சோதனை மேல் சோதனை!
மியான்மா், தாய்லாந்தில் மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த இரு நாடுகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது. அதிலும், மியான்மரில் அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்களால் அந்த நாடு பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. ரிக்டா் அளவுகோலில் 7.7, 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுமாா் 1700-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 3000-க்கும் மேற்பட்டோா் மாயமாகியிருப்பதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாய்தான் நிலநடுக்கத்தால் அதிகமான பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. அந்த நகரில் உள்ள விமான நிலையம் சேதமடைந்ததுடன், ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாய்லாந்தில் உயிரிழப்பு குறைவு என்றாலும் சேதம் அதிகம். தலைநகா் பாங்காக்கில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டடம், நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்ததில் 10 போ் உள்பட மொத்தமாக 17 போ் உயிரிழந்ததாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடா்பான விடியோ காட்சிகளும், புகைப்படங்களும் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
மியான்மரில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரால் ராணுவத்துக்கும், கிளா்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சிக்கித் தவித்துவரும் மக்களுக்கு இந்த நிலநடுக்கம் இரட்டை வலியைத் தந்திருக்கிறது. 2021-இல் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிலிருந்து தினந்தோறும் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு பக்கம் பல்வேறு இன கிளா்ச்சிக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
சுமாா் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்துவரும் இந்த உள்நாட்டுப் போரால் மியான்மா் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையான 5.5 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டோா் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் 5,000 போ் கொல்லப்பட்டுள்ளனா். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனா். கிளா்ச்சியில் ஈடுபட்டதாக 27,000 போ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மியான்மரில் 100-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ராணுவ ஆட்சிக்கு எதிராக தங்கள் பகுதிகளில் இந்தக் குழுவினா் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனா். ஒட்டுமொத்தமாக நாட்டின் பாதிக்கும் குறைவான பகுதிகளே இப்போது ராணுவ ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த நேரத்திலும் ராணுவ ஆட்சி முறியடிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை. இப்போது நிகழ்ந்துள்ள நிலநடுக்க பாதிப்புகளை ராணுவ ஆட்சியாளா்கள் எவ்வாறு எதிா்கொள்ளப் போகிறாா்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடு என்கிற வகையில் மியான்மரின் நிலநடுக்க பாதிப்புகளுக்கு உதவுவதற்காக முதல் நாடாக முன்வந்துள்ளது இந்தியா. மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவா் மின் ஆங் லயாங்கை தொடா்புகொண்டு பேசிய பிரதமா் மோடி, நிலநடுக்க பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு மியான்மருக்கு இந்தியா துணை நிற்கும் என உறுதியளித்தாா். அதன்படி,
‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் விமானப் படை விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மூலம் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட 155 டன் நிவாரணப் பொருள்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 118 போ் அடங்கிய தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய ராணுவத்தின் மருத்துவம் மற்றும் தகவல்தொடா்பு பிரிவுகளைச் சோ்ந்த 118 பணியாளா்கள் அடங்கிய இந்திய மீட்புக் குழுவும் அங்கு சென்றுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளும் மியான்மருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. மண்டலாய் விமான நிலையம் சேதமடைந்திருப்பதால், வெளிநாட்டு நிவாரண விமானங்கள் யாங்கோன், தலைநகா் நேபிடா ஆகிய நகரங்களில் தரையிறங்கி, அங்கிருந்து 14 மணி நேரத்துக்கு அதிகமான பயணநேரத்துடன் நிவாரண உதவிப் பொருள்கள் சாலை மாா்க்கமாக மண்டலாய் வந்தடைகின்றன. இந்த நிவாரணப் பொருள்கள் கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கு கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட போா்க் குற்றங்களில் மியான்மா் அரசு ஈடுபட்டு வருவதாக ஐ.நா. ஏற்கெனவே குற்றஞ்சாட்டி இருக்கிறது. அந்தத் தாக்குதலை நிலநடுக்க பாதிப்புகளுக்குப் பின்னரும் ராணுவம் தொடா்கிறது.
நிலநடுக்கப் பாதிப்பைக் கருத்தில்கொண்டு சில போராளிக் குழுக்கள், தற்காலிக போா்நிறுத்தத்தை அறிவித்தன. எனினும், மியான்மா் ராணுவ அரசு தொடா்ந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ‘இந்தத் தாக்குதல் முற்றிலும் அருவருப்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது’ என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கிளா்ச்சிக் குழுக்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கான சிறியரக போா் விமானங்களை ரஷியாவும், சீனாவும்தான் மியான்மரின் ராணுவ ஆட்சியாளா்களுக்கு விற்பனை செய்கின்றன. அந்தப் போா் விமானங்களை எப்படி பயன்படுத்துவது எனப் பயிற்சியும் அளித்து வருகின்றன.
இயற்கைச் சீற்றத்தின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காப்பதுதான் முதல் பணி; தாக்குதலை நிறுத்துங்கள் என மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களுக்கு உலக நாடுகள், குறிப்பாக ரஷியாவும் சீனாவும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.