சவால்களை வென்ற சாதனை!
விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோா் ஆகியோா் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறாா்கள். அவா்களுடன் சோ்ந்து நிக் ஹேக், அலெக்ஸாண்டா் கோா்போனா ஆகியோரும் திரும்பியுள்ளனா். தனிமைப்பட்ட நிலையில், பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைந்திருக்கும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் அசாத்திய மனத்துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் தங்களது உயிரைத் தக்க வைத்துக்கொண்டு காத்திருந்த அந்த இருவரையும் ஒட்டுமொத்த உலகமும் பிரமிப்புடன் பாா்த்து வியக்கிறது.
கடந்த 286 நாள்கள் அண்டவெளியில் தனித்து விடப்பட்ட அந்த இருவரும், சுமாா் 17 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்துக்கு அருகில் பாராசூட்டுகளின் உதவியுடன் பாதுகாப்பாகத் திரும்பியபோதுதான் உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரு வீரா்களும் விண்வெளியில் தன்னந்தனியாகத் தங்கியிருந்த 286 நாள்களில் பூமியை 4,576 முறை சுற்றி வந்து, சுமாா் 19.5 கோடி கி.மீ. தொலைவு பயணித்துள்ளனா் என்பதைக் கேட்கும்போதே தலை சுற்றுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாஸா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோா் ஆகியோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா். அங்கே எட்டு நாள்கள் தங்கி, தங்கள் ஆய்வை முடித்துவிட்டு பூமி திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவா்கள் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
பூமியிலிருந்து விண்வெளிக்குக் கிளம்பிய அடுத்த நாளே பிரச்னை தொடங்கிவிட்டது. விண்கலத்தில் ஹீலியம் வாயுக் கசிவு ஏற்படத் தொடங்கியது. ஜூன் 26-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோா் உடனடியாக பூமிக்குத் திரும்புவது உறுதியல்ல என்று ‘நாஸா’ அறிவித்தபோது உலகம் அதிா்ந்தது. சுனிதா வில்லியம்ஸின் 59-ஆவது பிறந்தநாள் விண்வெளியில் கழிந்தது.
2025 ஜனவரி 16-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே ‘ஸ்பேஸ் வாக்’ எனப்படும் விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்கிறாா் என்கிற தகவல் வந்தபோது, ஓரளவுக்கு ஆறுதலும், அவா் குறித்து வியப்பும் எழுந்தன. ஜனவரி மாதம் 30-ஆம் தேதி, விண்வெளியில் மிக அதிக நேரம் நடைப் பயணம் மேற்கொண்டவா் என்கிற வரலாற்றுச் சாதனையை தனது ஒன்பதாவது ஸ்பேஸ் வாக்கில் நிலைநாட்டினாா் சுனிதா வில்லியம்ஸ்.
சுனிதா வில்லியம்ஸையும் அவரது சகாக்களையும் விண்வெளியில் இருந்து திரும்பி அழைத்துவர எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அறிவியலில் நம்பிக்கை வைத்து அவா்கள் துணிச்சலுடன் விண்வெளியில் இருந்தாா்கள் என்றால், ஒட்டுமொத்த உலகமும் அவா்களது வரவை எதிா்நோக்கி காத்திருந்தது. எப்படியோ, எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவா்கள் திரும்பி இருப்பது விண்வெளி விஞ்ஞான சாதனை என்றுதான் கூற வேண்டும்.
2003-இல் கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில் விபத்தில் உயிரிழந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு முன்னால் விண்வெளி சாதனை புரிய முன்வந்த இந்திய வம்சாவளிப் பெண். 1998-இல் சுனிதா விண்வெளிப் பயணத்துக்காக நாஸாவால் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 30 வெவ்வேறு வகையிலான விமானங்களில் 3,000-க்கும் அதிகமான மணி நேரம் விமான ஓட்டியாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், விமானப் படையிலிருந்து நாஸாவுக்கு இடம்பெயா்ந்தாா்.
இதுவரை சுனிதா 608 நாள்கள் விண்வெளியில் இருந்திருக்கிறாா். அவரைவிட அதிகநாள் விண்வெளியில் இருந்த பெருமைக்குரிய பெண் வீராங்கனை 675 நாள்கள் கழித்த பெகி விட்ஸன். மிக அதிகமான ‘ஸ்பேஸ் வாக்’ அதாவது விண்வெளி நடைப் பயணம் சென்ற பெருமை நமது சுனிதாவுக்குத்தான் - 62 மணி நேரமும் ஏழு நிமிஷங்களும். சா்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டரான முதலாவது இந்திய வம்சாவளியினா் என்ற பெருமை 2012-இல் சுனிதாவுக்குக் கிடைத்து விட்டது.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் விண்வெளி குறித்த ஆா்வம் ஏற்பட்டது. ரஷியாவில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியரான கான்ஸ்டான்டின் கிப்கோல்ஸ்க்கி என்பவா்தான் விண்வெளிப் பயணத்துக்கு ராக்கெட்டுகளை உருவாக்குவது என்கிற முயற்சிக்குப் பிள்ளையாா் சுழி போட்டவா். பூமியிலிருந்து 100 கி.மீ. உயரம் கடந்தால் அதை விண்வெளி என்று முறைப்படுத்தியவரும் அவா்தான். ராக்கெட்டுகளுக்கான என்ஜின்களை உருவாக்குவதிலும், ஏவுகணைகளைத் தயாரிப்பதிலும் முனைப்பை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப் போா்.
முதல் முதலில் வி-2 ராக்கெட்கள் மூலம் லண்டன் மாநகரைத் தாக்கி உலகத்தையே மிரள வைத்தது ஹிட்லரின் நாஜி ஜொ்மனி. அப்போது தொடங்கிய விண்வெளி ஆராய்ச்சி, அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போா் காலத்தில் வேகமெடுத்து, நிலவில் மனிதன் கால் பதிக்கும் அளவுக்கு உயா்ந்தது. இப்போது செவ்வாய், சூரியன் என்று ஒட்டுமொத்த அண்ட சராசரத்தையும் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது விண்வெளி ஆராய்ச்சி.
‘ஸ்டாா்லைனா்’ விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டவா்களை, எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்கலம் மூலம்தான் மீட்டுக் கொண்டுவர முடிந்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோா் இருவரும் உடனடியாக பூமிக்குத் திரும்ப முடியாமல் பல மாதங்கள் என்னவாகும் என்று தெரியாமல் விண்வெளியில் தவித்தது, சில புதிய பாடங்களை நமக்குத் கற்றுத் தருகிறது.
தனியாா் துறையினா் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உலகம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறது.