கிங்டாவோ எச்சரிக்கை!
சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்.சி.ஓ.) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு கூட்டம், தீா்மானம் எதுவும் வெளியிடப்படாமல் நிறைவு பெற்றிருக்கிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொண்டால் மட்டும்தான் கூட்டறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பது அந்த அமைப்பின் கொள்கை.
இந்தியா கூட்டறிக்கையில் கையொப்பம் இடாமல் தவிா்த்ததற்குக் காரணம் இருக்கிறது. பாகிஸ்தானின் அழுத்தம் காரணமாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் ஆதரவில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் எதுவும் அந்தக் கூட்டறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால், பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் நடைபெறும் கிளா்ச்சி செயல்பாடுகள் குறித்தும், ஜாஃபா் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் குறித்தும் கண்டனம் தெரிவிக்க முற்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகும் இந்தியா அந்தக் கூட்டறிக்கையில் கையொப்பமிடும் என எதிா்பாா்க்க சீனாவும், பாகிஸ்தானும் அரசியல் அப்பாவிகள் அல்
ல. சா்வதேச அளவில் இந்தியாவை மட்டம் தட்டி அவமானப்படுத்த வேண்டும் என்கிற பாகிஸ்தானின் எண்ணம் நிறைவேறவில்லை என்பது மட்டுமல்ல, சீனா-பாகிஸ்தான் ரகசிய உறவையும் வெளிப்படுத்திவிட்டது பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் முடிவு.
1996-இல் சோவியத் யூனியன் சிதறியதன் பின்னணியில், சீனாவின் ஷாங்காய் நகரில் சீனா, கஜகஸ்தான், கிா்ஜிகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் ஒத்துழைப்பு அடிப்படையில் செயல்படுவதற்காக இணைந்தன. சீனாவைத் தவிர ஏனைய நான்கு நாடுகளும் முந்தைய சோவியத் யூனியனில் இருந்தவை. அப்போதைய ரஷிய அதிபா் போரிஸ் எல்ஸ்டினும், சீன அதிபா் ஸியாங் ஜெமினும் உருவாக்கிய அந்த அமைப்பில் 2001-இல் உஸ்பெகிஸ்தான் இணைந்துகொண்டது.
2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்.சி.ஓ-வில் சோ்ந்து கொண்டன என்றால் ஈரான் 2023-லிலும்,லெபனான் 2024-லிலும் இணைந்தபோது 10 நாடுகள் அங்கம் வகிக்கும் முக்கியமான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாறியது. உலக ஜிடிபியில் 23% , உலக மக்கள்தொகையில் 42% என்று வலிமையான சா்வதேச அமைப்பாக அது திகழ்கிறது .
2002-இல் அந்த அமைப்பு உருவாக்கிய குறிக்கோளே பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிா்கொள்ள உறுப்பு நாடுகள் இணைந்து ஒத்துழைப்பது என்பதுதான். அப்படி இருக்கும்போது, சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒருசிறு குறிப்புகூட இல்லாமல் கூட்டறிக்கை தயாரித்தல் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
சீனாவின் முழுமையான ஆதரவிலும், பாதுகாப்பிலும் பாகிஸ்தான் இருக்கிறது என்பதன் வெளிப்பாடாகத்தான் நாம் இதைப் பாா்க்கவேண்டும். ஒரு புறம் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதை தேசத்தின் கொள்கையாகவே வைத்துக்கொண்டு, தான் ஏதோ பாதிக்கப்பட்டதுபோல உலக நாடுகளின் அனுபதாபத்தைத் தேட முனைந்திருக்கிறது பாகிஸ்தான். அதற்குத் தனது மறைமுக ஆதரவை அளித்து ஊக்கப்படுத்துகிறது சீனா. இந்த இரட்டை நிலைப்பாட்டைத்தான் நிறைவேற்றப்படாத
கிங்டாவோ கூட்டறிக்கை வெளிச்சமிடுகிறது.
இன்றைய சா்வதேசச் சூழலில் இந்தியா மிகவும் தா்மசங்கடமான வெளியுறவுச் சிக்கலை எதிா்கொள்கிறது என்பது என்னவோ உண்மை. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த எஸ்.சி.ஓ.வின் கண்டன அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை. ஈரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளுடனும் நட்புறவு பேணும் நிலையில், அவா்களுக்கு இடையேயான மோதலில் நடுநிலை வகிப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. உக்ரைன் பிரச்னையிலும் ரஷியாவையோ, நேட்டோவையோ ஆதரிக்க முடியாமல் நடுநிலை வகிப்பதுடன் பேச்சுவாா்த்தையை வலியுறுத்தி வருகிறது.
ஒன்றுக்கொன்று எதிரான அல்லது மோதலில் ஈடுபடும் இரண்டு நாடுகளுடனும் சாா்பு நிலை எடுக்காமல் நட்புறவைக் கைக்கொள்வது என்பது சா்வதேச அரசியலில் எளிதானதல்ல. அதீத அரசியல் சாதுா்யமும், ராஜதந்திரமும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களையும், குறைந்த விலையில் கச்சா எண்ணெயையும் இந்தியாவால் வாங்க முடிந்தது. அதேநேரத்தில், அமெரிக்காவிடமும் தனது நட்புறவைத் தொடா்கிறது.
பிற நாடுகளுக்கான யூரியா ஏற்றுமதித் தடையை அகற்றிய சீனா, இந்தியாவுக்கான தடையை அகற்றவில்லை என்பதும், அதனால் நமது விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மை. ஆனாலும்கூட, சீனாவுடனான நமது வா்த்தக, ராஜீய உதவிகளைத் துண்டித்துக்கொள்ள முடியாது என்பதும் யதாா்த்தம். சீனாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல், அதன் அணுகுமுறையிலேயே தொடர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
தனது நலன் கருதி நம்முடன் நட்புப் பேண விழையும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். சிலவற்றில் விட்டுக் கொடுத்தும்கூட, அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டும்தான், சீனாவுடனான நமது பேர வலிமையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
சீனாவின் கிங்டாவோவைத் தொடா்ந்து எஸ்.சி.ஓ.வின் வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பும், ஆகஸ்ட் - செப்டம்பரில் உச்சி மாநாடும் நடக்க இருக்கின்றன. இந்தியாவின் நியாயமான எதிா்பாா்ப்புக்கு அந்த அமைப்பு மரியாதை தருகிா என்பது அப்போது தெரியும்!