

திரையரங்குகளுக்குச் சென்றுதான் திரைப்படங்களைக் காண முடியும் என்ற நிலை மாறி, தொலைக்காட்சிகள் மூலம் வீடுகளுக்கே அவை வரத் தொடங்கி, தற்போது கைப்பேசி, கையடக்கக் கணினியில் இணையத்தின் துணையுடன் அதைக் காணும் போக்கு அதிகரித்துள்ளது.
நாடகத் துறையின் அடுத்த பரிணாமமாக திரைத் துறை வளர்ந்தது. இதன் அடுத்தகட்டமாக சின்னத் திரை தொடர்கள், இணையத் தொடர்கள் பிரபலமாகத் தொடங்கியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு எளிதாக கிடைப்பதைப் பெருமையாகக் கருதும் அதேநேரத்தில், சில சிக்கல்களும் தலைதூக்கியுள்ளன.
திரைப்படங்களில் அதன் கதைக்களத்துக்கேற்ப வன்முறைக் காட்சிகள், அது தொடர்பான வசனங்கள் இடம்பெறுவதை திரையிடலுக்கு முன்பாக கண்காணிப்பதற்கு 1952}இல் அரசால் தொடங்கப்பட்ட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால், இணையத் தொடர்களுக்கு அதுபோன்ற அமைப்பு இல்லாதது பெருங்குறையாக இருக்கிறது. கதைக்கேற்ப வன்முறைக் காட்சிகள், போதைப் பொருள்கள் பயன்பாடு, குழந்தைகளுக்கு எதிரான காட்சிகள் போன்றவை காட்டப்படுகின்றன. இது அவற்றைக் காணும் சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்வேறு குற்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இணையத் தொடர்கள் எந்தவிதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. பல்வேறு ஒழுக்கக்கேடான காட்சிகளும், ஆபாச பேச்சுகளும் இடம்பெறுகின்றன. இதனால், இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதுடன், குடும்ப உறவுகளிலும் விரிசல்கள் ஏற்பட இணையத் தொடர்களும் காரணமாக அமைகின்றன.
திரைப்படங்கள் சக்திவாய்ந்த ஊடகம் என்பதில் ஐயப்பாடில்லை. அதன் ஊடாகக் காட்டப்படும் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன.
அதனால், வன்முறைக் காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உளவியல் வல்லுநர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை நிகழ்வுகளை உடல், வாய்மொழியாக அவர்கள் தங்களைச் சார்ந்தோரிடமும் வெளிப்படுத்துகின்றனர். இது வன்முறையைத் தூண்டாவிட்டாலும், அதிக அளவிலான வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களை உணர்ச்சிமிக்கவர்களாக மாற்றும் என்று உளவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற வன்முறைக் காட்சிகள் அதிகமிருக்கும் திரைப்படங்கள், தொடர்களை குழந்தைகள் பார்க்க பெற்றோர் அனுமதிப்பது கவலையளிக்கிறது. பெரியவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியவை எனச் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு சிறுவர்களையும் அனுமதிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைப்பேசி பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், செயலிகள் வாயிலாக ஓடிடி தளங்களில் நுழைந்து எதையும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி ஓடிடி வரை இன்று எல்லா எண்மத் தளங்களிலும் ஊடுருவியுள்ள இந்த வன்முறையை ஒழுங்குபடுத்தாவிட்டால் சமுதாய மதிப்பீடுகள், மனநலன் மற்றும் பொதுப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும்.
எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி வெளியாகும் ஆபாசம் நிறைந்த காணொலிகள்தான் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான மனநிலையை இளம் வயதினர் மத்தியில் ஊக்குவிக்கிறது என்று ஓடிடி தளங்களில் ஆபாசங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் போன்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அதில் திரைப்படத் துறை சார்ந்த அனுபவமிக்க நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆபாசப் பதிவுகளை இணையத்தில் வெளியிடும் முன் இந்த ஆணையம் அதைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவை கடந்த ஏப்ரல் 28}ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.ஜி. மாசி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், பன்னாட்டு ஓடிடி நிறுவனங்களுக்கும், எக்ஸ் கார்ப், கூகுள், மெட்டா இன்க் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ஓடிடி, சமூக வலைதளங்களில் வக்கிரம் மிகுந்த கருப்பொருள் இருப்பதாக விளக்கியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த சில வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ""மத்திய அரசு சட்ட வரம்புக்கு உட்பட்டு இதன் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அல்லது நிர்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓடிடி, தொலைக்காட்சிகளில் அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் கொண்ட படங்கள், தொடர்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். மேலும், அதிக அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்கள், பெற்றோரின் கண்காணிப்பு போன்றவையும் பலன்தரும்.
இணையத் தொடர்கள், விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியத்தை உருவாக்க வேண்டும். அதன் சான்றிதழைப் பெற்ற பிறகே இணையத் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி, தயாரிப்பாளர்களின் சுய தணிக்கையே சிறந்த நடவடிக்கையாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.