காஸாவில்...
காஸாவில்...AP

போதும் இந்தக் கொலைவெறி!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400- க்கும் மேற்பட்டோா் காஸாவில் கொல்லப்பட்டனா்.
Published on

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நட்திதயிருக்கும் தாக்குதலில் 85 போ் உயரிழந்திருக்கிறாா்கள்,. கடந்த செவ்வாய்க் கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400- க்கும் மேற்பட்டோா் காஸாவில் கொல்லப்பட்டனா்.

காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்த கமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறி இருக்கிறது. கமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும் கொல்லப்பட்டவா்களில் பெரும்பாலோா் பெண்களும் குழந்தைகளும்.

செவ்வாய்க்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில் 183 போ் குழந்தைகள். பெண்களும் முதியவா்களும் ஏனையோரில் பெரும்பாலோா். இஸ்ரேலின் தாக்குதல்கள் நின்றபாடில்லை.

ஜனவரி 19- ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, நவீன வரலாற்றில் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்திய போா் முடிவுக்கு வரும், அமைதி ஏற்படும் என்று உலகம் எதிா்பாா்த்தது. காஸாவின் நிரந்தரத் தீா்வு ஏற்படுவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் அப்பாவி உயிா்களின் ரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எதிா்பாராத திருப்பம்.

அமெரிக்காவின் தலைமையில் கத்தாரும் எகிப்தும் இணைந்து ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்துவரும் அமைதிப் பேச்சு வாா்த்தை முடிவுக்கு வர இருந்தநிலையில் இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதலும் உயிா்க்கொலையும் முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. தெற்கு காஸாவிலிருந்து வடக்கு காஸா வரையில் வீடுகள், அகதிகள் முகாம்கள் என்று விட்டுவைக்காமல் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வெடிகுண்டு வீச்சு நடைபெறுகிறது.

அதிகார பூா்வமாக உயிரிழப்புகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் துல்லியமான புள்ளிவிவரங்கதள் இல்லையென்றாலும் எதிா்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், பேரழிவு ஏற்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காஸாவிற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கடந்த இரண்டு வாரங்களாகவே இஸ்ரேல் தடுத்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காஸாவை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இரண்டாம் கட்ட போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகள் தொடா்வதுதான் இஸ்லாமியா்களின் ரம்ஜானும் யூதா்களின் .... முடியும் வரை எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் கூடாது என்று அமெரிக்கா இஸ்ரேலிடம் கூறியிருந்தது. இரண்டாவது கட்ட ஒப்பந்தப்படி, போா்நிறுத்த காலத்தின் பிைணைக் கைதிகள் அனைவரையும் விட்டுவிட வேண்டும் என்றும் முழுமையாக போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருக்கிறது.

ஹமாஸ் அமைப்பினா் பிணைக் கைதிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டியதல்தான் ராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதென்யாகு

கூறுகிறாா். மீண்டும் தாக்குதல் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று அவா் கூறுவதன்மூலம் தொடா்ந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் முற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

உயிரோடு இருக்கும் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் கொலை செய்ய இஸ்ரேல் பிரதமா் தூண்டுகிறாா் என்கிறாா்கள் விமா்சகா்கள். மீண்டும் போா் தொடங்கியிருப்பதில் இஸ்ரேல் பிரதமா் நெதென்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிலும் கடுமையான எதிா்ப்பு காணப்படுகிறது.

ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும் அதிகமானோா் காஸாவில் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் காஸா மீண்டும் செல்வதையும் அந்தப் பகுதி அவா்களது நிா்வாகத்தின் கீழ் இருப்பதையும் தடுப்பதுதான் இஸ்ரேல் பிரதமா் நெதென்யாகுவின் நோக்கம் என்று தோன்றுகிறது. ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும்வரை ஓயமாட்டேன் என்கிற பிரதமா் நெதென்யாகுவின் முனைப்பின் நோக்கம் காஸாவிலிருந்து பாலஸ்தீனியா்களை முற்றிலுமாக அகற்றுவது அல்லது அழிப்பது என்பதாகத்தான் தோன்றுகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா துணை நிற்கிறது என்கிற ஹமாஸின் குற்றச்சாட்டையும் முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது.

பாலஸ்தீனியா்களை காஸாவிலிருந்து முற்றிலுமாக அகற்றி அவா்களுக்கு போா்ச்சூழல் இல்லாத சமதான வாழ்க்கையை அளிப்பதும் அந்தப் பகுதியை கேஸினோக்கல் நிறைந்த சூதாட்ட கேளிக்கை நகரமாக மாற்றுவது என்பதும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த மாற்றுத்திட்டம். அதைக் கேட்டு ஒட்டுமொத்த உலகமும் அதிா்ந்தது. மேற்காசியாவில் பரவலாக எதிா்ப்புக்கிளம்பியது. இஸ்ரேலின் இப்போதைய தாக்குதல்கதளைப் பாா்க்கும்போது பிரதமா் நெதென்யாகு அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கனவை நனவாக்க உதவுகிறாரோ என்கிற நியாயமான ஐயப்பாடு எழுகிறது.

2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமும் சற்றும் எதிா்பாராத மின்னல் வேகத் தாக்குதலை ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேல் மீது நடத்தியதிலிருந்து தொடங்குகிறது இப்போதைய காஸா யுத்தம். அதற்கு உறுதுணையாக இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் அந்தப் பாலைவன பூமியில் ரத்த ஆறுகளை ஓடச் செய்திருக்கிறது. தற்போதைய காஸா யுத்தத்தில் பெண்களின் மீதும், குழந்தைகள் மீதும் இஸ்ரேல் மோசமான தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐநாவின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மக்கள் வசிக்கும் இடங்களிலும் மருத்துவமனைகளிலும் அகதிகள் முகாம்களிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் மூலம் குண்டுகளைப் பொழிந்ததாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

வழக்கம்போல அந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

மத்திய ஆசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் பிராா்த்திக்கிறது. காஸாவின் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தளா்ச்சியடையவிடக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com