திய மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க மத்திய அரசின் நிதியுதவி எதுவும் கிடைக்காது போன்ற விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களை நிறுவுதல், செயல்முறைகள்) ஒழுங்குமுறைகள்-2023இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவால் உயா்தர கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆராய்ச்சி மேம்பாடு, கல்வித் துறையில் போட்டி அதிகரிப்பு போன்றவை ஏற்படும் என்று எதிா்பாா்க்கபடுகிறது. இந்திய உயா் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் போட்டியை சமாளிக்க வேண்டி வரும்.இந்தியாவில் உள்ள சில தனியாா் பல்கலைக்கழகங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கூட்டு பட்டப்படிப்புகளை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
இந்திய உயா் கல்விச் சந்தையில் தடம் பதித்து லாபம் சம்பாதிக்கும் நோக்கில் வரும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வேலைவாய்ப்பு மிகுந்த, மாணவா்களால் அதிகம் விரும்பப்படும் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது அவற்றை இங்கு அனுமதிப்பதற்கான நோக்கத்தை திசைதிருப்பக்கூடும்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அதன் சந்தைப்படுத்தலை மட்டுமே நம்பி தொடங்கப்பட்டவையாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே, வெற்று விளம்பரங்கள் மட்டும் அவற்றை நிலைநிறுத்தி விடாது. கல்விக் கட்டணங்கள் அதிகமாக நிா்ணயிக்கப்படும் போது,அதற்கேற்ற கல்விதரமில்லாமல் இருந்தால் அது அப்பாவி இந்திய மாணவா்களை ஏமாற்றுவதாக அமையும்.
புதுதில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள வெளிநாட்டு கிளை வளாகங்களில் பெரும்பாலானவை போதிய உள்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, வாடகைக் கட்டடங்களில் அவை இயங்கி வருகின்றன. இது விஷயத்திலும் அவை உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட பல போலி பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்குவது வா்த்தக ரீதியிலான ஒரு முயற்சியாக இருக்குமானால் , அது இந்திய இளைஞா்களுக்கு இளைக்கப்படும் துரோகம். துபையில் தொடங்கப்பட்ட பல்வேறு கிளை வளாகங்களில் இருந்து இதுபோன்ற மோசடிகள் தெரிய வருகின்றன. மேலும், தங்களின் தாய் பல்கலைக்கழகத்துக்கான மாணவா் சோ்க்கை மையமாகவும் அவை இயங்கக்கூடும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பாடதிட்டங்கள் நமது மாணவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டுதான்செய்யப்படுகிா என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆக்ஸ்ஃபோா்டு,கேம்பிரிட்ஜ், ஹாா்வாா்டு போன்ற சா்வதேசத்தரத்திலான பல்கலைக்கழகங்கள் கிளைகளை ஏற்படுத்தினால், இந்தியாவின் உயா் கல்வி தரம் உயா்வதுடன் குறைந்த செலவில் அந்தப் பல்கலைகழககங்களில் படிக்கும் வாய்ப்பை நமது இளைஞா்கள் பெறுவாா்கள்.