
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அமல்படுத்திய புதிய கொள்கை முடிவால், ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு எளிதாக கிடைத்து வந்த ஒரேயொரு வழிமுறையான நகைக் கடன் வசதிக்கும் தடை ஏற்பட்டிருக்கிறது.
ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் வங்கிகளிடமிருந்து எளிதாகக் கடன் பெறுவதற்கு, தங்களிடமுள்ள சொற்ப அளவிலான தங்க நகைகளை அடமானம் வைப்பதுதான் ஒரே வழிமுறை என்றாகிவிட்டது. தனியார் அடகுக் கடைகளில் வட்டி விகிதம் அதிகம் என்பதால், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றால், அதற்கான வட்டித் தொகையை மாதந்தோறும் முறையாகச் செலுத்தி வந்தால் போதும். ஓராண்டுக்குள் அசலை முழுமையாகச் செலுத்தி நகையை மீட்க முடியாவிட்டால், அதை உடனடியாக மறு அடமானம் வைக்கும் வசதி இதற்கு முன்னர் இருந்தது. தற்போது இந்த வசதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
அதாவது, புதிய விதிமுறையின்படி, ஏற்கெனவே நகையை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக திரும்பச் செலுத்திய ஒரு நாளுக்குப் பிறகே, அதே நகையை மறு அடமானம் வைக்க முடியும். இதனால், ஓராண்டுக்குள் கடன் தொகையை வட்டியுடன் முழுமையாகச் செலுத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அடகுவைத்த நகையை மீட்க முடியாமல் போனால், அடுத்த நாளே அதை ஏலம் விடுவதற்கான நடைமுறையை வங்கிகள் தொடங்கிவிடும் என்பது மிகப்பெரிய அவலம். வங்கியில் அடகுவைத்த நகையை மீட்பதற்கு தங்களிடம் பணம் இல்லாவிடில், தனியார் அடகுக்கடைக்காரர்களை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கடனாளிகள் இலக்காகியுள்ளனர்.
சாமானிய, அடித்தட்டு மக்களின் சிரமங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது என்பதல்லாமல் வேறென்ன?
சில லட்சம் ரூபாய் கடன் பெற்ற சாமானிய மக்களால் அந்தக் கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்து ஏலம் விடும் நடவடிக்கையை அரசுடைமை வங்கிகள் மேற்கொள்கின்றன. ஆனால், பெருநிறுவன கடனாளிகள் விஷயத்தில் வங்கிகள் இதேபோல பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வாராக் கடன்களாக ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி வங்கிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்களின் கடன்கள் என்பதுதான் உண்மை.
நமது நாடு சுதந்திரமடைந்தபோது வங்கிகள் அனைத்தும் தனியார்வசம்தான் இருந்தன. தனியார் வசமிருந்த பெரும்பாலான வங்கிகளின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காகவே அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். கிராமப்புறங்களில் இந்த வங்கிகளின் கிளைகள் பரவலாகத் திறக்கப்படவில்லை.
இந்தத் தனியார் வங்கிகளின் முறைகேடான செயல்பாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில், கடந்த 1969}ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 14 வங்கிகளை அரசுடைமையாக்கினார். தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் விளைவாக அவற்றின் சேவைகள் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கத் தொடங்கின.
சிறுதொழில் செய்பவர்களுக்கும் அரசுடைமை வங்கிகள் தாராளமாகக் கடனுதவி அளித்து வந்தன. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் கிராமப்புற மேம்பாட்டுக்கும் விவசாயத்துக்கும் சிறுதொழில்களுக்கும் குறு, சிறு தொழில்முனைவோருக்கும் அதிக அளவில் கடனுதவி வழங்கி பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய பங்கு வகித்தன.
வங்கித் துறையின் சேவை பரவலாக கிராமப்புறங்களில் சென்றடைந்த நிலையில் ஏனைய அரசுத் துறை நிறுவனங்களைப் போலவே அவற்றின் செயல்பாடுகளிலும் மெத்தனமும் முனைப்பின்மையும் அதிகரிக்கத் தொடங்கின. 1991}இல் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு பொருளாதார சீர்திருத்தத்தையும், அதன் நீட்சியாக தனியார்மயத்தையும் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பல தனியார் வங்கிகள் செயல்படத் தொடங்கின.
பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடக்கம், அரசின் மானிய உதவிகளைப் பெற வங்கிக் கணக்கு அவசியம் என்பது உள்ளிட்ட காரணங்களால், நமது நாட்டில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014}இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வங்கிச் சேவையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.
வங்கிச் சேவை என்பது அனைத்துத் தரப்பினருக்குமானது என்பதுடன் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது.
சாமானிய மக்கள் வங்கிச் சேவையில் நம்பிக்கை வைத்து தனியார் அடகுக் கடைக்காரர்களை புறக்கணித்து தங்களது அவசரத் தேவைகளுக்கு நகைகளை அடமானம் வைக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் தங்களது வாழ்க்கைச் செலவினங்களுக்காக வங்கிகளிடமிருந்து எளிதாக நகைக் கடன் பெறும் முந்தைய வழிமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. இது விஷயத்தில் ரிசர்வ் வங்கி கருணையுடன் செயல்பட வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு. பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.