

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நாடுகளில் ஒரு கட்சி தொடர்ந்து 60 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வருகிறது என்றால், அந்தக் கட்சி மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது.
மலேசியாவின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூர் கடந்த 1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த பிறகு நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற 14-ஆவது பொதுத் தேர்தல் இது. அதேநேரத்தில், மலேசியாவின் ஆதிக்கத்தில் இருந்தபோதே, கடந்த 1948 முதல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தல்களையும் கணக்கில் கொண்டால், இது 19-ஆவது பொதுத் தேர்தலாகும்.
மொத்தம் 97 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சுதந்திரமடைந்த பிறகு சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும், அதாவது கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது என்பது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.
மொத்தம் சுமார் 60 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மிகச் சிறிய தீவு நாடுதான் சிங்கப்பூர். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 26,27,026 வாக்காளர்களில் 24,29,281 பேர் வாக்களித்தனர். அதாவது, சுமார் 92 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
தொழில்நுட்ப ரீதியாக சிங்கப்பூர் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடைபெற்றது. மிகக் குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட நாடு என்பதால், சிங்கப்பூரில் இன்னமும் வாக்குச் சீட்டு முறையிலான தேர்தல்தான் நடைபெறுகிறது.
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர்ப் பதற்றம் காரணமாக உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்றும், இது சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்றும் கருதப்பட்டது. இந்தப் பின்னணியில், சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை ஆளும் பிஏபி கட்சிக்கு தொழிலாளர் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி பெரும் சவாலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு, அனைத்துத் துறைகளிலும் சிங்கப்பூர்வாசிகள் அல்லாத பிற நாட்டவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களைக் கைப்பற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, சிங்கப்பூர் மக்கள் மீண்டும் பிஏபி கட்சியையே தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதை மறுப்பதற்கில்லை. பிஏபி கட்சித் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையால்தான், உலக அரங்கில் சிங்கப்பூர் பொருளாதார வல்லமைமிக்க நாடாகத் தொடர்ந்து நீடிப்பதாக அந்த மக்கள் நம்புகின்றனர். இதுதான் பிஏபி கட்சியின் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
சிங்கப்பூர் பிரதமராக 20 ஆண்டுகளாக பதவியில் நீடித்த பிஏபி கட்சியின் மூத்த தலைவர் லீ சியன்லூங் கடந்த ஆண்டு, மே மாதம் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற லாரன்ஸ் வாங் தலைமையில் பிஏபி கட்சி எதிர்கொண்ட முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
இந்தத் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பிஏபி கட்சி மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வாங் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த மகத்தான வெற்றியின் மூலம், பிஏபி கட்சி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளதாகவும், அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பிஏபி கட்சி தொடர்ந்து அயராது பாடுபடும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிஏபி கட்சி ஆட்சியில் நீடித்து வருவதால், மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காமல் அந்தக் கட்சி சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணித்துவிட்டதையே இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், சிங்கப்பூர் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால், இதைச் சமாளித்து பிஏபி கட்சியால் மட்டுமே ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்த முடியும் என மக்கள் நம்பியதால்தான் அந்தக் கட்சியால் இந்த அளவுக்கு அமோக வெற்றியைப் பெற முடிந்துள்ளது.
ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படக் கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. ஸ்திரமான அரசால் மட்டுமே எந்தவொரு நிலைமையையும் உறுதியுடன் சமாளிக்க முடியும் என்ற வாக்காளர் மனநிலையின் வெளிப்பாடுதான் பிரதமர் லாரன்ஸ் வாங்கின் வெற்றி.
சிங்கப்பூரின் நிலையான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள பிஏபி கட்சி ஆட்சியில் தொடர வேண்டும் என அந்த நாட்டு மக்கள் தெளிவான தீர்ப்பளித்துள்ளனர். கனடாவையும், ஆஸ்திரேலியாவையும் தொடர்ந்து இப்போது சிங்கப்பூரிலும் ஆளுங்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.