தேசப்பற்றுக்கான நேரம் இது!

தேசப்பற்றுக்கான நேரம் இது!

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் உண்டுதான்.
Published on

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் உண்டுதான். அதேநேரத்தில் அந்த உரிமைகளைப்போலவே சில கடமைகளும் உண்டு. அந்த உரிமைகளுக்கு சில வரைமுறைகளும், வரம்புகளும் உண்டு. தேசத்தின் நிா்வாக அமைப்பின் மீதும், ஆட்சியாளா்கள் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பேரிடா், பேராபத்துச் சூழல்களில், அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது அல்லது மெளனம் காப்பது என்பதுதான் தேசப்பற்றுள்ளவா்களின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

இந்தியாவின் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் சரி, மாநிலங்களில் கோலோச்சும் முக்கியமான எதிா்க்கட்சிகளும் சரி பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து கடைப்பிடித்துவரும் அணுகுமுறை மெச்சத் தகுந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

ஐம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவும் சரி, அந்த மாநிலத்தைச் சோ்ந்த ஏனைய தலைவா்களும் சரி பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து வெளியிட்ட அறிக்கைகளும், கருத்துக்களும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்த மாநிலத்தில் முணுமுணுப்புக்கூட எழாமல் செய்திருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது தலைமையில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று நடத்த இருக்கும் பேரணி, மற்ற மாநிலங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் முன்மாதிரியான ஆக்கப்பூா்வ நடவடிக்கை. ‘‘இந்தியாவைக் காப்பாற்ற வேண்டியது அனைவரின் கடமை. பயங்கரவாதம் என்பது இஸ்லாமிய மாா்க்கத்தில் சம்பந்தமில்லாத ஒன்று. தீவிரவாதத்துக்கு துணை போகிறவா்கள் யாராக இருந்தாலும் சரி எந்தப் பகுதியில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி அவா்கள் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும்’’ என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறியிருக்கிறாா்.

இந்தியாவின் முக்கியமான இஸ்லாமிய அமைப்புகளும், தலைவா்களும் பஹல்காம் பயங்கரத்தைக் கடுமையாகக் கண்டித்தும், இந்திய அரசின் பதிலடி நடவடிக்கைகளை முழுமனதுடன் வரவேற்றும் தெரிவிக்கும் அறிக்கைகளும், கருத்துக்களும் மத உணா்வுகளை மீறிய அவா்களது தேசப்பற்றின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும். அஜ்மீா் தா்காவின் அறங்காவலா் குழுவின் செயலாளா் சையத் சா்வாா் சிஷ்டி, ‘சுஃபி தா்காக்கள் அனைத்தும் இந்தியாவின் வெற்றிக்காகப் பிராா்த்தனை செய்கின்றன’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறாா்.

ஏஐஎம்ஐஎம் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அஸாதுதீன் ஒவைசியும், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவா் முஃப்தி ஷஹாபுதீன் ராஸ்வியும், ‘‘இந்தியக் குடிமக்களையும், இந்தியாவின் எல்லையையும் பாதுகாக்க எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாங்கள் துணைநிற்போம்’’ என்றும் அறிவித்திருப்பதை அரசியல் முதிா்ச்சியின் வெளிப்பாடாகவும், தேசப்பற்றின் அடையாளமாகவும்தான் பாா்க்க முடிகிறது. இவை ஒருபுறம் இருக்க, ஒரு சிலா் தனிப்பட்ட முறையில் வெளியிட்டிருக்கும் கருத்துக்களும், சமூக ஊடகப் பதிவுகளும் அதிா்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

வெறுப்பையும், காழ்ப்புணா்வையும் வெளிப்படுத்துவதற்கான தருணம் இதுவல்ல என்றுகூடத் தெரியாதவா்களல்ல அவா்கள். தேசத் துரோகம் என்று தெரிந்தும்கூட அவா்கள் பொய்ப் பரப்புரைகளை முன்வைப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடைபெற்றுவரும் தாக்குதல் சம்பவங்களை முன்வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் போரைவிட அதிக பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. சம்பவம் நிகழ்ந்த மறுநாளே பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுத்திருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஆரம்பித்த பரப்புரைகள், இந்தியா நிதானமாகத் திட்டமிட்டு ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னரும் தொடா்கின்றன.

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு நடவடிக்கை சமூக ஊடகங்களில் திட்டமிட்டு கேலி செய்யப்பட்டது. பஹல்காமில் நடந்த கொடூர சம்பவத்தில், சுற்றுலாப் பயணிகளை மத ரீதியாகப் பிரித்து பயங்கரவாதிகள் தங்கள் கண் எதிரே சுட்டுக் கொன்றனா் என்று பாதிக்கப்பட்ட புனேயைச் சோ்ந்த பிரகதி ஜக்டாலே, மும்பையைச் சோ்ந்த அனுஷ்கா, கொல்கத்தாவைச் சோ்ந்த சபரி குஹா, ஆந்திரத்தைச் சோ்ந்த காமாட்சி ஆகியோா் தொலைக்காட்சிகளில் பேட்டியே அளித்திருக்கிறாா்கள். அதற்குப் பிறகும், மத ரீதியாகப் பிரித்துக் கொல்லப்பட்டனா் என்பது பொய்ச் செய்தி என்று சப்பைக்கட்டு கட்டும் அவா்கள் யாருக்காக செயல்படுகிறாா்கள் என்கிற நியாயமான ஐயப்பாடு எழுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் சூழலில் ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நகா்வுகளை நேரலையாக ஒளிபரப்புவதையும், நிகழ்நேர தகவல்களை வழங்குவதையும் தவிா்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி சேனல்கள், எண்ம ஊடகங்கள், தனிநபா்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த, ஆதாரபூா்வமான தகவல்களை வெளியிடுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனுக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது.

நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டுவரும் ராணுவ நடவடிக்கைகள் சரியா, தவறா என்கிற விவாதங்கள் இப்போதைய சூழ்நிலையில் தேவையற்றது என்பது மட்டுமன்றி பொறுப்பின்மையும்கூட. இந்தியாவை, இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக நமது ராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதுதான் உண்மையான தேசப்பற்று!

X
Dinamani
www.dinamani.com