அரசியல் தலையீடு கூடாது!

சிறந்த மாணவர்கள் உருவாக வேண்டுமானால் சிறந்த பேராசிரியர்கள் அவசியம்.
அரசியல் தலையீடு கூடாது!
Published on
Updated on
2 min read

தமிழக அரசின் 22 பல்கலைக்கழகங்களில் தற்போது 12 பல்கலைக் கழங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப தெரிவுக் குழுக்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் உயர் கல்வித் துறையில் நீண்ட நாள்களாக காணப்பட்டு வந்த தேக்கநிலை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இவற்றில் 6 பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுக் குழுக்களை அமைத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட இருக்கின்றன.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும், இரண்டாவது கட்டமாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதம் எனக் கூறிய உச்சநீதிமன்றம். அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது விதியின்படி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் 8 -ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் மற்றும் பதவிநீக்கும் அதிகாரம் அரசு வசம் வந்துள்ளது.

துணைவேந்தர் பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்களைத் தெரிவு செய்ய இதுவரையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள், குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தெரிவுக்குழுவினர் ஒவ் வொரு பல்கலைக்கழகத்துக்கும் வரும் விண்ணப்பங்களிலிருந்து தகுதியான மற்றும் அனுபவம் பெற்ற மூன்று பேராசிரியர்களைத் தெரிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வர். அவர்களில் ஒருவரை துணைவேந்தராக அரசு நியமிக்கும்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் அரசியல் தலையீடு இல்லாமல்தான் இருந்தது. அப்படியே இலைமறைவு காய் மறைவாக நியமிக்கப்பட்டவர்கள்கூட, பதவிக்கு வந்த பிறகு தங்களின் அரசியல் சார்பு வெளியே தெரியாமல், குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாகச் செயல்பட்டனர். அதனால் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்துக்கும், கல்வித் தரத்துக்கும் பங்கம் ஏற்படாமல் இருந்தது என்பதுடன், தமிழக உயர் கல்வித் துறையின் தரமும் பாராட்டும்படியாக இருந்தது.

காலப்போக்கில் துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு என்பது வெளிப்படையான ஒன்றாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டியவர்கள், அமைச்சர்களின் உறவினர்கள், அன்றைய ஆளுங்கட்சியின் தீவிர விசுவாசிகள், வாக்கு வங்கியைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை ஜாதியினர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். தகுதியும், திறமையும், அனுபவமும், ஆர்வமும் கொண்ட நேர்மையான மூத்த பேராசிரியர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சீர்கேடுகள் தலைதூக்கத் தொடங்கின. தகுதி குறைவான பேராசிரியர்கள் நியமனம், தேவைக்கு அதிகமான நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் நிய மனம் போன்றவற்றால் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் குறைந்ததோடு நிதிப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. கோடிக்கணக்கில் வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருந்த பல்கலைக் கழகங்கள்கூட ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்போது அரசு அமைத்துள்ள தெரிவுக் குழுவினர் புற அழுத்தங்களுக்கும், அரசியல் தலையீடுகளுக்கும் இடம்கொடுக்காமல் தகுதி மற்றும் அனுபவத்துடன் நேர்மையான, நிர்வாகத் திற மையுள்ள, தலைமைப் பண்புமிக்க கல்வியாளர்களைத் தெரிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியது அவசியம். கடந்த கால அனுபவங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு துணைவேந்தர் நியமனத்துக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அவர்களில் ஒருவரை துணைவேந்தராக நியமிப்பதன் மூலம் தமிழக பல்கலைக்கழகங்கள் இழந்துவிட்ட தங்களது மரியாதையை மீட்டெடுக்க முடியும்.

சர்வதேச அளவில் திறமைசாலிகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் காணப்படும் நிலையில், நமது தமிழக பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை உருவாக்கும் அமைப்புகளாக மட்டுமே இருந்து விடக் கூடாது. மேலைநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு நிகரான கல்வித் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம். அதிக கட்டணம் கொடுத்து வெளிநாடுகளில் உயர் கல்விக்கு செல்லும் நமது மாணவர்கள் தமிழகத்திலேயே சர்வதேசத் தரத்திலான கல்வியைப் பெறுவதற்கு நாம் வழிகோல வேண்டும்.

சிறந்த மாணவர்கள் உருவாக வேண்டுமானால் சிறந்த பேராசிரியர்கள் அவசியம். நமது மாணவர்கள் உயர் கல்விக்கு வெளிநாடு செல்வதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து பேராசிரியர்களை நமது பல்கலைக்கழகங்களில் நியமிப்பதில்கூடத் தவறில்லை.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அறவே இல்லாமல் இருந்தால்தான் உச்சநீதிமன்றத்தில் போராடிப் பெற்ற தீர்ப்புக்கு மரியாதை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com