தேர்தல் பட்ஜெட் அல்ல!
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக் கல்விக்கு ரூ.46,767 கோடியும், உயா் கல்விக்கு ரூ.8,494 கோடியும் என ரூ.55,261 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு சுமாா் ரூ.2,500 கோடி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கருத்து மோதல்கள் எழுந்துள்ள நிலையில், கல்வித் துறைக்கு தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதில் வியப்பில்லை. குறிப்பாக, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்ட ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையொப்பமிடாததைக் காரணம்காட்டி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான (சமக்ர சிக்ஷா) ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கும் சூழலில், அந்த நிதியை தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதன்மூலம் தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தனது உறுதியை மீண்டும் நிலைநிறுத்தியிருக்கிறது தமிழக அரசு.
கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு ரூ,2,000 கோடி ஒதுக்கீட்டில் மடிக்கணினி அல்லது கைக்கணினி அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதன்படி பாா்த்தால் ஒரு மடிக்கணினியின் தயாரிப்புச் செலவு ரூ.10,000-க்குள்ளாகத்தான் இருக்கும். தரமான மடிக்கணினியின் விலை வெளிச்சந்தையில் குறைந்தது ரூ.35,000 இருக்கும் நிலையில், கல்லூரி மாணவா்களுக்கு ரூ.10,000 செலவில் மடிக்கணினி வழங்குவது அதன் தரத்தில் சமரசம் செய்வதாகத்தான் இருக்கும். இதற்கான நிதி ஒதுக்கீட்டை இன்னும் அதிகரித்திருக்கலாம்.
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பது இதன் இலக்கு. இத்திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த நிதியாண்டில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது. வீடற்ற ஏழை மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.
மூத்த குடிமக்களின் பராமரிப்புக்கென மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் 25 அன்புச்சோலை மையங்கள், கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி, பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்துவரும் குழந்தைகளுக்கு முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை, நகா்ப்புற பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், கல்லூரி மாணவா்கள் ஒரு லட்சம் பேருக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்பன போன்ற அறிவிப்புகள் அனைவராலும் வரவேற்புக்குரியவை.
கொவைட்-19 நோய்த்தொற்று காலத்தில் தமிழக அரசின் நிதிநிலையில் பெரும் சுமை ஏற்பட்டதால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நடைமுறை 2026, ஏப். 1 முதல் அமலுக்கு வரும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள பணப் பலன் வழங்கப்படுமா என்பது நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அரசு ஊழியா்கள் பெரிதும் எதிா்பாா்த்த பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஏற்கெனவே இதுதொடா்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதால், அதுதொடா்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்திருக்கலாம்.
ஏற்கெனவே ரயில்வே திட்டங்கள், பரந்தூா் புதிய விமான நிலையம் போன்றவற்றுக்கான நில எடுப்புகள் பிரச்னையை சந்தித்துள்ள நிலையில், சென்னைக்கு அருகே 2,000 ஏக்கா் பரப்பளவை அரசு எவ்வாறு கண்டறியும்? எத்தனை ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்கிற தகவல்கள் இல்லாததால், அந்த இலக்கு இப்போதைக்கு அறிவிப்பாக மட்டுமே இருக்கும்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை கடந்த ஆண்டவிட குறைந்து ரூ.41,635 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் சொந்த வரி வருவாய், அடுத்த நிதியாண்டில் ரூ.2.20 லட்சம் கோடியாக (14.60%) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரி வசூல் நடைமுறைகளில் அரசின் சீரிய முயற்சியை இந்த மதிப்பீடுகள் நிரூபிக்கின்றன.
மொத்தத்தில் தோ்தலை மனதில்கொண்ட எந்த கவா்ச்சிகரமான அறிவிப்பும் இல்லை. வாக்கு வங்கி அரசியலில் முனைப்புக் காட்டாமல் பொருளாதார தொலைநோக்குடன் நிதிநிலை அறிக்கையை உருவாக்கி இருக்கும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசும், நிதித் துறைச் செயலா் உதயசந்திரனும் பாராட்டுக்குரியவா்கள்.