
நான்கு மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் எந்தவித வியப்பையும் ஏற்படுத்தவில்லை. கேரளம் தவிர ஏனைய அத்தனை மாநிலங்களிலும், கட்சிகள் தங்களது தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சிகள் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது வழக்கம்போல இந்த முறையும் நடந்திருக்கிறது.
கேரள மாநிலம் நிலம்பூர்; குஜராத்தின் விசாவதர், காடி; பஞ்சாபின் லூதியானா மேற்கு; மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்தன. அவற்றில் கேரளத்தின் ஆளும் இடதுசாரிக் கூட்டணி மட்டும்தான் தனது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. ஏனைய நான்கு தொகுதிகளும் அந்தந்தக் கட்சிகள் ஏற்கெனவே வென்ற தொகுதிகள்.
குஜராத்தில் இடைத்தேர்தல் நடந்த விசாவதர், காடி தொகுதிகளை முறையே ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. விசாவதர் தொகுதியின் உறுப்பினராக இருந்த பூபேந்திர பயானி, பதவி விலகி பாஜகவில் இணைந்ததால் இடைத்தேர்தல் நடந்தது. பூபேந்திர பயானியின் கட்சித்தாவல் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்கிற கனவு தகர்ந்திருக்கிறது. ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இதாலியா, பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.
குஜராத்தில் விசாவதர் தொகுதியில் மட்டுமல்லாமல் பஞ்சாபின் லூதியானா மேற்குத் தொகுதியையும் ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கும் புதிய நம்பிக்கையாக இந்த இடைத்தேர்தல் முடிவுகளைக் கருதலாம்.
குஜராத்தின் காடி தனித் தொகுதியை மாநில ஆளும் கட்சியான பாஜகவும், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. பாஜக உறுப்பினர் கர்சன் பாய் மறைவால் ஏற்பட்ட காடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சாவ்டாவை பாஜக வேட்பாளர் ராஜேந்திர சாவ்டா 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் நஸிருதீன் அகமது மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியை ஆளும்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போட்டியிட்ட ஆசிஷ் கோஷை 50,049 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது. இடதுசாரிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 28,348 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
மேற்கு வங்க அரசியலில் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸýம் முற்றிலும் வலுவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதும், எதிர்க்கட்சியான பாஜக ஆளும் திரிணமூல் காங்கிரஸýக்கு மாற்றாக வளர முடியவில்லை என்பதும் இடைத்தேர்தல் முடிவு தெரிவிக்கும் செய்தி.
குஜராத்திலும்கூட, காங்கிரஸôல் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. விசாவதர் தொகுதியில் மூன்றாவதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பரியா பெற்ற வாக்குகள் வெறும் 5,501 மட்டுமே.
கேரள மாநிலம் நிலம்பூர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல், வழக்கத்தைவிட இந்தமுறை முக்கியத்துவம் பெற்றது. ராகுல் காந்தியின் ராஜிநாமாவைத் தொடர்ந்து நடந்த வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றி பெற்றார். அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் நிலம்பூர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், மார்க்சிஸ்ட் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது. எப்படியும் நிலம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அமைச்சர்களும், கூட்டணி கட்சித் தொண்டர்களும் முனைந்து பணியாற்றியும் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
ஆர்யாடன் ஷெளகத்தை தனது வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலம் முஸ்லிம் லீக்கின் ஒத்துழைப்பை காங்கிரஸ் கட்சி உறுதி செய்தது. தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும், மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்பும் அனைவரையும் அரவணைத்து வகுத்த வியூகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று நிலம்பூர் வெற்றியைக் குறிப்பிடலாம். காங்கிரஸ் வேட்பாளர், ஆளும் இடது முன்னணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் எம்.ஸ்வராஜை 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.
எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தால் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்திருப்பார் என்கிற மலையாள ஊடகங்களின் கருத்தைப் புறந்தள்ள முடியாது. மதவாத எதிர்ப்பு கோஷமும், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடும், வெற்று விளம்பரங்களும் மட்டுமே ஆளுங்கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தி விடாது என்பதற்கு நிலம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டு.
வழக்கம்போல, இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வழக்கம்போல, கேரளம் விதிவிலக்காக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.