முற்பகல் செய்யின்...

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை பற்றி...
முற்பகல் செய்யின்...
Published on
Updated on
2 min read

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் 2023-இல் நான்காவது இடத்தில் இருந்து, 2024-இல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதே பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, குவெட்டா ரயில் நிலையத்தில் கடந்த 2024 நவம்பர் 9 -ஆம் தேதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

பரப்பளவில் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலூசிஸ்தான் உள்ளது. எரிவாயு, தங்கம், மீன் வளம், தாமிர சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்கள் மிகுதியாக உள்ள பகுதி இது. இந்தப் பகுதியில் உள்ள குவாதர் துறைமுகம் மிகப் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள், துறைமுகம் இருப்பினும் உள்ளூர் மக்கள் அதனால் பெரிய அளவில் பயன் அடையவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.

பலூச் இன மக்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர். 1948-இல் கலாத் பகுதி வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டபோது, அதன் இளவரசர் அப்துல் கரீம் ஆயுதம் தாங்கிய புரட்சியில் ஈடுபட்டார். அப்போதுமுதல் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தப் பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தீர்மானம் நிறைவேற்றுவதையும், ஐ.நா. சபைக் கூட்டங்களில் தொடர்பே இல்லாதபோதும் குரல் எழுப்புவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள பாகிஸ்தான், பலூசிஸ்தானில் எதிர்ப்புக் குரல் எழுந்தால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்ப்பு இயக்கத் தலைவர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரைக் கடத்திக் கொன்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 1990-களில் ரஷியாவுக்கு எதிராக தலிபான்கள் போராடியபோது தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. தலிபானை பாகிஸ்தான் அரசு அங்கீகரித்தது. அதன் தலைவர்கள் தனது நாட்டில் இருந்து செயல்பட அனுமதியும் அளித்தது.

அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டில் உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் தலிபான்களுக்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததால் தலிபான்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.

பாகிஸ்தானில் இப்போதைய ஆட்சியை அகற்றிவிட்டு முழுவதும் ஷரியத் சட்ட அடிப்படையில் ஆட்சியை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட தெஹ்ரீக்- ஏ- தலிபான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு இப்போது ஆப்கன் தலிபான்கள் ஆதரவும், அடைக்கலமும் கொடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது என்றால், மறுபுறம் தெஹ்ரீக்- ஏ- தலிபான் அமைப்பும் அவ்வப்போது கடும் தாக்குதல்களை நடத்தி வருவது பாகிஸ்தான் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய அதிபர்கள்போன்று டிரம்ப் பொருளாதார ரீதியாக உதவுவாரா என்பது தெரியாத நிலையைப் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களும் பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

"நமது வீட்டில் பாம்புகளை வளர்த்துவிட்டு, அவை எதிரிகளை மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது' என்று பாகிஸ்தான் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் 2011-ஆம் ஆண்டு கூறியது இப்போதும் அந்த நாட்டுக்குப் பொருந்துவதாக உள்ளது. பொருளாதார நெருக்கடி போதாதென்று, பயங்கரவாதத்தையும் அரசியல் நிலையற்ற தன்மையையும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com