பொருளாதார ஆய்வறிக்கை!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் மரபைப் பின்பற்றி...
பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கை
Published on
Updated on
2 min read

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் மரபைப் பின்பற்றி, தமிழகத்திலும் முதல் முறையாக மாநில பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அப்போதைய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 2024-2025 நிதியாண்டில் 8 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக உள்ளதாக மாநில பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டின் ஜிடிபியான 6.50 சதவீதத்தைவிட அதிகம் என்பதையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

சுமார் 7 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தின் ஜிடிபி விகிதம், அதிக மக்கள்தொகையைக் கொண்ட பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றைக் காட்டிலும் மிக அதிகம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2022-23 நிதியாண்டில் இந்திய அளவில் தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1.69 லட்சம். ஆனால், தமிழகத்தில் இதே காலகட்டத்தில் தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2.78 லட்சமாக இருந்தது என்பது, திமுக அரசுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், தமிழகத்தின் ஜிடிபி விகிதம் (8 சதவீதம்) பிற மாநிலங்கள் மட்டுமல்லாது, சில நாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றும் சுயேச்சையான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களின் பங்களிப்பு 38.6 சதவீதம். ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் ஜிடிபி பங்களிப்பு 29.6 சதவீதம். மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் ஜிடிபி பங்களிப்பு 18.8 சதவீதம் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களின் ஜிடிபி பங்களிப்பு 15.1 சதவீதம் என்றும் மாநில பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் சமச்சீரான பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இதேபோல, மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளான காவிரி டெல்டா மாவட்டங்களிலும் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் திட்டங்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் சமூக நலத் திட்டங்கள், கல்வி, விளையாட்டுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை மாநில பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதாவது, 2019-20-இல் ரூ.79,859 கோடியாக இருந்த சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2023-24-இல் ரூ.1,16,000 கோடியாகவும், 2019-20-இல் ரூ.38,747 கோடியாக இருந்த கல்வி, விளையாட்டுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 2023-24-இல் ரூ.47,223 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல, மருத்துவம், பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைகளால், கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டில் பிற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய கண்காணிப்பு இல்லாமல் போனால், திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி விரயமாகிவிடும் ஆபத்து உள்ளதை உணர்ந்து அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இதேபோல, பருவநிலை மாற்றத்தால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களை தமிழகம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது என்றும், இதைச் சமாளிக்கவும் உறுதியான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் மாநில பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இது விஷயத்திலும் அரசு தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே, தனது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தின் கடன் வரம்பு அதிகரித்துக் கொண்டே போவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், தமிழகத்தின் ஜிடிபி விகிதத்தோடு ஒப்பிடுகையில், கடன் வரம்பு கட்டுக்குள் உள்ளதாக மாநில திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில் உள்ள எல்லா நாடுகளுமே கடன்கள் வாங்கித்தான் செயல்படுகின்றன. எனவே, கடன் வாங்குவதில் தவறில்லை, அந்தப் பணம் முறையாக செலவிடப்படுகிறதா என்பதில்தான் அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.

இதேபோல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏஐ) பயன்பாடு, தமிழகத்தின் ஜிடிபி விகிதத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை என்றும் ஜெயரஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார். ஏஐ பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளையும் தமிழக அரசு வெற்றிகரமாகச் சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com